கஜாவால் சிதைந்த அம்மா உணவகம்! - சீரமைக்க மக்கள் கோரிக்கை | Public requests to rebuild thiruthuraipoondi Amma Canteen which got affected by Gaja Cyclone

வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (04/02/2019)

கடைசி தொடர்பு:17:25 (04/02/2019)

கஜாவால் சிதைந்த அம்மா உணவகம்! - சீரமைக்க மக்கள் கோரிக்கை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ளது அம்மா உணவகம். 2015-ல் தொடங்கப்பட்டு   மூன்று ஆண்டுகளாகச் சரியான முறையில் இயங்கியும் வந்துள்ளது. இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளும் உடன் வருபவர்களும்  குறைந்த விலை உணவான அம்மா உணவகத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

இங்கு விலை மிகக் குறைவு எனினும் உணவு நன்றாகத்தான் இருந்தது. ஒரு ரூபாய் இட்லி, ஐந்து ரூபாய் சாப்பாடு என அனைத்தும் மலிவு விலை. அதனால்தான் அனைவரைரும் இதைப் பயன்படுத்தினர். அதுமட்டுமன்றி இங்கு உள்ள மக்களும் இதைப் பயன்படுத்தியுள்ளனர். குறைந்தது 200-க்கும் மேற்பட்ட மக்கள் இந்த உணவகத்தில் தினமும் உணவு சாப்பிட்டு வந்துள்ளனர். வேலைக்குச் செல்பவர்களும் தினக்கூலியாக வேலை செய்பவர்கள், மேலும் நகராட்சியில் துப்புரவுத் தொழில் செய்பவர்கள் என அணைத்து மக்களும் பயன்படுத்தி வந்துள்ளனர்.

திருத்துறைப்பூண்டியில் இந்த மருத்துவமனையே அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர், அதனால்தான் அம்மா உணவகம் இங்கு அமைக்கப்பட்டது. வேதாரண்யம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. தற்போது இந்த உணவகம் இயங்கவில்லை. காரணம், இந்த உணவகமானது கஜா புயலால் முழுமையாகப் பாதிக்கப்பட்டு சேதமடைந்துள்ளது.

புயல் பாதிக்கப்பட்டப் பகுதியில் திருத்துறைபூண்டியும் ஒன்று. எனினும் இங்கு சீரமைப்புப் பணிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. அப்படி இருக்கையில் இன்னும் அம்மா உணவகம் எந்த வித சீரமைப்புப் பணியும் செய்யாமல், அப்படியே இருக்கிறது. இந்த உணவகத்தைப் பயன்படுத்திய மக்கள் சிரமப்படுகின்றோம் என்கின்றனர். எனவே, அரசு உடனடியாக இந்த உணவகத்தைச் சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். எங்களைப் போன்ற ஏழை மக்களுக்கு உதவிய இந்த உணவகம் மீண்டும் இங்கு  செயல்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.

முழுமையாகப் சிதைந்து போனதால் எப்படியும் அதைச் சீரமைக்க நாள்கள் தேவைப்படும். எனவே, அதைக் கருத்தில் கொண்டாவது விரைந்து சீரமைப்புப் பணியில் அரசு ஈடுபட வேண்டும். அரசு மட்டுமில்லை அரசியல் வாதிகளும் இதைக் கண்டுகொள்ளவில்லை. மக்களின் நிலைமை உணர்ந்து உருவாக்கப்பட்ட உன்னத திட்டமாகத்தான், நாங்கள் இதைப் பார்க்கிறோம். ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், இந்த அம்மா உணவகத்தை உடனே சீர் செய்ய வேண்டும் என்கிற பொதுமக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்குமா அரசு.