Published:Updated:

`கோயிலுக்கு வரும் பக்தன்போல இங்கு வந்துள்ளேன்!’ - கிராமசபைக் கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

`கோயிலுக்கு வரும் பக்தன்போல இங்கு வந்துள்ளேன்!’ - கிராமசபைக் கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு
`கோயிலுக்கு வரும் பக்தன்போல இங்கு வந்துள்ளேன்!’ - கிராமசபைக் கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

`கிராமங்கள் கோயில் போன்றவை. பக்தர்கள் கோயிலைத் தேடி வருவதுபோல நான் இந்தக் கிராமத்துக்கு வந்துள்ளேன்’ எனக் கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் பேசினார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சத்திரப்பட்டியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. மக்களிடையே பேசிய ஸ்டாலின், ``மகாத்மா காந்தி கிராமங்களைக் கோயில் எனக் கூறினார். பக்தர்கள்தான் கோயிலுக்கு வருவார்கள். நான் இந்தக் கிராமத்தைக் கோயிலாக நினைத்து, பக்தனாக இங்கு வந்துள்ளேன். தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடந்தது. ஆனால், தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் தி.மு.க வெற்றி பெறும் என்பதால், அ.தி.மு.க அரசு தேர்தலை நடத்த முன்வரவில்லை. சுகாதாரம், கல்வி, பொதுப்பணி என அனைத்து துறைகளிலும் ஊழல்தான் நடக்கிறதே தவிர மக்களுக்கான திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

சசிகலா காலில் விழுந்ததால் முதல்வரான எடப்பாடி பழனிசாமி, இன்று மோடியின் காலில் விழுந்து கிடக்கிறார். தமிழக அரசு ஊழல், கொள்ளை அரசாக மட்டுமல்லாமல் கொலைகார அரசாக உள்ளது. ஆட்சியமைக்க 118 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. ஆனால், அ.தி.மு.க அரசு பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு இல்லாமல் 113 பேரின் ஆதரவு மட்டுமே உள்ளது. இந்த 113 பேரை காப்பாற்றத்தான் எல்லா அமைச்சர், எம்.எல்.ஏ-க்களுக்கு கமிஷன், லஞ்சம் கொடுக்கிறார்கள். இதற்காக ஒவ்வொரு துறையிலும் கொள்ளை நடக்கிறது. தி.மு.க அரசு ஆட்சியமைத்தால் மத்திய அரசுக்கு அடிபணியாது, பயப்படாது என்பதால் அ.தி.மு.க அரசுக்கு மத்திய அரசு துணையாக உள்ளது.

பொதுமக்களின் மனுக்களை அதிகாரிகளுக்கு அனுப்பி அதை நிறைவேற்ற வலியுறுத்துவேன். தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். பட்டாசுத் தொழில் குறித்து சட்டமன்றத்தில் ஏற்கெனவே பேசினேன். ஆனால், அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விவசாயத்தில் அமெரிக்கப் படைப்புழு தாக்கம் கடுமையாக உள்ளது. இதுகுறித்துப் பலமுறை சட்டமன்றத்தில் பேசியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்த உடன் அனைத்து பிரச்னைகளும் சரி செய்யப்படும்.

மோடி ஆட்சியமைத்து நான்கே முக்கால் ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. 3 மாதங்களுக்குள் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த தேர்தலின்போது வெளிநாட்டில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணம் மீட்கப்பட்டு ஒருவருக்கு ரூ.15 லட்சம் வங்கியில் டெபாசிட் செய்யப்படும் என மோடி கூறினார். ஆனால், 15 ரூபாய்கூட போடவில்லை. விவசாயிகளுக்கு ரூ.6,000 வழங்கப்படும் என மோடி அறிவித்தார். விவசாயி அதிகபட்சம் 1 லட்சம் கடன் வாங்கியிருப்பார்கள். அதைகூட தள்ளுபடி செய்யவில்லை. ஆனால், பெரும் முதலாளிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியே இல்லை. ஜெயலலிதா மறைந்ததாலும், சசிகலா சிறைக்குச் சென்றதாலும் அந்த இடத்தில் எடப்பாடி பழனிசாமி உட்கார்ந்து கொண்டார். ஜெயலலிதா மரணமே மர்மமாக உள்ளது. கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தபோது ஒவ்வொரு நாள் உடல்நிலை குறித்து மருத்துவர்கள், கட்சி நிர்வாகிகள் வெளிப்படையாகத் தெரிவித்தோம். கொடநாடு இல்லை கொலைநாடு. முதலில் கொலையான வாட்ச்மேன் விவகாரம் வெளியே தெரியக் கூடாது என்பதற்காகத் தொடர்ச்சியாக 4 பேர் கொலை செய்யப்பட்டனர். இதற்கு முதல்வர்தான் உடந்தையாக இருந்தார். அ.தி.மு.க அரசுக்கு பா.ஜ.க அரசு துணையாக உள்ளது. இந்த 2 ஆட்சிகளையும் அகற்ற வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.

அமுதா என்ற பெண்மணி, `சாத்தூரைச் சுற்றி தீப்பெட்டி, பட்டாசுத் தொழிலை நம்பி பலர் உள்ளனர். தற்போது நலிவடைந்துள்ளது. எங்களுக்கு விடிவுகாலம் வரும் என்று நம்புகிறோம்’ எனத் தெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்த மு.க.ஸ்டாலின், `பட்டாசுக்கு மத்திய அரசு பல நிபந்தனைகளை விதித்துள்ளது. இதேபோல ஜல்லிக்கட்டுக்கும் நீதிமன்றம் நிபந்தனை விதித்தது. அப்போது சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது பட்டாசுக்கும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால், முதல்வர் இது சம்பந்தமாக ஒரு வார்த்தைகூட பேசவில்லை. ஆயிரக்கணக்கான பட்டாசுத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. தி.மு.க ஆட்சிக்கு வந்தால் இந்தப் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்’’ எனத் தெரிவித்தார்.

`ஆசிரியர் பணி முடித்தவர்களுக்கான தகுதித்தேர்வை ரத்து செய்துவிட்டு பதிவுமூப்பு அடிப்படையில் பணி வழங்க வேண்டும்’ என கேத்ரின் என்ற இளம்பெண் தெரிவித்தார். `நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’ என புனிதா என்ற மாணவி தெரிவித்தார். `தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து மதுவிலக்குக்காக இருக்க வேண்டும்’ எனப் பெண்மணி ஒருவர் தெரிவித்தார். ஆனால், ஸ்டாலின் அதற்கு பதில் கூறவில்லை.

ஸ்டாலின் தாத்தாவுக்கு வணக்கம் என நசீதா என்ற எல்.கே.ஜி மாணவி பேசினார். அப்போது குறுக்கிட்ட அவர் ஸ்டாலின், `தாத்தா அல்ல; ஸ்டாலின் மாமா’ என்றார். இதனால் கூடியிருந்த மக்கள் அனைவரும் சிரித்தனர்.