Published:Updated:

`நிர்மலா தேவிக்கு ஜாமீன் கிடைக்காதது ஏன்? - மர்மத்தைச் சொல்லும் முத்தரசன்

`நிர்மலா தேவிக்கு ஜாமீன் கிடைக்காதது ஏன்? - மர்மத்தைச் சொல்லும் முத்தரசன்
`நிர்மலா தேவிக்கு ஜாமீன் கிடைக்காதது ஏன்? - மர்மத்தைச் சொல்லும் முத்தரசன்

`நிர்மலா தேவிக்கு ஜாமீன் கிடைக்காதது ஏன்? - மர்மத்தைச் சொல்லும் முத்தரசன்

மோடி சொல்வதை அப்படியே செய்யும் கிளிப்பிள்ளை போல தமிழக அரசு உள்ளதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் தெரிவித்தார்.

விருதுநகரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``மத்திய பா.ஜ.க சிறப்பாகச் செயல்பட்ட திட்டக்கமிஷன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைக் கலைத்துள்ளது. பா.ஜ.க தலையீட்டால் தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி ஆகியவை கேள்விக்குறியாகியுள்ளன. மனுதர்ம கொள்கையைச் செயல்படுத்த, பா.ஜ.க கடந்த 5 ஆண்டுகளாக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருகிறது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல், வாக்குகளைப் பெற கவர்ச்சிகரமான பல்வேறு புதிய அறிவிப்புகளையும், சலுகைகளையும் வெளியிட்டுள்ளார் மோடி.

குதிரைக்கு புல்லைக் காட்டி, தெனாலிராமன் ஏமாற்றியதுபோல கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை உறுதிப்படுத்திக்கொண்டு, புதிய அறிவிப்புகள்மூலம் வெற்றிபெறலாம் என மோடி முயற்சிக்கிறார். அவர், நவீன தெனாலிராமன். மோடிக்குரிய பதில்களை அந்தக் கட்சியின் மூத்த தலைவரான நிதின் கட்கரியே தெரிவித்து வருகிறார். மோடி சொல்வதை அப்படியே செய்யும் கிளிப்பிள்ளை போல தமிழக அரசு உள்ளது. மாநிலத்தின் உரிமைகள், நலன்கள் குறித்து தமிழக அரசுக்குக் கவலை இல்லை. மோடி சொல்வதைக் கேட்கவேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டு, அடிமை அரசாக எடப்பாடி அரசு உள்ளது. எங்கள் அணி அமைப்பு ரீதியாக, கொள்கை ரீதியாக பலம் வாய்ந்த அணி. பா.ஜ.க, அ.தி.மு.க கட்சிகளை 40 தொகுதிகளிலும் எங்கள் அணி தோற்கடிக்கும்.

கொலை செய்தவர்கள்கூட 90 நாள்களில் வெளியே வந்துவிடுகின்றனர். ஆனால், பேராசிரியர் நிர்மலாதேவி, முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய 3 பேரும் கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வர முடியாத அளவுக்கு சிறையில் உள்ளனர். இவர்களுக்கு, ஜாமீன் மறுப்பதற்கான மர்மம் புரியவில்லை. நிர்மலாதேவி யாருக்காக இப்படிச் செய்தார் என்பதுகுறித்து ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை. மாநில ஆளுநர், வழக்கில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர், தன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, இந்த 3 பேரையும் சிறைக்குள்ளேயே வைத்து முடித்துவிடும் உள்நோக்கத்தோடு செயல்படுவதாகத் தெரிகிறது. யாரையும் கைதுசெய்யலாம். பொய் வழக்குப் பதியலாம். ஜாமீனில் வெளியே வர முடியாமல் உள்ளேயே வைத்து எதுவும் செய்யலாம் என்ற நிலை வரும். இது ஜனநாயகத்துக்கு மிகப்பெரும் ஆபத்து.

பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால், 8 லட்சம் தொழிலாளர்களும் பிச்சை எடுக்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வாங்கிய கடனை திரும்பச்செலுத்த முடியவில்லை. தமிழக அரசு இதைப் பற்றி கவலைப்படவில்லை. இதேநிலை நீடித்தால், தோழமைக் கட்சிகளுடன் இணைந்து, மாவட்டத்தில் மிகப்பெரும் போராட்டம் நடத்துவோம்.

தமிழக சட்டப்பேரவையில், பட்டாசு ஆலைகளைத் திறக்க சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஹைட்ரோகார்பனுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாட்டின் நதிநீர்ப் பிரச்னை தொடர்பாக மத்திய அரசைக் கண்டிக்க வேண்டும். தமிழக உரிமைகளுக்காக மத்திய அரசுக்கு எதிராக ஜெயலலிதா போராட்டம் நடத்தினார். ஆனால், அவர் பெயரால் நடைபெறும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, தொடைநடுங்கி அரசாக உள்ளது. விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும். நவீனத்தை கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. ஆனால், இயந்திர வாக்குப்பதிவு முறையில் நம்பகத்தன்மை இல்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே தோழமைக் கட்சிகளுடன் கலந்து பேசி தி.மு.க கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து முடிவுசெய்யப்படும். இதில், ஒளிவு மறைவு இல்லை. அ.தி.மு.க போல எங்கள் கூட்டணி சந்தை வியாபாரிகள் அல்ல'' என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு