Published:Updated:

டெல்லியை அதிரவைக்கப்போகும் சந்திரபாபு நாயுடு!- மோடிக்கு எதிராக புது அஸ்திரம்

டெல்லியை அதிரவைக்கப்போகும் சந்திரபாபு நாயுடு!- மோடிக்கு எதிராக புது அஸ்திரம்
டெல்லியை அதிரவைக்கப்போகும் சந்திரபாபு நாயுடு!- மோடிக்கு எதிராக புது அஸ்திரம்

ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி தேசியக் கட்சிகள் முதல் மாநிலக் கட்சிகள் அனைவரும் தேர்தல் வியூகம், கூட்டணி போன்ற பல்வேறு ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் பா.ஜ.க இல்லாத எதிர்க்கட்சிகள் அனைவரும் ஓர் அணியில் இணைந்துள்ளனர். வரும் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற கூடாது என்ற ஒரே நோக்கத்தில் அனைத்துக் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் வரும் 11-ம் தேதி மத்திய அரசுக்கு எதிராக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் மிகப்பெரும் போராட்டத்தை நடத்தவுள்ளார். இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக தன் மாநிலத்திலிருந்து பொதுமக்களை அழைத்துச் செல்ல இரண்டு ரயில்களை முன்பதிவு செய்துள்ளார்.  ரயில்களுக்கு வாடகையாக ரூ.1.12 கோடி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது

ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் நிறுத்திப் போராட்டம் நடத்தவே ஆந்திர மக்கள் டெல்லி செல்லவுள்ளனர். இந்த ரயில்களை வாடகைக்கு எடுக்க ஆந்திர அரசே நிதி ஒதுக்கி மத்திய ரயில்வே துறையிடமிருந்து 20 பெட்டிகள் கொண்ட ரயில்களை முன்பதிவு செய்துள்ளது. ஆந்திராவின் அனந்தாபூர் மற்றும் ஸ்ரீகாகுளம் பகுதிகளிலிருந்து புறப்படும் ரயில்கள் நாளை காலை 10 மணிக்கு டெல்லி சென்றடையும்.

ஆந்திர முதல்வரின் இந்தப் போராட்டத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள், தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் எனப் பல ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். நாளை பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள ஆந்திரா வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.