Published:Updated:

``நான் தமிழர்கள் குறித்தே பேசவில்லை!''- ம.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட பெண் நிர்வாகி மறுப்பு

எம்.குமரேசன்
``நான் தமிழர்கள் குறித்தே பேசவில்லை!''- ம.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட பெண் நிர்வாகி மறுப்பு
``நான் தமிழர்கள் குறித்தே பேசவில்லை!''- ம.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட பெண் நிர்வாகி மறுப்பு

மீபத்தில் சமூகவலைதளங்களில்' தமிழர்கள் வந்தேறிகள்' என்று ம.தி.மு.க நிர்வாகி ஒருவர் பேசியதாக வீடியோ ஒன்று வெளியானது. விசாரித்த போது, கோவையில் கடந்த  27-ம் தேதி நடந்த சமுதாய மாநாடு ஒன்றில் பங்கேற்ற ம.தி.மு.க பெண் நிர்வாகி தவமணி வெங்கட் இப்படிப் பேசியதாகச் சொல்லப்பட்டது. இதனால் ம.தி.மு.க நிர்வாகி தவமணிக்குக் கடும் கண்டனம் எழுந்தது. தவமணியின் பேச்சுக்குக் கவிஞர் தாமரை உள்ளிட்டோர் ஃபேஸ்புக் பதிவு வழியாக கடும் கண்டனம் தெரிவித்தனர். 

`சாதி மாநாட்டில் கலந்துகொண்டு சாதி சாயத்தைக் காட்டியதாகவும் போதாக்குறைக்குத் தெலுங்கிலேயே பேசி தமிழர்களை அவமதித்துள்ளார் ' என்றும் கவிஞர் தாமரை குற்றம்சாட்டியிருந்தார். தவமணி மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ம.தி.மு.க தலைமைக்குப் பலரும் வேண்டுகோள் விடுத்தனர். இந்நிலையில், தவமணி ம.தி.மு.கவிலிருந்து அனைத்துப் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்படுவதாக ம.தி.மு.க அறிவித்துள்ளது. 

இது குறித்து தவமணியைத் தொடர்பு கொண்டு பேசியபோது, ``இந்த நாட்டில் யாருமே வந்தேறிகள் கிடையாது. மொழி வாரியாக 1950-ம் ஆண்டுதான் பிரிக்கப்பட்டது. `தமிழர்கள் லெமுரியா கண்டத்திலிருந்து வந்தவர்கள்' என்று எந்த இடத்திலும் பேசவில்லை. நான் தெலுங்கில் பேசியதால் திரித்து சொல்லப்பட்டுவிட்டது. தமிழர்கள் என்கிற வார்த்தையை நாள் பயன்படுத்தவே இல்லை. பெண் என்பதற்காக என் மீது திட்டமிட்டு சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புகிறார்கள். கடந்த 5, 6 நாள்களாக வெளியே சொல்ல முடியாத அளவுக்கு அவமானப்படுத்தினார்கள். 22 ஆண்டுகளாகப் பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறேன். எனக்கே இந்த நிலை என்றால் சாதாரண பெண்கள் நிலையை என்னவென்று சொல்வது. நான் அப்படியே பேசியிருந்தாலும் கருத்துரீதியாகத்தான் என்னிடம் பேச வேண்டுமே தவிர என்னை மனரீதியாகச் சித்ரவதை செய்வது எந்தவிதத்தில் நியாயம். என்னைப் பற்றி அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை கமிஷனர் அலுவலகத்திலும் சைபர் கிரைம் பிரிவிலும் புகார் கொடுத்துள்ளேன்'' என்று பதிலளித்தார். 

`நீங்கள் அப்படிப் பேசவில்லையென்றால் உங்கள் கட்சி விசாரிக்காமல் எப்படி உங்கள் மீது நடவடிக்கை எடுத்தது?' என்ற கேள்வியை முன்வைத்த போது, ``ஒரு சமுதாய மாநாட்டில் பங்கேற்றதற்காக கட்சி இந்த முடிவை எடுத்திருக்கலாம். ம.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்டது எங்கள் தலைமை எடுத்த முடிவு. ம.தி.மு.க ராணுவம் போன்ற கட்டுப்பாடு மிக்கது. தலைமையின் உத்தரவுக்குக் கட்டுப்படுவேன். இது தொடர்பான வழக்கில் வெற்றி பெற்று என் மீது எந்த தவறும் இல்லை என்று நிரூபிப்பேன் '' என்றார்