Published:Updated:

காக்கிச் சட்டை அணிந்து ஆட்டோ ஓட்டிய ஆந்திர முதல்வர் -கொண்டாட்டத்தில் ஓட்டுநர்கள்!

காக்கிச் சட்டை அணிந்து ஆட்டோ ஓட்டிய ஆந்திர முதல்வர் -கொண்டாட்டத்தில் ஓட்டுநர்கள்!
காக்கிச் சட்டை அணிந்து ஆட்டோ ஓட்டிய ஆந்திர முதல்வர் -கொண்டாட்டத்தில் ஓட்டுநர்கள்!

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் தங்களின் வாக்குகளை தக்கவைத்துக்கொள்ள பல்வேறு புதிய திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்து வருகின்றனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்பிலிருந்தே தன் மாநில மக்களுக்காக பல்வேறு நல திட்டங்களை அறிவித்து வருகிறார்.

தற்போது தேர்தலையொட்டி இன்னும் சில சிறப்புத் திட்டங்களை அறிவித்துள்ளார். அதில் ஒன்றாக, இரு தினங்களுக்கு முன்பு ஆந்திர மோட்டார் வாகன சட்டம் 1963-ன் படி அனைத்து மூன்று சக்கர ஒப்பந்த வண்டிகள், 3000 கி.கி எடையுள்ள விவசாயத்துக்குப் பயன்படும் ட்ராக்டர் போன்றவைக்கான ஆயுள் கால வரியை ரத்து செய்து அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பு ஆந்திராவில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. 

வரி ரத்துக்கு நன்றி தெரிவிப்பதற்காக மாநிலத்தில் உள்ள நூற்றுக்கணக்கான ஆட்டோ ஓட்டுநர்கள் இணைந்து நேற்று முதல்வர் சந்திரபாபு நாயுடு வீட்டில் அவரை நேரில் சந்தித்து பேசியுள்ளனர். அவர்களைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்த முதல்வர் தானும் காக்கிச் சட்டை அணிந்துகொண்டு அவர்களுடன் இணைந்து ஆட்டோ ஓட்டினார்.

பிறகு ஓட்டுநர்கள் மத்தியில் பேசிய அவர், “ஆயுள் கால வரி ரத்தால் ஆந்திர அரசுக்கு 141 கோடி அளவுக்கு பண சுமை அதிகரித்துள்ளது. ஆனால் இந்த வரி ரத்தின் மூலம் மாநிலம் முழுவதிலும் சுமார் 9.79 லட்சம் ஓட்டுநர்கள் பயனடையவுள்ளனர். மேலும் 1.82 லட்சம் விவசாய வாகன ஓட்டிகளும் இதன் மூலம் பயனடைவர். இந்த அரசு கிராம புறங்களில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காகப் பல திட்டங்களை செயல்படுத்தவுள்ளது” எனத் தெரிவித்தார்.

முதல்வரின் இந்த அறிவிப்பு அம்மாநில மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. சந்திரபாபு நாயுடு ஆட்டோ ஓட்டிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.