திருவள்ளூர் அருகே தி.மு.க. பஞ்சாயத்து தலைவர் பெட்ரோல் குண்டுவீசி கொலை


திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே தி.மு.க.வை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் பெட்ரோல் குண்டுவீசி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கண்ணிகைபேர் ஊராட்சித் தலைவராக இருந்தவர் திராவிட பாலு என்ற பாலு (56). அவருக்கு வள்ளி என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது.
பாலு, தனது மனைவியுடன் கண்ணிகைபேர் காலனியில் வசித்து வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை 6 மணிக்கு பாலு வாக்கிங் சென்றார். வாக்கிங்கை முடித்துவிட்டு, இறைச்சி கடையில் மட்டன் வாங்குவதற்காக கடையில் காத்துக் கொண்டிருந்தார்.
அப்போது, ஆம்னி வேனில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், பாலு மீது பெட்ரோல் குண்டை வீசி விட்டு அங்கிருந்து தப்பியது. தலையில் பலத்த காயம் அடைந்த பாலுவை உடனடியாக அருகில் இருந்தவர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியிலேயே பாலு பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த படுகொலை குறி்த்து பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பஞ்சாயத்து தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க.வை சேர்ந்த பாலு, 10 ஆண்டுக்கு முன்பு எல்லாபுரம் ஒன்றிய செயலாளராக இருந்தார். பின்னர் கண்ணிகைபேர் ஊராட்சி தலைவரானார். மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், பேராசிரியர் அன்பழகன் ஆகியோரிடம் நெருக்கமாக இருந்து வந்துள்ளார்.
##~~## |