Published:Updated:

விஜயகாந்த் எப்போது வருவார்... யாருடன் கூட்டணி? - விடை அளித்த எல்.கே.சுதீஷ்

விஜயகாந்த் எப்போது வருவார்... யாருடன் கூட்டணி? - விடை அளித்த எல்.கே.சுதீஷ்
விஜயகாந்த் எப்போது வருவார்... யாருடன் கூட்டணி? - விடை அளித்த எல்.கே.சுதீஷ்

``பா.ஜ.க-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவருவது உண்மைதான்'' என தே.மு.தி.க துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதை அடுத்து தேசிய, மாநில கட்சிகள் கூட்டணி விஷயத்தில் கவனத்தை திசை திருப்பியுள்ளன. தமிழகத்தில் ஏற்கெனவே தி.மு.க தலைமையில், காங்கிரஸ், வி.சி.க, ம.தி.மு.க உள்ளிட்ட ஒரு கூட்டணி உறுதியான நிலையில், அவர்களிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் அ.தி.மு.க கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தக் கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகள் இடம்பெறும் என தமிழக அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், இன்று சென்னை கோயம்பேட்டில் தே.மு.தி.க துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி விஷயங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. 

விஜயகாந்த் எப்போது நாடு திரும்புவார்?

இன்னும் இரண்டு வாரங்களில் நாடு திரும்ப வாய்ப்பு இருக்கிறது. அநேகமாக அடுத்த வார இறுதியில் அவர் தமிழகம் வரலாம்.

நாடாளுமன்றத் தேர்தல் வியூகங்கள் என்ன? எப்படித் தேர்தலை எதிர்கொள்ளப்போகிறீர்கள்?

இரண்டு மாதங்களுக்கு முன்பே கிளைக் கழகங்களை அமைப்பது, ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்பாளர்களை நியமித்து தேர்தலுக்கு ரெடியாகிவிட்டோம். கூட்டணியைப் பொறுத்தவரை எல்லா கட்சிகளுடனும் பேசி வருகிறோம். தலைவர் விஜயகாந்த் வந்தவுடன் கூட்டணி குறித்த எங்கள் குழுவின் அறிக்கையைச் சமர்ப்பிப்போம். அவர் கூட்டணி குறித்த இறுதிமுடிவை எடுப்பார். 

பா.ஜ.க-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பது உண்மையா?

ஆம் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். பா.ஜ.க மட்டுமல்ல மற்ற பல கட்சிகளுடனும் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். 

அ.தி.மு.க தரப்பிலிருந்து உங்களை அணுகினார்களா?

ஒரு கட்சி என்று இருக்கும்போது கூட்டணி குறித்துப் பேசுவது இயல்புதான். 2005-ம் ஆண்டு கட்சி ஆரம்பித்தது முதல் எங்களுடன் கூட்டணி குறித்துப் பேசாத கட்சியே கிடையாது. அப்படிப் பார்க்கும்போது இன்றளவும் பலகட்சிகளுடன் கூட்டணி குறித்துப் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். 

இனி அ.தி.மு.க-வுடன் கூட்டணி கிடையாது என்று தான் கூறிவந்தீர்கள். இப்போது மீண்டும் அவர்களுடன் கூட்டணி சேரக் காரணம் என்ன?

பேச்சுவார்த்தைதான் நடந்துகொண்டிருக்கிறது. இன்னும் இறுதிவடிவம் பெறவில்லை. இறுதி வடிவம் பெற்றால்தான் கூட்டணி அமையும். எந்த ஒரு முடிவாக இருந்தாலும் இன்னும் இரண்டு வாரங்களில் சென்னை திரும்பும் விஜயகாந்த்தான் எடுப்பார். இந்த மாத இறுதிக்குள் கூட்டணி இறுதி வடிவம் பெற்றுவிடும். 

காங்கிரஸ் அமைத்துள்ள மெகா கூட்டணியில் நீங்கள் இணைவீர்களா?

இவ்வளவு நாள் பொறுத்துக்கொண்டீர்கள். இன்னும் ஒரு 10 நாள்கள் பொறுத்துக்கொள்ளுங்கள். பத்து நாள்களில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும். 

நீங்கள் எந்தத் தொகுதியில் போட்டியிடவுள்ளீர்கள்?

விஜயகாந்த் எந்தத் தொகுதியில் வாய்ப்பு கொடுக்கிறாரோ அந்தத் தொகுதியில் நான் போட்டியிடுவேன்.