Published:Updated:

‘இணைந்து செயல்பட்டால் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது’ - சேலத்தில் ஸ்டாலின் பேச்சு

ஸ்டாலின்

‘இணைந்து செயல்பட்டால் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது’ -  சேலத்தில் ஸ்டாலின் பேச்சு
‘இணைந்து செயல்பட்டால் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது’ - சேலத்தில் ஸ்டாலின் பேச்சு

ஆதித்தமிழர் பேரவையின் வெள்ளிவிழா மாநாடு நேற்று சேலம் மகுடஞ்சாவடியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னிலையில்  ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் அதியமானும், கொங்குநாடு மக்கள் கட்சியின் தலைவர் ஈஸ்வரனும் திமுகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது.

‘இணைந்து செயல்பட்டால் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது’ -  சேலத்தில் ஸ்டாலின் பேச்சு

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இந்த புதிய இணைப்பு கூட்டணிக்கு அச்சாரமாக இருந்தது. கொங்கு மண்டலத்தில் இரு பெரும் சமூகமான அருந்ததியர்கள், கொங்கு வேளாளர்களின் ஓட்டுகளை மையப்படுத்தியே இந்த மாநாடு நடைபெற்றது.

இதில் பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன், ''அருந்தியர் மக்கள் அரசியல் எழுச்சி பெற வேண்டும். எழுச்சி என்பது ஒற்றுமையைக் குறிப்பிடுகிறேன். ஈரோடு தி.மு.க மாநாட்டில் ஸ்டாலின், கொங்கு மண்டல வளர்ச்சிக்குக் கொங்கு வேளாளர் சமூகத்தின் உழைப்பு முக்கியம் என்றார். அன்றே நான் யோசித்தேன். இதில் அருந்ததியர்களின் பங்கும் உண்டு. நாம் இணைந்து பயணித்தால் முன்னேற முடியும்'' என்றார்.

ஆதி தமிழர் பேரவையின் தலைவர் அதியமான், '' அருந்தியர் மக்களுக்கு இடஒதுக்கீட்டில் 3% உள் ஒதுக்கீடு வழங்கியதும், கொங்கு வேளாளர் சமுதாயத்தை முன்னேறிய சமுதாயத்தில் இருந்து பிற்படுத்தப்பட்ட சமுதாயமாக மாற்றியதாலும் இரு சமூகமும் தி.மு.க.,விற்கு கடமைப் பட்டிருக்கிறது. அதனால் வரும் தேர்தலில் நன்றிக் கடன் செலுத்த வேண்டும்'' என்றார்.

இறுதியாகப் பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், ''நம் கட்சிகள் தான் வேறு. கொள்கை ஒன்றே. நாம் சாதி மதங்களைக் கடந்து தமிழர்களாக ஒன்றிணைந்து இருக்கிறோம். தேர்தல் வருவதால் மோடி அடிக்கடி தமிழ்நாடு வந்து காலூன்ற போவதாகச் சொல்லுகிறார்கள். மோடி தலைமையிலான மத்திய அரசையும், கொள்ளை ஆட்சி செய்கிற எடப்பாடி ஆட்சியையும் நாம் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். கலைஞர் சொல்லுவார்  ‘சதிக்கு இடையில் கால் முளைத்துச் சாதி ஆனது என்றும், தி நெடிலாகித் தீ ஆனது’ என்ற வேறுபாடுகளையும், மாறுபாடுகளையும் உணர்ந்து தமிழினமாக உணர்ந்து செயல்பட்டால் நம் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது'' என்றார்.