அரசியல்
சமூகம்
Published:Updated:

இது தமிழக முதல்வரின் அலட்சியமே!

இது தமிழக முதல்வரின் அலட்சியமே!
பிரீமியம் ஸ்டோரி
News
இது தமிழக முதல்வரின் அலட்சியமே!

புகார் வாசிக்கும் பூம்புகார் அ.தி.மு.க எம்.எல்.ஏ

ங்க காலச் சோழர்களின் துறைமுகமாகத் திகழ்ந்த நகரம், சிலப்பதிகாரம் பேசும் சிறப்புமிக்க வரலாற்றுப் பெட்டகம், பட்டினப்பாலை பாராட்டும் நகரம்... இப்படியெல்லாம் பார் போற்றும் காவிரிபூம்பட்டினம் என்கிற பூம்புகார் இன்றைக்கு, குடிநோயாளிகளின் திறந்தவெளி ‘பார்’ ஆக மாறியுள்ளது. எங்கு பார்த்தாலும் காலியான மது பாட்டில்கள், குப்பைகள், முட்புதர்கள் என்று பொலிவிழந்து கிடக்கிறது, நமது வரலாற்றுப் பொக்கிஷம்!

1972-ம் ஆண்டு கண்ணகிக்கு பூம்புகாரில் சிலை அமைத்து, சிலப்பதிகாரக் கலைக்கூடம், நீச்சல் குளம், கிளிஞ்சல் வடிவில் தங்கும் விடுதிகள், சிறுவர் பூங்கா ஆகியவற்றை அமைத்து சுற்றுலா நகரமாக்கினார், அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி. ஆரம்ப நாள்களில் முறையாகப் பராமரிக்கப்பட்டுவந்த இவை,  இப்போது சின்னாபின்னமாகிக்கிடக்கின்றன.

இது தமிழக முதல்வரின் அலட்சியமே!

சுனாமி தாக்குதலில்கூட, கடற்கரை ஓரம் இருந்த கண்ணகி சிலை கொஞ்சமும் பாதிக்கப்படாமல், கம்பீரமாகக் காட்சியளித்தது. ஆனால், தற்போது சிலை இருக்கும் இடம் பழுதடைந்து, அங்கு குப்பைகள் நிரம்பிக்கிடக்கின்றன. சிலையைச் சுற்றி வைக்கப்பட்டுள்ள பூச்செடிகள் பராமரிக்கப்படாததால், அந்த இடமே புதர் மண்டிக் காணப்படுகிறது. கண்ணகி சிலைக்கு, முன்பு மாதத்துக்கு ஒருமுறை நடைபெற்ற பூஜைகூட தற்போது நடைபெறுவதில்லை. அதேபோன்று, நீச்சல்குளமும் குப்பைகளால் நிரம்பி, அசுத்தமான நீருடன் இருக்கிறது. நீச்சல்குளத்தை ஒட்டியுள்ள கட்டடம் சமூக விரோதிகளும், பாலியல் வேட்கையைத் தணித்துக்கொள்ள வருவோரும் பதுங்கும் மறைவிடமாக மாறிவிட்டது. சுற்றுலாப் பயணிகள் சுற்றிப்பார்க்கச் சென்றால், முகம் சுளித்துத் திரும்ப வேண்டியிருக்கிறது.

கண்ணகி சிலைக்கு வலதுபுறமாக சிறுவர்களுக்கான பூங்கா இருந்த இடம், முற்றிலும் சிதைந்துவிட்டது. விளையாட்டுச் சாதனங்கள் உடைந்த நிலையில் கிடக்கின்றன. பூம்புகாருக்குச் சுற்றுலா வரும் பயணிகள் தங்குவதற்காக அரசு சார்பில் கட்டப்பட்ட தங்கும் விடுதிகள் பாழடைந்துகிடக்கின்றன. இதனால், சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாகக் குறைந்துவருகிறது. சுற்றுலாப் பயணிகளை நம்பிப் பிழைப்பு நடத்தும் மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகிவிட்டது.

இது தமிழக முதல்வரின் அலட்சியமே!

பூம்புகார் மக்களிடம் பேசினோம். “இங்கு சுற்றுலாத்துறை முற்றிலுமாகச் செயலிழந்துகிடக்கிறது. மாதச்சம்பளம் வாங்கும் நாள் அன்று மட்டும்தான் அலுவலர்கள் முதல் ஊழியர்கள்வரை அங்கு வருவார்கள். இரவு நேரத்தில் சரியான மின்விளக்கு வசதிகூட கிடையாது. துப்புரவுப் பணிகள் நடைபெறாமல், எங்கு பார்த்தாலும் குப்பைகள் சூழ்ந்து... நாற்றம் எடுக்கும் நகரமாக இது மாறிவிட்டது. இதனால், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடனும் மனவேதனையுடனும் திரும்பிச் செல்கின்றனர்” என்றனர்.

சுற்றுலாத்துறை அலுவலர் மாதவனைச் சந்திக்கச் சென்றால், அலுவலகம்  பூட்டியே கிடக்கிறது. தொலைபேசியில் அவரைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தும் பயனில்லை. எனவே, இது குறித்து பூம்புகார் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான பவுன்ராஜிடம் கேட்டோம்.

இது தமிழக முதல்வரின் அலட்சியமே!

அவர், “பூம்புகாரின் இந்த அவலங்கள் பற்றிச் சட்டமன்றத்தில் மூன்றுமுறை பேசியிருக்கிறேன். தமிழக அரசு சார்பில் பூம்புகார் வளர்ச்சிப் பணிகளுக்காக இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் பூம்புகாரை சார்ந்த சுற்றுலாத்துறை அலுவலர்களின் அலட்சியத்தால் அந்த நிதி கிடப்பில் போடப்பட்டுள்ளது. பூம்புகாரை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பலமுறை சுற்றுலாத் துறை அமைச்சரிடம், இதுகுறித்து நான் பேசியும், அவர் செவிசாய்க்கவில்லை. அங்கிருக்கும் பயணியர் தங்கும் விடுதி மற்றும் கட்டடங்கள் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் வருகின்றன. அந்தத் துறை, முதல்வரின் இலாகா என்பதால் அவரிடமே இதுகுறித்து பலமுறை வலியுறுத்தியுள்ளேன். இருந்தாலும்  பூம்புகாரின் வளர்ச்சிக்கு எந்த ஒரு நடவடிக்கையையும் முதல்வர் எடுக்கவில்லை. பூம்புகாரின் இன்றைய அவல நிலைக்குக் காரணம் சுற்றுலாத்துறை அமைச்சரும், முதல்வரும்தான். இவர்கள் இருவரும் விரைந்து நடவடிக்கை எடுத்து, பொலிவிழந்து இருக்கும் பூம்புகாருக்கு புத்துயிர் அளிக்க வேண்டும்” என்றார்.

பூம்புகார், தமிழர்களின் அடையாளம். அதை இவர்கள் எப்போது புரிந்துகொள்ளப்போகிறார்கள்?

 - ம.ஹரீஷ்

படங்கள்: பா.பிரசன்னா