Published:Updated:

RTI அம்பலம்: எப்படி இருக்கின்றன தாய்மார்கள் பாலூட்டும் அறைகள்?

RTI அம்பலம்: எப்படி இருக்கின்றன தாய்மார்கள் பாலூட்டும் அறைகள்?
பிரீமியம் ஸ்டோரி
RTI அம்பலம்: எப்படி இருக்கின்றன தாய்மார்கள் பாலூட்டும் அறைகள்?

- நேரடி மற்றும் ஆர்.டி.ஐ ஆய்வு...

RTI அம்பலம்: எப்படி இருக்கின்றன தாய்மார்கள் பாலூட்டும் அறைகள்?

- நேரடி மற்றும் ஆர்.டி.ஐ ஆய்வு...

Published:Updated:
RTI அம்பலம்: எப்படி இருக்கின்றன தாய்மார்கள் பாலூட்டும் அறைகள்?
பிரீமியம் ஸ்டோரி
RTI அம்பலம்: எப்படி இருக்கின்றன தாய்மார்கள் பாலூட்டும் அறைகள்?

‘அம்மாவின் வழியில் ஆட்சி செய்கிறோம்’ என்கிறார்கள் இந்த ஆட்சியாளர்கள். ஆனால், ஜெயலலிதா தொடங்கிவைத்த பெரும்பாலான திட்டங்கள் கவனிப்பாரின்றிக் கிடக்கின்றன. ‘குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்காக பேருந்து நிலையங்களில் தனியறை வேண்டும்’ என்ற நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, 2015-ம் ஆண்டில் பல்வேறு நகரங்களின் பேருந்து நிலையங்களில் பாலூட்டும் அறைகளை அமைத்தார் ஜெயலலிதா. ஆனால், பல இடங்களில் அவை கவனிப்பாரின்றி, பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமான நிலையில் உள்ளன. இதுகுறித்து புகார்கள் வரவே, ஜூ.வி தகவல் உரிமைச் சட்டக் குழுவும், நிருபர்கள் குழுவும் களமிறங்கி தகவல்களைத் திரட்டியது. அதன் ரிப்போர்ட் இதோ...

RTI அம்பலம்: எப்படி இருக்கின்றன தாய்மார்கள் பாலூட்டும் அறைகள்?

2015 ஆகஸ்ட் 3-ம் தேதி சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பாலூட்டும் அறையைத் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி திறந்துவைத்தார், அன்றைய முதல்வர் ஜெயலலிதா. தமிழ்நாட்டில் மொத்தம் 352 பேருந்து நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. நமது குழுவின் மூலம் திருநெல்வேலி, திருச்சி, திருப்பூர் ஆகிய மாநகராட்சிகள் மற்றும் எடப்பாடி, கரூர், நாகர்கோவில் ஆகிய நகராட்சிகளில் உள்ள பாலூட்டும் மையங்கள் குறித்துத் தகவல்களைப் பெற்றோம். சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் அனைத்துமே சொல்லி வைத்ததுபோல ஒரேமாதிரியாகக் கொடுத்துள்ள பதிலில், ‘பாலூட்டும் தாய்மார்களுக்காகக் கட்டப்பட்ட அறைகள், நல்ல முறையில் பயன்பாட்டில் உள்ளன’ என்று சொல்லப்பட்டுள்ளது. நமக்கு வந்த புகார்கள் மற்றும் தகவல்களும் அரசுத் தரப்பின் பதில்களும் முரண்பாடாக இருக்கவே, பிரச்னைக்குரிய இடங்களில் தற்போதைய நிலைமையை நேரடியாகப் பார்வையிட்டோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

RTI அம்பலம்: எப்படி இருக்கின்றன தாய்மார்கள் பாலூட்டும் அறைகள்?

• முதலில் நாம் சென்றது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடி. பாலூட்டும் அறையைத் தேடவேண்டியிருக்கிறது. இதோ ஒருவழியாகக் கண்டுபிடித்துவிட்டோம். பேருந்து நிலையத்தின் ஒரு மூலையில் இருக்கும் சிறு அறைக்கு பெயின்ட் அடித்து, பாலூட்டும் அறை என்று பலகையை மாட்டி வைத்திருக்கிறார்கள். அறைக்கு முன்பாக அருகில் இருக்கும் ஓர் உணவகத்தினர் விறகுகளைக் குவித்துவைத்திருக்கிறார்கள். அதனால், உள்ளே செல்ல வழியே இல்லை. அக்கம்பக்கத்தில் பேசினோம். “ஆரம்பத்தில் பேருந்து நிலையத்தின் முன்பக்கத்திலேயே பாலூட்டும் பெண்களுக்காகப் பெரிய அறையை அனைத்து வசதிகளுடன் கட்டியிருந்தார்கள். பெண்களும் அதைப் பயன்படுத்தியபடிதான் இருந்தார்கள். ஆனால், பேருந்து நிலையத்தில் வணிக வளாகம் கட்டுவதற்காக அதை இடித்துவிட்டு, இப்போது இந்த மூலையில் இருக்கும் அறையில் போர்டு மாட்டி வைத்துவிட்டார்கள். அதைப் பராமரிப்பதும் இல்லை. அதனால், பெண்கள் அதைப் பயன்படுத்துவதும் இல்லை. முதலில் இந்த அறையைப் பெண்கள் தேடிக் கண்டுபிடிப்பதே பெரும் சிரமமாக இருக்கிறது” என்றார்கள். முதல்வரின் தொகுதியிலேயே இதுதான் லட்சணம்!

RTI அம்பலம்: எப்படி இருக்கின்றன தாய்மார்கள் பாலூட்டும் அறைகள்?

• திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் உள்ள காத்திருப்போர் அறைக்கு அருகில் ஒரு பாலூட்டும் அறையும், சத்திரம் பேருந்து நிலையத்தில் ஒரு பாலூட்டும் அறையும் கட்டப்பட்டுள்ளன. 4.25 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த அறைகளில், இரண்டு பணியாளர்கள் பணியாற்றுவதாகவும், அவை நல்ல முறையில் பயன்பாட்டில் உள்ளதாகவும் திருச்சி மாநகராட்சி சார்பில் சொல்லப்படுகிறது. ஆனால், அந்த அறைகள் பல மாதங்களாகப் பூட்டியே கிடக்கின்றன. மத்தியப் பேருந்து நிலையத்தில் விசாரித்தபோது, ‘மாடியில் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில்தான் பாலூட்டும் அறையின் சாவி இருக்கிறது’ என்றார்கள். அங்கு ஒரு மணி நேரம் காத்திருந்தும் சாவி கிடைக்கவில்லை.

• நாகர்கோவிலில், அண்ணா பேருந்து நிலையத்தில் பாலூட்டும் அறை அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் செயல்பாட்டிலிருந்த இந்த அறை, காலப்போக்கில் பராமரிப்பின்றி பாழடைந்துகிடக்கிறது. இருக்கைகள் தூசுபடிந்துள்ளன. குடிநீர் சுத்திகரிப்புச் சாதனம் உடைந்துகிடக்கிறது. கதவுகள் பூட்டமுடியாத நிலையில் இருக்கின்றன. கதவின் முன்பாகப் பயணிகளுக்கான இருக்கைகள் இருக்கின்றன. அவற்றில் பயணிகள் அமர்ந்திருக்கும்போது, பெண்கள் தனியாக அறைக்குள் செல்லத் தயங்கும்நிலைதான் உள்ளது. மொத்தத்தில், தாய்மார்கள் உபயோகப்படுத்த முடியாத நிலையில்தான் நாகர்கோவில் பாலூட்டும் அறைகள் உள்ளன.

RTI அம்பலம்: எப்படி இருக்கின்றன தாய்மார்கள் பாலூட்டும் அறைகள்?

• கரூர் மற்றும் குளித்தலை நகராட்சிகளில் உள்ள பேருந்து நிலையங்களில் பாலூட்டும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. கரூர் பேருந்து நிலையத்தின் நடுவில் இருக்கிறது, பாலூட்டும் அறை. அறைக்குள் இரண்டு மின்விசிறிகள், அமர்ந்து பாலூட்டுவதற்கு ஏதுவாக இருக்கைகள் இருக்கின்றன. ஓரளவுக்கு தூய்மையாகவும் இருந்தது. ஆனால், மாலை ஆறு மணிக்கு மேல் இந்த அறையைப் பூட்டிவிடுகிறார்கள் என்ற புகார் இருக்கிறது. “பாதுகாவலர்களை நியமித்து, இரவு நேரத்திலும் பாலூட்டும் அறையைத் திறந்துவைத்தால் வசதியாக இருக்கும்’’ என்கிறார்கள், தாய்மார்கள். குளித்தலையிலும் நிலைமை இதுபோல்தான் இருக்கிறது.

• குளித்தலை பேருந்து நிலையத்தில், நடுவில் இருந்த ஒரு நிழற்குடையைப் பலகைகளைக் கொண்டு மறைப்பு ஏற்படுத்தி, பாலூட்டும் அறையாக மாற்றியிருக்கிறார்கள். உள்ளே மின்விசிறி இயங்கவில்லை. அறையைச் சுற்றிப் பயணிகள் இருக்கைகள் இருப்பதால், பெண்கள் எளிதாகச் சென்று பயன்படுத்தும் நிலையில் அந்த அறை இல்லை.

RTI அம்பலம்: எப்படி இருக்கின்றன தாய்மார்கள் பாலூட்டும் அறைகள்?

• அதேசமயம் நல்லபடியாகச் செயல்படும் பாலூட்டும் அறைகளும் இருக்கின்றன. அவற்றையும் நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும். திருநெல்வேலியில், மேலப்பாளையம் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியிலிருக்கும் புதிய பேருந்து நிலையத்தின் முதலாம் நடைமேடையில் பாலூட்டும் தாய்மார்கள் அறை செயல்பட்டுவருகிறது. ரோட்டரி சங்கத்தின் பராமரிப்பில் இருக்கும் இந்த அறை, சுத்தமாக இருக்கிறது. கணிசமான அளவில் தாய்மார்கள் இந்த அறையைப் பயன்படுத்திவருகிறார்கள். இந்த மையத்திலிருந்து வெளியே வந்த சங்கரன்கோவிலைச் சேர்ந்த லட்சுமியிடம் பேசினோம். “இந்த அறை இருப்பதால், குழந்தைகளுக்குப் பாலூட்டும் என்னைப் போன்ற பெண்களுக்குப் பொது இடங்களில் சிரமம் இல்லாமல் பாலூட்ட முடிகிறது” என்றார்.

•   திருப்பூரில் நிலைமை பரவாயில்லை ரகம். பழைய பேருந்து நிலையத்தில் இருக்கிறது பாலூட்டும் அறை. தூய்மைப் பணியாளர் ஒருவரை நியமித்துப் பாலூட்டும் அறையைச் சுத்தமாக வைத்திருக்கிறார்கள். ஆனால், ஏ.சி., மின் விசிறி ஆகியவை நீண்டகாலமாகப் பழுதானநிலையில் இருக்கின்றன. குடிநீர் சுத்திகரிப்புச் சாதனத்திலும் தண்ணீர் இல்லை. கழிப்பிடத்திலும் சரியாகத் தண்ணீர் வருவதில்லை. ஆனாலும், அறை மட்டும் சுத்தமாகப் பராமரிக்கப்படுவதால், பாலூட்டும் தாய்மார்கள் இந்த அறையைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

RTI அம்பலம்: எப்படி இருக்கின்றன தாய்மார்கள் பாலூட்டும் அறைகள்?

மேற்கண்ட பாலூட்டும் அறைகள் என்பது சிறு உதாரணங்கள்தான். தமிழகத்திலுள்ள பாலூட்டும் அறைகளில் கணிசமான அளவு பராமரிப்பு இல்லாமல், பயன்படுத்த முடியாத நிலையில்தான் இருக்கின்றன. இந்தப் பிரச்னைகள் குறித்து, பாலூட்டும் அறைகளைப் பராமரிக்க வேண்டிய நகராட்சி நிர்வாகத் துறையின் முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங்கைச் சந்தித்துக் கேட்டோம். “பொதுவாக, பெரும்பாலான பாலூட்டும் அறைகள் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. புகார் வரும் இடங்களில் உடனடி நடவடிக்கையும் எடுக்கப்பட்டுவருகிறது. இப்போது உங்கள் மூலமாக சில புகார்கள் வந்துள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உடனடியாகச் சரிசெய்யப்படும்; தவறு நடந்திருந்தால் உரியவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதிகமாகப் பயன்படுத்தும் அறைகள் மூடப்படுவதில்லை. தவறான காரியங்களுக்காக யாரும் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்காக அதிகம் பயன்பாட்டில் இல்லாத அறைகள் மட்டும் இரவு நேரத்தில் மட்டும் மூடப்படுகின்றன” என்றார்.

தேர்தல் பரபரப்பில் கட்சிகள் தொடங்கி ஊடகங்கள்வரை அனைவருமே ஓடிக்கொண்டிருக்கிறோம். அதற்காக மக்களின் அடிப்படை தேவைகளை மறந்துவிடக் கூடாது. மறந்துபோவது மக்களின் இயல்பு மட்டுமன்று... ஆட்சியாளர்களின் இயல்பும்கூட. நினைவூட்டி, சுட்டிக்காட்ட வேண்டியது ஊடகத்தின் கடமை. “ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது பெண்களின் வளர்ச்சியைப் பொறுத்தது. ஆதலால், என் தலைமையிலான அரசு பெண்களுக்காகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. குறிப்பாக, பச்சிளம் குழந்தைகளுக்குப் பிறந்த ஒருமணி நேரத்திலிருந்து ஆறு மாதம்வரை தாய்ப்பால் மட்டுமே உணவாகத் தரப்பட வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு தாய்ப்பால் ஊட்டும் அன்னையருக்கு, அதற்கான வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது எனது ஆவல்” - பாலூட்டும் அறை திட்டத்தைத் தொடங்கிவைத்தபோது, ஜெயலலிதா குறிப்பிட்ட வார்த்தைகள் இவை. ஆட்சியாளர்களுக்கு நினைவுப்படுத்த வேண்டும் என்றே இதை இங்கு குறிப்பிடுகிறோம்.

- பி.ஆண்டனிராஜ், வீ.கே.ரமேஷ், சி.ய.ஆனந்தகுமார், துரை.வேம்பையன், தி.ஜெயப்பிரகாஷ், ஆர்.சிந்து, கு.துரைராஜ்

படங்கள்: என்.ஜி.மணிகண்டன், க.தனசேகரன், எல்.ராஜேந்திரன், நா.ராஜமுருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism