Published:Updated:

`ஸ்டாலின் என்னை நினைத்துக்கொண்டே தூங்குகிறார்!’ - முதல்வர் பழனிசாமி கிண்டல்

எடப்பாடி பழனிசாமி

`ஸ்டாலின் என்னை நினைத்துக்கொண்டே தூங்குகிறார்!’ - முதல்வர் பழனிசாமி கிண்டல்
`ஸ்டாலின் என்னை நினைத்துக்கொண்டே தூங்குகிறார்!’ - முதல்வர் பழனிசாமி கிண்டல்

சென்னை டு பெங்களூரு பிரதான சாலையில் சேலம் கந்தம்பட்டி பைப்பாஸில் 33 கோடி செலவில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிக்கு  முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டிப் பேசினார். அதில், ``எப்படியாவது எடப்பாடி ஆட்சியை இறக்கிவிட முடியாதா என்று ஸ்டாலின் தூங்கும்போதும் என்னைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறார். அரசியல் ரீதியாக எங்களை எதிர்கொள்ள முடியாமல் சூழ்ச்சிகளால் முயற்சி செய்கிறார். அது தோல்வியில் முடியும்’’ என்று சூளுரைத்தார்.

கலெக்டர் ரோகிணி அனைவரையும் வரவேற்றுப் பேசிய பிறகு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். ``சேலம் மக்கள் நெரிசல் இல்லாமல் பயணிக்கவும் விலை மதிக்க முடியாத உயிரைப் பாதுகாக்கவும் இன்று மூன்று உயர்மட்ட பாலங்கள் கட்டப்படுகின்றன. தாலிக்குத் தங்கம், மடிக்கணினி வழங்கப்படுகிறது. சேலம் பஸ் போர்ட் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டது. அம்மா ஆட்சி தேர்தல் வாக்குறுதியில் சொல்லாததையெல்லாம் நிறைவேற்றி வருகிறது.
 
புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தி.மு.க தலைவர் ஸ்டாலின் கிராம சபைக் கூட்டம் நடத்துகிறார். ஏற்கெனவே அரசு கிராம சபைக் கூட்டம் நடத்தி வருகிறது. இவர் கிராமசபைக் கூட்டம் நடத்தி இந்த ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என்று தவறான குற்றச்சாட்டுகளைச் சொல்லுகிறார். அம்மாவின் திட்டங்களைத் தொடர்ந்து இந்த அரசு நிறைவேற்றி வருவதால் காழ்ப்பு உணர்ச்சியில் பேசுகிறார்.

கிராமம்தான் கோயில் என்று புதியதாகக் கண்டுபிடித்துபோலச் சொல்லுகிறார். நாங்கெல்லாம் கிராமத்தில் வளர்ந்தவர்கள். நகரத்தில் வாழ்ந்ததால் கிராமத்தைப் பற்றித் தெரியாமல் புதிய சாதனை படைத்து கின்னஸ் சாதனையாளராகப் பேசி வருகிறார். ஜெயலலிதா திட்டத்தை யார் ஆட்சிக்கு வந்தாலும் தடை செய்ய முடியாது. ஸ்டாலின் எப்போதும் என்னைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறார். தூங்கும் போதுகூட என்னை நினைத்துக்கொண்டே தூங்குகிறார். எப்படியாவது எடப்பாடி ஆட்சியை இறக்கிவிட வேண்டுமென நினைக்கிறார். அதற்காக யார் யாரையோ தூண்டிவிட்டு சூழ்ச்சி செய்கிறார், பலிக்கவில்லை.  

இங்கு பாகல்பட்டி கிராமத்தில் சிலரைக் கூட்டி கிராம சபைக் கூட்டம் போட்டு பேசிட்டுப் போயிருக்கிறார். மகளிர் சுயநிதி குழுக்களுக்கு ஜெயலலிதா ஆட்சியில்தான் 1,800 கோடி சுழல் நிதியாகக் கொடுத்திருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஏழை எளிய மக்களுக்குப் பொங்கல் பரிசாக ரூ.1,000 கொடுத்தோம். அதை ஸ்டாலின் தூண்டிவிட்டுத் தடுக்க நினைத்தார். ஆனால், நீதி வென்றது. அனைவருக்கும் 1,000 ரூபாய் போய்ச் சேர்ந்தது. மக்கள் மகிழ்ச்சியாகப் பொங்கல் கொண்டாடினார்கள். இப்படி ஸ்டாலின் அரசியல் ரீதியாக எங்களை எதிர்கொள்ள முடியாமல் சூழ்ச்சிகளால் முயற்சி செய்து பார்க்கிறார். அது தோல்வியில் முடியும்’’ என்றார்.