Published:Updated:

`25 பேர் இருந்தும் 11 வாக்குகள்தான் கிடைத்தன' -வேதனையை வெளிப்படுத்திய ஸ்டாலின்! #RKNagar

`25 பேர் இருந்தும் 11 வாக்குகள்தான் கிடைத்தன' -வேதனையை வெளிப்படுத்திய ஸ்டாலின்! #RKNagar
`25 பேர் இருந்தும் 11 வாக்குகள்தான் கிடைத்தன' -வேதனையை வெளிப்படுத்திய ஸ்டாலின்! #RKNagar

ஆர்.கே.நகர் தேர்தல் தோல்விகுறித்து மனம் திறந்துள்ளார், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.

தமிழகமெங்கும் ஊராட்சி சபை கூட்டங்களை நடத்திவருகிறது தி.மு.க. தருமபுரியில் நேற்று நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டார். முன்னதாக, தருமபுரி மாவட்ட பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி வாக்குச் சாவடி .முகவர்களுடன் அவர் கலந்தாலோசித்தார். அப்போது, தி.மு.க பூத் கமிட்டி உறுப்பினர்களிடையே பேசிய அவர், ``பூத் கமிட்டி உறுப்பினர்கள் என்ன நோக்கத்திற்காக நியமிக்கப்பட்டார்களோ, அதற்கான பணியைச் செய்திட வேண்டும். 

நம் பணி என்ன என்பதை உணர்ந்து அதனைச் செய்ய வேண்டும். ஆர்.கே.நகர் தோல்விகுறித்து கட்சி சார்பில் ஆய்வு நடந்துவருகிறது" என்று பேசிய அவர், ``ஆர்.கே.நகரில் குறிப்பிட்ட ஒரு வார்டில் மட்டும் 11 பேர் மட்டுமே தி.மு.க-வுக்கு வாக்களித்தனர். ஆனால், அந்த வார்டில் தி.மு.க பூத் கமிட்டி உறுப்பினர்களின் எண்ணிக்கை மட்டுமே 25 பேர். 25 பேர் இருந்தும் 11 வாக்குகள்தான் கிடைத்தன. இந்த மாதிரியான செயல் நம் இயக்கத்தையே ஏமாற்றக்கூடிய செயல்" எனக் கூறினார். 

 அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளுக்கு உட்பட்ட  செட்ரப்பட்டி, மூக்கனூர் பகுதிகளில் நடந்த  ஊராட்சி சபை கூட்டங்களில் பேசிய ஸ்டாலின், ``உலகத்தில் மோடி ஊழல் செய்கிறார் என்றால்; உள்ளூரில் ஊழல் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி. மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள ஊழல் ஆட்சிகள் அகற்றப்பட வேண்டும். தி.மு.க-வுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளனர். காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, ஏழைகளுக்காக அறிவித்துள்ள குறைந்தபட்ச வருமானத்துக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய திட்டம், வறுமை ஒழிப்பில் ஒரு மைல்கல்லாக இருக்கும்" என்று கூறினார்.