Published:Updated:

`வேலூர் - திருவண்ணாமலை அ.ம.மு.க-வில் அதிருப்தி!’ - வேறு கட்சிக்குத் தாவும் தினகரன் ஆதரவாளர்கள்

`வேலூர் - திருவண்ணாமலை அ.ம.மு.க-வில் அதிருப்தி!’ - வேறு கட்சிக்குத் தாவும் தினகரன் ஆதரவாளர்கள்
`வேலூர் - திருவண்ணாமலை அ.ம.மு.க-வில் அதிருப்தி!’ - வேறு கட்சிக்குத் தாவும் தினகரன் ஆதரவாளர்கள்

அ.ம.மு.க-வில், மண்டலப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தகுதி நீக்க எம்.எல்.ஏ ஒருவரின் தனிப்பட்ட செயல்பாடுகளால் அதிருப்தியடைந்த, வேலூர் மற்றும் திருவண்ணாமலையைச் சேர்ந்த தினகரன் ஆதரவாளர்கள் ஏராளமானோர், வேறு கட்சிகளில் இணைய முடிவெடுத்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், சோளிங்கர், குடியாத்தம் ஆகிய மூன்று தொகுதி எம்.எல்.ஏ-க்களின் பதவி பறிக்கப்பட்டதால், அத்தொகுதிகள் இடைத்தேர்தலைச் சந்திக்கத் தயாராகிவருகிறது. அ.தி.மு.க மற்றும் தி.மு.க-வினர் ‘பூத்’ கமிட்டிகளை அமைத்து, தேர்தலை எதிர்கொள்ள வியூகங்களை அமைத்து வருகிறார்கள். இந்த நிலையில், அ.தி.மு.க - தி.மு.க-வுக்கு சவால்விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட அ.ம.மு.க-வில் கோஷ்டிப் பூசல் வெடித்துள்ளது. வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருக்கும், தகுதி நீக்க எம்.எல்.ஏ-க்களில் ஒருவரான சோளிங்கர் பார்த்திபன், பாராளுமன்றத் தேர்தல் மண்டலப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் இவரின் கட்டுப்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ளன. பார்த்திபனின் ஒரு சார்புடைய பாகுபாட்டால், இரண்டு மாவட்டங்களிலும் உள்ள நிர்வாகிகள் பலரின் பதவிகள் பறிக்கப்பட்டு, அவர்கள் ஓரம்கட்டப்பட்டுள்ளனர்.

சமீபத்தில், வேலூர் - திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் பலர், அ.தி.மு.க மற்றும் தி.மு.க-வில் இணைந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் அ.ம.மு.க-வைச் சேர்ந்தவர்கள். பார்த்திபன் மீதான அதிருப்தியில் மீண்டும் தாய் கழகத்துக்கும் தி.மு.க-விலும் இணைந்து கொண்டதாக அவர்கள் தெரிவித்தனர். திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த ஏழுமலையின் பதவியும் பறிக்கப்பட்டு, அவர் பத்தோடு பதினொன்றாக அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஏழுமலையின் வளர்ச்சியைப் பிடிக்காமல், மண்டலப் பொறுப்பாளர் பார்த்திபன்தான், அவரின் பதவியைப் பறித்ததாகக் கொந்தளிக்கிறார்கள் அதிருப்தியாளர்கள். ‘‘எது எப்படியோ... பார்த்திபனின் ஒருதலைபட்ச செயல்கள், ஆத்திரமூட்டுவதால் பாராளுமன்றத் தேர்தல் அல்லது சட்டமன்ற இடைத்தேர்தலுக்குள், இரு மாவட்டங்களிலும் உள்ள அ.ம.மு.க-வினர் பெரும்பாலானோர் மாற்றுக் கட்சிக்குச் சென்றுவிடுவோம். இம்மாவட்டங்களில் அ.ம.மு.க கூடாரம் காலியாவதற்கு பார்த்திபன்தான் காரணமாக இருப்பார்’’ என்கின்றனர் அதிருப்தியில் உள்ள அ.ம.மு.க நிர்வாகிகள்.