Published:Updated:

''உடை எப்போது தப்பாகும் தெரியுமா?'' பிரியங்கா காந்தியின் உடை சர்ச்சைக்கு ஜோதிமணி பதில்

''உடை எப்போது தப்பாகும் தெரியுமா?'' பிரியங்கா காந்தியின் உடை சர்ச்சைக்கு ஜோதிமணி பதில்
''உடை எப்போது தப்பாகும் தெரியுமா?'' பிரியங்கா காந்தியின் உடை சர்ச்சைக்கு ஜோதிமணி பதில்

"பிரியங்கா காந்திக்கு பெரிய இலக்குகள் இருக்கின்றன. அதனால், சாக்லேட் முகம், பைபோலார் டிஸாடர், ஜீன்ஸ் பேன்ட் மாதிரியான விமர்சனங்களை அவர் கண்டுகொள்ளவே மாட்டார்."

பா.ஜ.க-வின் எம்.பி. ஹரிஷ் திவேதி,  காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தியை, "அவருடைய தொகுதிக்கு செல்லும்போது புடவை கட்டி பொட்டோடு செல்கிறார். ஆனால், டெல்லியில் ஜீன்ஸ், டாப்புடன் இருக்கிறார்" என்று விமர்சித்திருந்தார். இதைப் பற்றி காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணியிடம் பேசினோம். காரம் சற்று அதிகமாகவே இருந்தது ஜோதிமணியின் பேச்சில்.

``ஆர்.எஸ்.எஸ். மற்றும் பி.ஜே.பியினரால், பெண்களை அவர்களின் உடலைத் தாண்டி பார்க்க முடியாது. வெறும் உடல், பிள்ளைப் பெறும் இயந்திரம், போகப் பொருள்... அவர்களுடைய சித்தாந்தத்தின் அடிப்படை இதுதான். பெண்களை அறிவுள்ளவர்களாக, சுயமாகச் சிந்திப்பவர்களாக, பல்வேறு துறைகளில் போட்டியிட்டு முன்னேறக்கூடியவர்களாக, தேசத்தின் முன்னேற்றத்தை முன்னெடுப்பவர்களாக அவர்களால் பார்க்க முடியாது; பார்க்கவும் தெரியாது.

விவசாயம் முதல் எல்லா துறைகளிலும் பெண்கள் நாட்டின் வளர்ச்சியில் பங்களிப்பாளர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்களை வக்கிரமாக, பிற்போக்குத்தனமாகத்தான் பா.ஜ.க-வினர் பார்ப்பார்கள். இது அவர்களின் சித்தாந்தம். அதனுடன், கடந்த நான்கரை வருடங்களாக மோடி இப்படிப் பாலியல் ரீதியான வசைகளையும் பேசிக்கொண்டே இருக்கிறார். முதலில் கருத்துகள் அளவில் மட்டுமே இப்படி இருந்தார்கள். இப்போது அதைப் வெளிப்படையாகப் பேசவே ஆரம்பித்துவிட்டார்கள். பெண்களைத் தவறாக சித்திரிக்கிற அவர்களுடைய இயல்பு ஒரு மன நோயாளிக்கு நிகராக இருக்கிறது. சராசரி மனநிலை உள்ளவர்கள் பெண்களை இப்படியெல்லாம் பேச மாட்டார்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்த பின்பு பெண்களை தவறாகப் பார்க்கிற தன்மையின் அளவு அதிர்ச்சி அளிக்கிற அளவுக்கு அதிகமாகிவிட்டது'' என்றவர், பிரியங்கா காந்தியின் ஆடை குறித்த விமர்சனத்துக்குப் பதிலடி கொடுக்க ஆரம்பித்தார்.

``ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியில் வைஸ் பிரசிடென்ட் ஆன காலத்திலும், இதே மாதிரியான தாக்குதல் அவருக்கு எதிராகவும் கட்டவிழ்த்து விடப்பட்டது.  பிரியங்காவை சாக்லெட் முகம் என்றதுபோல ராகுலை 'பப்பு' என்றார்கள். அவர் ஆண் என்பதால் பாலியல் வக்கிரங்கள் இல்லையே ஒழிய, தரம் தாழ்ந்த விமர்சனங்களை அவர் மீதும் வைத்தார்கள். ஒருவர் மீது பர்சனலாக விமர்சனம் வைக்கிறார்கள் என்றால், அவர்களை எதிர்கொள்ளத் திராணியற்று இருக்கிறீர்கள் என்று அர்த்தம். அவர்கள் பிரியங்கா காந்தியின் முழு நேர அரசியல் வருகை குறித்து அச்சப்படுகிறார்கள். 

என்றைக்குமே காங்கிரஸ் கட்சி, எதிராளிகளை பாலியல்ரீதியாக பேசுவதில்லை. ஏனென்றால், எங்களுக்கு நாங்கள் அரசாங்கத்துக்கு வந்தபோது, `இதையெல்லாம் செய்தோம்', மறுபடியும் ஆட்சியமைத்தால் `இதையெல்லாம் செய்வோம்' என்று சொல்வதற்கு டிராக் ரெக்கார்ட்ஸ் இருக்கின்றன. ஆனால், பி.ஜே.பிக்கு இப்படி எதுவுமே கிடையாது. 

பிரியங்கா காந்தி பாரம்பர்ய அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர். அரசியல் காரணமாக தன் குடும்பத்தில் பல இழப்புகளைச் சந்தித்தவர். பாட்டி மற்றும் அப்பாவின் கொடூரமான மரணங்களைப் பார்த்தவர். ஒவ்வொரு தலைமுறையிலும் ஒருவர் கொல்லப்படுகிற குடும்பத்திலிருந்து அரசியலுக்கு வருகிற தைரியம் எல்லோருக்கும் வந்துவிடாது. ஒரு தேசத்தின் மீதும் மக்கள் மீதும் உண்மையான அக்கறை இருப்பவர்களுக்குத்தான் இது சாத்தியம். பிரியங்கா காந்திக்கு பெரிய இலக்குகள் இருக்கின்றன. அதனால், சாக்லேட் முகம், பைபோலார் டிஸாடர், ஜீன்ஸ் பேன்ட் மாதிரியான விமர்சனங்களை அவர் கண்டுகொள்ளவே மாட்டார். 

உடை எந்த இடத்தில் தப்பாகும் தெரியுமா? தங்கத்தில் மோடி என்று எழுதி 10 லட்சத்தில் கோட் போட்டுக்கொண்டால்தான் தவறு. அப்படிச் செய்தால்தான் உடையை விமர்சனம் செய்ய வேண்டியிருக்கும். பிரியங்கா காந்தி சொந்த செலவில் ஜீன்ஸ் பேன்ட் வாங்கிப் போட்டால் இவர்களுக்கு என்ன வந்தது? 10 லட்ச ரூபாய்க்குத் தினமும் கோட் போடுகிற, டிசைனர் ஆடை உடுத்துகிற, இத்தாலியின் கண்ணாடி அணிகிற, மான்ட் பிளாங்க் பேனா வைத்திருக்கிற ஏழைத்தாயின் மகனைத் தலைவராக கொண்டிருக்கிற இவர்கள் பிரியங்கா காந்தியின் உடை பற்றிப் பேசலாமா? நேரு காலத்தில் இருந்தே கதராடைகளுக்குப் பெயர் பெற்ற அந்தக் குடும்பத்திலிருந்து வந்திருக்கிற பிரியங்கா காந்தியை இவர்கள் விமர்சனம் செய்யலாமா?'' - அழுத்தம் திருத்தமாக கேள்வி எழுப்புகிறார் ஜோதிமணி.

அடுத்த கட்டுரைக்கு