`குக்கர் சின்னம் கிடைக்கும்; தேர்தலில் வெற்றி பெறுவோம்!'- தங்க தமிழ்ச்செல்வன் | Thanga tamil selvan slams ADMK Party

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (08/02/2019)

கடைசி தொடர்பு:16:20 (08/02/2019)

`குக்கர் சின்னம் கிடைக்கும்; தேர்தலில் வெற்றி பெறுவோம்!'- தங்க தமிழ்ச்செல்வன்

``குக்கர் சின்னம் எங்களுக்குக் கிடைக்கும். அதில்தான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம்'' என்று அ.ம.மு.க-வின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

நிர்வாகிகளுடன் தங்க தமிழ்ச்செல்வன்

தஞ்சாவூர் அருகே உள்ள ஒரத்தநாடு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்த தங்க.தமிழ்செல்வன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ``அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணி வைப்பது உறுதி என நாங்கள் நான்கு மாதத்துக்கு முன்பே கூறி வருகிறோம். பா.ஜ.கவின் அதட்டலுக்கும், உருட்டலுக்கும் அ.தி.மு.க அடிபணிந்து போக வேண்டும். அதற்காக கூட்டணியில் இருந்தாக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். பா.ஜ.கவுடன் கூட்டணி என்பதை ஏன் பரம ரகசியம் என ஓபிஎஸ் கூறுகிறார். அதனை வெளிப்படையாகவே சொல்லலாம்.

தங்க தமிழ்ச்செல்வன்

அ.தி.மு.கவில் இருந்த 90 சதவிகித பேர் இப்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் உள்ளனர். குறிப்பாக மூன்றில் ஒரு பங்கு இளைஞர்கள் அ.ம.மு.கவில் இருப்பதோடு அ.ம.மு.க ஆட்சிக்கு வரவேண்டும் எனவும் விரும்புகிறார்கள். வந்தால் நல்லது நடக்கும் என்றும் நம்புகிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் சில மாநிலக் கட்சிகளுடன் கூட்டணிக்கு குறித்து பேசி வருகிறோம். வந்தால் கூட்டணி சேர்ந்து தேர்தலில் போட்டியிடுவோம். இல்லை என்றால் தனித்து நின்று வெற்றி பெறுவோம். எங்களுக்கு எதிரி தி.மு.க தான். ஒருபோதும் நாங்கள் தி.மு.கவுடன் கூட்டணி வைக்க மாட்டோம். எந்தக் கட்சியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் முழுமை அடையவில்லை.

குக்கர் சின்னத்தை உலக அளவில் பிரபலமடைய செய்த ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் இருவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். டெல்லியில் நீதிமன்றம் அ.ம.மு.கவையும், குக்கர் சின்னத்தையும் நாங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தீர்ப்பளித்தது. இதை அப்படியே விட்டிருந்தால் குக்கர் இந்த அளவிற்கு பிரபலம் ஆகியிருக்காது. ஆனால் அ.தி.மு.க மேல் முறையீடு செய்து பிரபலமடைய வைத்துவிட்டது. அ.தி.மு.க-வுக்கு குக்கர் சின்னத்தைப் பார்த்து பயம். அதனால்தான் எங்களுக்கு குக்கர் கிடைக்காமல் இருப்பதற்கு வழக்கை நடத்துகிறார்கள். அவர்களுக்குத்தான் இரட்டை இலை இருக்கிறதே, அப்புறம் என்ன. எங்களுக்கு எந்தச் சின்னம் கிடைத்தால் என்ன என்று விட்டுவிட வேண்டியதுதானே. குக்கர் மேல் உள்ள பயத்தில்தான் இதையெல்லாம் செய்கிறார்கள். எங்களுக்கு குக்கர் சின்னம் கிடைக்கும். அந்தச் சின்னத்தில்தான் நாங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம், வெற்றியும் பெறுவோம்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க