Published:Updated:

`ஏற்கெனவே இருக்கும் இடஒதுக்கீடுக்கு பாதிப்பு வராது! - திருப்பூர் பிரசார மேடையில் உறுதியளித்த மோடி! #LiveUpdates

`ஏற்கெனவே இருக்கும் இடஒதுக்கீடுக்கு பாதிப்பு வராது! - திருப்பூர் பிரசார மேடையில் உறுதியளித்த மோடி!  #LiveUpdates
`ஏற்கெனவே இருக்கும் இடஒதுக்கீடுக்கு பாதிப்பு வராது! - திருப்பூர் பிரசார மேடையில் உறுதியளித்த மோடி! #LiveUpdates

தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி ``காவிரி, பவானி, அமராவதி, வைகை ஓடும்  பூமியில் வாழும் தமிழ் சகோதர சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் வணக்கம்’’ எனத் தமிழில் தன் உரையைத் தொடங்கி பேசினார்.

* மேலும் பேசிய மோடி  ‘இந்த திருப்பூர் மண்ணுக்கு நான் தலை வணங்குகிறேன். இது துணிச்சலுக்கான தைரியத்துக்கான மண். இங்கு திருப்பூர் குமரன், தீரன் சின்னமலையின் தைரியம் இந்த நாட்டு மக்களுக்குப் பெரிய உத்வேகத்தை வழங்கிக்கொண்டிருக்கிறது.  நாம் தொழில் முனைப்பு பற்றி சொல்லும் போது சமீபத்தில் நடக்கும் ஒரு விஷயத்தைக் குறிப்பிடவேண்டும். சமீபத்தில் 'மீண்டும் நமோ (Namo Again)’  என்ற வாசகங்களைத் தாங்கிய டி-ஷர்டுகளும், தொப்பிகளும் பிரபலமாகிக்கொண்டிருக்கின்றன. அது இந்த திருப்பூர் மண்ணில் இருதுதான் உற்பத்தி செய்யப்படுகிறது’’ என்றார் பெருமிதத்துடன். 

*`நான் இப்போது பல திட்டங்களைத் தொடங்கி வைத்துவிட்டு வருகிறேன். திருச்சியில் அதிக போக்குவரத்து இருக்கும் திருச்சி விமான நிலையத்தில் 500 பேர் தான் முழு வசதிகளைப் பெறமுடியும். ஆனால் இப்போது நான் ஒருங்கிணைந்த திருச்சி விமான நிலையத்துக்காக அடிக்கல் நாட்டி வந்திருக்கிறேன். இது கட்டி முடிக்கும் 300 பயணிகள் ஒரே நேரத்தில் வசதிகளைப் பெறமுடியும். நம் நாட்டு மக்கள் அனைவரின் வாழ்வைச் சுலபமாக்கும் பணிகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது. தற்போது திருப்பூரிலும், சென்னையிலும் இ.எஸ்.ஐ.சி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். அதேபோல் சென்னை விமான நிலையத்துக்கு புதிய வசதிகளை ஏற்படுத்தித் தரும் திட்டம் தொடங்கப்படவுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 

சென்னை முதல் மணலி வரை எண்ணெய் கொண்டு செல்ல புதிய பைப் லைன் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தமிழக மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும். அனைவருக்கும் சமமான வாய்ப்பு தர வேண்டுமென்ற நோக்கில் 10% இடஒதுக்கீடு கொண்டு வந்தது அரசு. ஏற்கெனவே இருக்கும் இடஒதுக்கீடு எந்தவிதத்திலும் பாதிக்காது என உறுதி அளிக்கிறேன்’ என்றார். 

*நலத்திட்டங்களை தொடங்கிவைத்த பின்னர் பா.ஜ.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் மோடி கலந்துகொண்டார். அங்கு அவருக்கு பாஜக சார்பில் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

*பிரதமரை வரவேற்றுப் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை, ‘பாஜக தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது கால் எங்கே எனக் கேட்கிறார்கள். இங்கே எங்கள் தொண்டர்கள் ஆல விருட்சமாகத் தமிழக மக்களுக்கு நிழல் தருவார்கள். திமுகவினர் சொல்வார் சொல்வார்கள் விவசாயிகளைப் பற்றி பிரதமருக்கு இப்போதுதான் நினைவு வருகிறது எனக் கூறுகிறார்கள். அது இல்லை பிரதமர் விவசாயிகளின் தோழன் என்பதை இந்தக் கூட்டத்துக்கு இவ்வளவு விவசாயிகள் வந்து நிரூபித்து விட்டார்கள். மோடிக்கு நமது நன்றியை தெரிவித்துக் கொள்வோம். ‘ வேண்டும் மோடி, மீண்டும் மோடி’ எனத் தெரிவித்தார்.

* சென்னை கே.கே. நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள இ.எஸ்.ஐ.சி மருத்துவமனை மற்றும் திருப்பூர்  மருத்துவமனை  ஆகியவற்றை  திறந்துவைத்தார் பிரதமர் மோடி.  மேலும் சென்னை வண்ணாரப்பேட்டை - டி.எம்.எஸ் இடையே புதிய மெட்ரோ ரயில் சேவையை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் . ரமக்குடி- தனுஷ்கோடி இடையே 4 வழிப்பாதை, ராமேசுவரம் -தனுஷ்கோடி ரயில் பாதை ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.  

* கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் வந்தடைந்தார் பிரதமர் மோடி. திருமுருகன் காந்தி, கொளத்தூர் மணி உள்ளிட்டவர்கள் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம். திருப்பூர் டவுன் ஹால் பகுதியில் போராட்டம் நடைபெறுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

* தமிழகத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைப்பதற்காக கோவை வந்தடைந்தார் பிரதமர் மோடி. அவரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டவர்கள் விமான நிலையத்தில் வரவேற்றனர். 

வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பல மாநிலங்களில் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் பிரதமர் மோடி. அந்த வகையில் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு தமிழகம் வருகைதரவுள்ளார்.  முதலில் தனி விமானம் மூலம் கோவை வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் சென்று அங்கு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

அங்கு இருந்த படியே சென்னை வண்ணாரப்பேட்டை - டி.எம்.எஸ். இடையே புதிய மெட்ரோ ரயில் சேவையை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். பிறகு பரமக்குடி- தனுஷ்கோடி இடையே 4 வழிப்பாதை, ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதை ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.  இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் போன்ற பல முக்கிய தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். 

அரசு திட்ட பணிகளைத் தொடங்கிவைத்த பின்னர் பாஜக சார்பில் திருப்பூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.  இதற்கிடையில் இன்று பிரதமர் மோடி பங்கேற்கும் பிரசார பொதுக்கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், பிரதமர் மோடி  வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து  ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கறுப்புக்கொடி ஏந்தியும்,மோடிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வைகோ ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது பா.ஜ.க மகளிரணியைச் சேர்ந்த சசிகலா என்ற பெண்மணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் நுழைந்து ’பாரத் மாதா கி ஜே’ என முழக்கமிட்டார். இதனால் கோபமடைந்த ம.தி.மு.க கட்சி தொண்டர்கள் அப்பெண்மணி மீது தாக்குதலில் ஈடுபடத் தொடங்கியதால் போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.