Published:Updated:

ஆனந்த் டெல்டும்டே கைதுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்!

ஆனந்த் டெல்டும்டே கைதுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்!
ஆனந்த் டெல்டும்டே கைதுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்!

‘எல்கார் பரிசத்’ வழக்கு தொடர்பாக, பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 “உலகறிந்த சிந்தனையாளரான ஆனந்த் டெல்டும்டே, இன்று அதிகாலை மும்பை விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டிருக்கிறார். பிப்ரவரி 11-ம் தேதி வரை அவரைக் கைதுசெய்வதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையிலும், இன்று மகாராஷ்டிரா  போலீஸ் அவரைக் கைதுசெய்திருக்கிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். மத்திய அரசு உடனே இதில் தலையிட்டு, அவர்மீது புனையப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்யவும், அவரை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

இவரையடுத்து இந்தச் சமப்வம் தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள வைகோ, “ மத்திய பா.ஜ.க அரசின் அடக்குமுறைக்கு, நாடறிந்த ஆய்வாளரும், கரக்பூர் ஐ.ஐ.டி பேராசிரியருமான சமூக செயல்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டே  இலக்காகி உள்ளார். மராட்டிய மாநிலம் பீமா கோரேகானில், கடந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி ‘எல்கார் பரிசத்’ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த, தாழ்த்தப்பட்ட வீரர்கள் 1818 -ம் ஆண்டு பேஷ்வாக்களின் ஆட்சியை எதிர்த்துப் போரில் வீரமரணம் அடைந்த 200-வது ஆண்டு விழா நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியின்போது நடந்த பேரணியில், பல்லாயிரக்கணக்கான பட்டியலின மக்கள் நாடு முழுவதும் திரண்டுவந்தனர். அங்கே, சில கும்பல் திட்டமிட்டு வன்முறைக் கலவரத்தைத் தூண்டியது. இதன் எதிரொலியாக, மராட்டிய மாநிலம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பீமாகோரேகான் நிகழ்ச்சியில் பங்கேற்ற சமூக செயல்பாட்டாளர் கவிஞர் வரவரராவ், மனிதஉரிமைப் போராளி சுதா பரத்வாஜ், மனித உரிமைகளுக்காக வழக்காடிவரும் வழக்கறிஞர் அருண் பெரைரா, சமூகப் போராளி கவுதம் நவ்லகா உள்ளிட்ட ஐந்து பேர் மீதும், எல்கார் பரிசத் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ஐவர் மீதும் சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம்  ‘உபா’ ஏவப்பட்டது. சென்ற ஆண்டு ஆகஸ்டு 28-ம் தேதி கைது செய்யப்பட்ட இவர்கள்மீது, பிரதமர் மோடியைக் கொல்வதற்கு நக்சல் அமைப்புகளுடன் சேர்ந்து சதிசெய்ததாக பொய் வழக்கு புனையப்பட்டது. 

ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்களுக்காகவும், சிறுபான்மை மக்கள் நலனுக்காகவும், ஜனநாயக உரிமைகளுக்காகவும் போராடி, வாழ்நாளையே அர்ப்பணித்துள்ள சமூக செயல்பாட்டாளர், அடக்குமுறை மூலம் நசுக்கி ஒடுக்கிவிடலாம் என்று மோடி அரசு திட்டமிட்டு அவர்களை மராட்டிய மாநில அரசு மூலம் கைதுசெய்து சிறையில் தள்ளி கொடுமைப்படுத்திவருகிறது. பீமாகோரேகான் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே மீதும், உபா சட்டத்தை ஏவி மராட்டிய மாநில அரசு மூலம் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறது. 

மக்கள் நலன் சார்ந்து செயல்படும் அறிவுஜீவிகளை ஒடுக்குவதும், பா.ஜ.க-வின் அரசியல் நிலைப்பாடுகளை எதிர்ப்போர் அனைவரையும் தேசத்துரோகிகள் என முத்திரை குத்துவதும், கறுப்புச் சட்டங்களை ஏவி அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதும், பா.ஜ.க அரசின்  போக்கு எல்லை கடந்து போய்க்கொண்டிருப்பதையே உணர்த்துகின்றது.  அரசியல் சட்டத்தின்படி மக்கள் ஆட்சி நடைபெறுகின்ற நாட்டில், இத்தகைய நடவடிக்கைகள் கடும் கண்டனத்திற்கு உரியது. மோடி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் ஏற்பட்டுவரும் மக்களின் கோபக் கனலை எந்த சக்தியாலும் அணைத்துவிட முடியாது. குரல் அற்றவர்களின் குரலாய் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தொண்டாற்றிவரும் பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே உள்ளிட்ட அனைவரையும் உடனே விடுதலைசெய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.