அரசியல்
Published:Updated:

“அமைச்சர் வீரமணி, கிருஷ்ணரைபோல எனக்கு தேரோட்டுகிறார்!” - நெஞ்சம் உருகும் ஏ.சி.சண்முகம்...

“அமைச்சர் வீரமணி, கிருஷ்ணரைபோல எனக்கு தேரோட்டுகிறார்!” - நெஞ்சம் உருகும் ஏ.சி.சண்முகம்...
பிரீமியம் ஸ்டோரி
News
“அமைச்சர் வீரமணி, கிருஷ்ணரைபோல எனக்கு தேரோட்டுகிறார்!” - நெஞ்சம் உருகும் ஏ.சி.சண்முகம்...

“அமைச்சர் வீரமணி, கிருஷ்ணரைபோல எனக்கு தேரோட்டுகிறார்!” - நெஞ்சம் உருகும் ஏ.சி.சண்முகம்...

அ.தி.மு.க கூட்டணியில், புதிய நீதிக்கட்சிக்கு வேலூர் நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்தை எதிர்த்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். ‘காஸ்ட்லி’ வேட்பாளர் என்று கருதப்படும் ஏ.சி.சண்முகத்தைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘கடந்த தேர்தலில், இதே தொகுதியில் தாமரைச் சின்னத்தில் போட்டியிட்டீர்கள். இம்முறையோ, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறீர்கள். ஏன் கூட்டணிக் கட்சியான பி.ஜே.பி-யின் தாமரை சின்னம் மீது நம்பிக்கை இல்லையா?

‘‘இரட்டை இலை சின்னம், என் தாய்வீட்டுச் சீதனம். அ.தி.மு.க-விலிருந்து விலகி முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தனிக்குடித்தனம் நடத்திக்கொண்டிருக்கிறேன். ஆரணி சட்டமன்றத் தொகுதி மற்றும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிகளில் ஏற்கெனவே இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளேன். தாய் கழகத்தில் மீண்டும் இணைந்ததால், இரட்டை இலை சின்னத்தை ஆவலுடன் கேட்டுப் பெற்றிருக்கிறேன்.’’

“அமைச்சர் வீரமணி, கிருஷ்ணரைபோல எனக்கு தேரோட்டுகிறார்!” - நெஞ்சம் உருகும் ஏ.சி.சண்முகம்...

‘‘அமைச்சர் கே.சி.வீரமணி உங்கள் வெற்றிக்காகப் பாடுபடுவாரா?’’

‘‘அமைச்சர் வீரமணி, கிருஷ்ணரைப்போல எனக்கு தேரோட்டுகிறார். வேலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளராகவும் வீரமணி இருப்பதால், இந்த வெற்றி அவரது வெற்றி. எனக்காக சுற்றிச்சுழன்று சுறுசுறுப்புடன் பணியாற்றிவருகிறார் அவர். தவிர, இந்தத் தொகுதி அ.தி.மு.க-வின் கோட்டை. அதனால்தான், கடந்த முறை என்னை சில ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, அ.தி.மு.க வெற்றிபெற்றது. தி.மு.க மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. இந்த முறை, அ.தி.மு.க-வுடன் கைகோத்து வலிமையான கூட்டணியில் போட்டியிடுகிறேன். கண் முன்பாக வெற்றி வாய்ப்பு பிரகாசமாகத் தெரிகிறது.’’

‘‘தாமரை, இஸ்லாமியர்களுக்கு எதிரான சின்னம் என்று சமீபத்தில் நீங்களே சொல்லியிருக்கிறீர்கள். அதற்கான காரணம்?’’

‘‘இங்குள்ள இஸ்லாமிய மக்கள் பொதுவாகவே, தாமரையை விரும்புவதில்லை. அதைத்தான் பொதுவாகச் சொன்னேன். மற்றபடி அதில் உள்நோக்கம் எதுவும் இல்லை. அ.தி.மு.க-வும், நாங்களும் சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பாகவும், ஆதரவாகவும் இருக்கிறோம். எனக்குச் சொந்தமான டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவி மற்றும் மருத்துவக் கல்லூரியில் இயக்குநர் பொறுப்பை இஸ்லாமியர்களுக்குத்தான் வழங்கியிருக்கிறேன். என்னை, அந்தச் சமூக மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். மற்ற கட்சிகளைவிட இஸ்லாமிய சமூக வாக்குகள் எனக்கு அதிகமாகவே கிடைக்கும்.’’

‘‘சாதி வாக்குகளை மையமாகப் பார்க்கிறீர்களா?’’

‘‘நிச்சயமாக இல்லை. நான், திராவிட இயக்கத்தைச் சார்ந்தவன். என் கட்சியில் குறிப்பிட்ட ஒரு சமூக மக்கள் பெரும்பான்மையாக இருப்பதால், அப்படிச் சொல்கிறார்கள். பா.ம.க-விலும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் பதவியில் இல்லை. வேறு சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பல்வேறு பொறுப்புகளில் இருக்கிறார்கள்.’’

‘‘தி.மு.க பொருளாளர் துரைமுருகன், ‘மகனின் வெற்றி தோல்வி என் கௌரவம். இந்த தேர்தல் வாழ்வா... சாவா... பிரச்னை’ என்று கூறியிருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘அண்ணன் துரைமுருகன், அறுபது ஆண்டுக்காலம் அரசியல் அனுபவம் கொண்ட தலைவர். வெற்றி தோல்வியை சீரியஸாக எடுத்துக்கொண்டு உணர்ச்சிவசப்பட்டு, அவர் பேசிய வார்த்தைகள் சரியல்ல. துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த், இப்போதுதான் நேரடி அரசியலுக்கு வந்திருக்கிறார். தி.மு.க நிர்வாகிகள் சிலர் என்னிடம் பேசினார்கள். ‘வாரிசு அரசியலை நாங்கள் விரும்ப வில்லை’ என்று அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். கதிர் ஆனந்த் எனக்கு கடும் போட்டி கொடுப்பார் என்று எனக்குத் தெரியும். ஆனாலும், எளிதாக நான் வெற்றி பெற்றுவிடுவேன்.’’

“அமைச்சர் வீரமணி, கிருஷ்ணரைபோல எனக்கு தேரோட்டுகிறார்!” - நெஞ்சம் உருகும் ஏ.சி.சண்முகம்...

“பி.ஜே.பி உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்ன?’’

‘‘கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவது, பி.ஜே.பி-யின் கொள்கை. கடந்தமுறை வாய்ப்பு தவறிவிட்டது. இந்தமுறை வெற்றிபெற்றால் கண்டிப்பாக கேபினட் அமைச்சரைவில் இடம்பெறுவேன். வேலூர் தொகுதிக்கு மட்டுமல்லாமல், தமிழகத்தின் நலன் சார்ந்த பல திட்டங்களைக் கொண்டுவருவேன்.’’

‘‘ஆனால், பி.ஜே.பி - அ.தி.மு.க கூட்டணிமீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறதே?’’

‘‘கடந்த தேர்தலில் மோடி அலை இருந்தது. தமிழக மக்களும் மோடியை விரும்பினார்கள். ஆனால், பி.ஜே.பி தலைமையிலான கூட்டணி நாற்பது தொகுதிகளிலும் வெற்றிபெற முடியவில்லை. இந்த முறை மத்திய அரசின் திட்டங்களில் சில குறைகள் இருக்கலாம். ஆனால், நிறைகள் அதிகம். அதைச் சொல்லி வாக்கு கேட்போம். ’’

‘‘மஞ்சள் துண்டின் ரகசியம் என்ன?’’

‘‘ஆயிரம் தொண்டர்கள் மத்தியில் நான் இருக்கும்போது, சண்முகம் எங்கே என்று மக்கள் தேடுவார்கள். எனவே, அடையாளம் தெரிவதற்காகத்தான் மஞ்சள் துண்டைத் தோளில் போட்டுள்ளேன்.’’

‘‘நடிகர் ரஜினியின் ஆதரவு இருக்கிறதா?’’

‘‘என் குடும்பத்தில் மூத்தவராக ரஜினிகாந்த்தைப் பார்க்கிறோம். முப்பது ஆண்டுகால நண்பர் அவர். தேர்தல் பணி ஆற்றுவாரா, ஆதரவளிப்பாரா என்பதைவிட, ரஜினியின் ஆசி எனக்கு எப்போதும் இருக்கிறது.’’

- கோ.லோகேஸ்வரன்

படம்: ச.வெங்கடேசன்