Published:Updated:

`யோகி ஆதித்யநாத்துக்கு கருப்புக்கொடி காட்டுவோம்!’ - நெல்லை காங்கிரஸார் அறிவிப்பு

`யோகி ஆதித்யநாத்துக்கு கருப்புக்கொடி காட்டுவோம்!’ - நெல்லை காங்கிரஸார் அறிவிப்பு
`யோகி ஆதித்யநாத்துக்கு கருப்புக்கொடி காட்டுவோம்!’ - நெல்லை காங்கிரஸார் அறிவிப்பு

மகாத்மா காந்தி நினைவு தினத்தன்று உத்திரபிரதேச மாநிலத்தில் காந்தியடிகளின் உருவபொம்மையைத் துப்பாக்கியால் சுட்டு அவமதித்த இந்து மகாசபை தேசியச் செயலாளரைக் கண்டித்து நெல்லையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்றவர்கள், நெல்லைக்கு யோகி ஆதித்யநாத் வரும்போது கருப்புக்கொடி காட்டப்போவதாக எச்சரித்தனர். 

மகாத்மா காந்தியின் நினைவுதினமான ஜனவரி 30ம் தேதி உத்திரபிரதேச மாநிலத்தில் இந்து மகாசபை தேசியச் செயலாளர் பூஜாசகாயனா காந்தியின் உருவபொம்மையைத் துப்பாக்கியால் சுட்டார். அவர் சுட்டதும் அந்த உருவப் பொம்மையில் இருந்து ரத்தம் வடிவது போன்று சித்திரிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையும் ஏற்படுத்தியது. 

மகாத்மா காந்தியை அவமதிப்பு செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நெல்லையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர மாவட்டத் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், இந்து மகாசபையைச் சேர்ந்த பூஜாசகாயனாவைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. தேசப்பிதாவான காந்தியடிகளை அவமதித்தவர்களைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தினார்கள். அத்துடன், இந்து மகாசபைத் தலைவரின் உருவப்பொம்மையைத் தூக்கிலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தப் போராட்டம் குறித்து நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் செயலாளரான சங்கரபாண்டியன் கூறுகையில், ``இந்து மகாசபை அமைப்பின் பொதுச் செயலாளராக இருக்கும் பூஜாசகாயனா காந்தியடிகளை அவமதித்து இருப்பதால் அவரைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்கவிட்டால் நெல்லை மாவட்டத்துக்கு இந்த மாதம் 12-ம் தேதி உத்திரபிரதேச முதல்வரான யோகி ஆதித்யநாத் வரும்போது கருப்புக்கொடி காட்டுவோம்'' என்றார்.