Published:Updated:

`ராஜினாமா செய்யத் தயாரா?’ -அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தி.மு.க எம்.எல்.ஏ நந்தக்குமார் சவால்

`ராஜினாமா செய்யத் தயாரா?’ -அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தி.மு.க எம்.எல்.ஏ நந்தக்குமார் சவால்
`ராஜினாமா செய்யத் தயாரா?’ -அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தி.மு.க எம்.எல்.ஏ நந்தக்குமார் சவால்

`வேலூர் அரசு மருத்துவமனைக்கு, நான் ஒரு லட்சம் நிதியைக்கூடக் கொடுக்கவில்லை என்று கூறியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சவால் விடுகிறேன். நான் நிதி ஒதுக்கியிருப்பதை நிரூபித்தால், அமைச்சர் பதவியை நீங்கள் ராஜினாமா செய்யத்தயாரா?’ என்று அணைக்கட்டு தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.14.5 கோடி மதிப்பில் 5 புதிய சிகிச்சைப் பிரிவு மையங்கள் மற்றும் பரிசோதனைக் கூடங்களை, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோர் மக்கள் பயன்பாட்டுக்காக நேற்று திறந்து வைத்தனர். இந்தநிகழ்ச்சியில், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சு.ரவி, லோகநாதன், அந்தத் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார் (அணைக்கட்டு) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

தி.மு.க எம்.எல்.ஏவுக்கு உரிய மரியாதை கொடுக்காததால், அவர் அமைச்சர்களிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியதோடு, விழாவையும் புறக்கணித்துவிட்டு சென்றார். இதுபற்றி அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறுகையில், ``தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார், இத்தொகுதி எம்.எல்.ஏ என்ற முறையில், ரூ.1 லட்சம் நிதியைக்கூட, இம்மருத்துவமனைக்கு செலவிட்டதில்லை’’ என்று குற்றம்சாட்டியிருந்தார். அமைச்சர் விஜயபாஸ்கரின், இந்த விமர்சனத்திற்கு தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.

``மருத்துவமனைக்காக நான் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என்று கூறியிருக்கிறீர்கள். நான் நிதி ஒதுக்கியிருப்பதை நிரூபித்தால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?. மருத்துவ அலுவலர்களைக் கேட்டுப்பாருங்கள். அரசு மருத்துவமனைக்கு வரும் பார்வையாளர்கள் தங்குவதற்காக, 2016-2017 நிதியாண்டில், என்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியில், ரூ.7 லட்சத்தில் ஓய்வறை கட்டிக் கொடுத்துள்ளேன். அதைத் தெரியாமல், பேசியிருக்கிறீர்கள். உங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய நீங்கள் தயாரா?’’ என்று எம்.எல்.ஏ நந்தகுமார் சவால்விடுத்துள்ளார்.