Published:Updated:

`ஹெச்.ராஜா சவாலை ஏற்கிறோம்!’ - மோடிக்கு எதிராகப் பெரியார் அமைப்புகள்

`ஹெச்.ராஜா சவாலை ஏற்கிறோம்!’ - மோடிக்கு எதிராகப் பெரியார் அமைப்புகள்
`ஹெச்.ராஜா சவாலை ஏற்கிறோம்!’ - மோடிக்கு எதிராகப் பெரியார் அமைப்புகள்

பெரியார் இயக்கங்களுக்கு ஹெச்.ராஜா விடுத்த சவாலை ஏற்றுக்கொள்வதாகவும், தேர்தல் பொதுக்கூட்டத்துக்காக திருப்பூர் வரவிருக்கும் பிரதமர் மோடிக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டப்படும் எனவும், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிப்ரவரி 10-ம் தேதி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்ற இருக்கிறார். இந்த நிலையில், மோடியின் வருகையை எதிர்த்து பெரியார் இயக்கங்களின் சார்பில் அன்றைய தினம் திருப்பூரில் கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அதற்கான ஆலோசனைக் கூட்டம், நேற்று திருப்பூரில் உள்ள தனியார் அரங்கத்தில் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பல்வேறு பெரியாரிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கு.ராமகிருஷ்ணன், ``தொழில்துறை நலிவடைந்து பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், பிரதமர் மோடி திருப்பூருக்கு வருவதை பொதுமக்கள் யாரும் விரும்ப மாட்டார்கள். சமீபத்தில், மதுரைக்கு பிரதமர் மோடி வந்தபோது, கறுப்புக்கொடி காட்டிய பெரியார் அமைப்புகள், முடிந்தால் திருப்பூரில் கூடிப்பாருங்கள் என பா.ஜ.க-வின் ஹெச்.ராஜா சவால் விட்டிருக்கிறார். அந்த சவாலை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். வரும் பிப்ரவரி 10-ம் தேதி திருப்பூருக்கு வரவிருக்கும் நரேந்திர மோடிக்கு எதிராக, திட்டமிட்டபடி கறுப்புக்கொடி காட்டுவோம். திருப்பூரும் பெரியார் மண்தான் என்பதை நிரூபிப்போம்’’ என்றார்.