Published:Updated:

‘அரசு விழாவில் பெயர் புறக்கணிப்பு!’ - அமைச்சர்களிடம் வாக்குவாதம் செய்த தி.மு.க எம்.எல்.ஏ

‘அரசு விழாவில் பெயர் புறக்கணிப்பு!’ - அமைச்சர்களிடம் வாக்குவாதம் செய்த தி.மு.க எம்.எல்.ஏ
‘அரசு விழாவில் பெயர் புறக்கணிப்பு!’ - அமைச்சர்களிடம் வாக்குவாதம் செய்த தி.மு.க எம்.எல்.ஏ

வேலூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில், பேனரில் பெயர் விடுபட்டிருந்ததால் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் வீரமணியிடம், தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, விழாவையும் புறக்கணித்தார்.

வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.14.5 கோடி மதிப்பில் 5 புதிய சிகிச்சைப் பிரிவு மையங்கள் மற்றும் பரிசோதனைக் கூடங்களை, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோர் 1-ம் தேதி பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சு.ரவி, லோகநாதன், அந்தத் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார் (அணைக்கட்டு) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

‘‘அழைப்பிதழில் பெயரை அச்சிட்டிருந்தாலும், அழையா... விருந்தாளியாகத்தான் வந்திருக்கிறேன். வரவேற்பு பேனர்களில், அமைச்சர்கள், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் புகைப்படங்கள், பெயர்கள் பெரியதாகப் போடப்பட்டிருக்கிறது. என்னுடைய பெயர், படம் ஒரு பேனரில்கூட இடம்பெறவில்லை. என்னுடைய தொகுதிக்குள் நடக்கும் அரசு விழாவில், எனக்குக் கொடுக்கும் மரியாதை இதுதானா? அரசு என்ன அ.தி.மு.க-வின் சொத்தா... இதென்ன அ.தி.மு.க, தி.மு.க நடத்தும் நிகழ்ச்சியா?’’ என்று கேள்வி எழுப்பிய தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார், அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் வீரமணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

‘‘வாருங்கள் அறைக்குள் சென்று பேசலாம்’’ என்று வீரமணி அழைத்ததை ஏற்க மறுத்த தி.மு.க எம்.எல்.ஏ, விழாவைப் புறக்கணித்துவிட்டு சென்றார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ‘‘தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமாரை விழாவுக்கு அழைத்தோம். கல்வெட்டில் அவரின் பெயரும் பொறிக்கப்பட்டிருக்கிறது. நல்ல திட்டத்தை அர்ப்பணிக்கும்போது, அதைத் திசை திருப்புவதற்காக நந்தகுமார் செயல்பட்டிருக்கிறார். தொகுதி எம்.எல்.ஏ என்ற முறையில் அவர், ரூ.1 லட்சம் நிதியைக்கூட, இம்மருத்துவமனைக்கு இதுவரை செலவிட்டதில்லை’’ என்றார்.