Published:Updated:

`இன்னும் கொஞ்ச காலம்தான் உயிரோடு இருப்பேன்' - மேடையில் கதறிஅழுத வைகோ

`இன்னும் கொஞ்ச காலம்தான் உயிரோடு இருப்பேன்' - மேடையில் கதறிஅழுத வைகோ
`இன்னும் கொஞ்ச காலம்தான் உயிரோடு இருப்பேன்' - மேடையில் கதறிஅழுத வைகோ

'இன்னும் சில ஆண்டுக் காலம்தான் உயிருடன் வாழ்வேன்' என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மிகவும் உருக்கமாகப் பேசியுள்ளார். 

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நேற்று இஸ்லாமும், தமிழும் என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ ``காந்தி'' என்னும் தலைப்பில் மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். அப்போது, உரையைத் தொடங்கும் முன் மாணவர்களை தம்பிகளே  எனஅழைத்தார். பின்னர், ``உங்களை தம்பிகளேயே எனக் கூப்பிடக் கூடாது. ஏனென்றால், உங்களைவிட எனக்கு வயது அதிகம். எனக்கு நீங்கள் பிள்ளைகள். உங்கள் வயதில் எனக்கு பேரப்பிள்ளைகளே இருக்கிறார்கள்" என்றவர், தோல்விகுறித்த அப்துல் ரகுமான் கவிதையைப் படித்தார்.

பின்னர், ``தோல்வியைப் பற்றி சொல்லுகிற தகுதி எனக்குத்தான் உள்ளது. ஏனென்றால், நான் நிறைய தோற்றிருக்கிறேன். ஆனால், தோற்றவன் என்று என் நெஞ்சம் என்றைக்கும் சொன்னதில்லை. நான் ஒரு போராளி; எனக்கு தோல்வியே கிடையாது. 

மண்ணுக்காக தாய் தமிழுக்காக தமிழக மக்கள் வாழ்வுக்காக, தமிழர் உயர்வுக்காக இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக, ஜனநாயகத்தை  பாதுகாப்பதற்காக, அடுக்கடுக்காக வருகிற ஆபத்துகளைத் தடுப்பதற்காக, முல்லைப் பெரியார், காவேரி வாழ் மக்களைக் காப்பதற்காக போராடிக்கொண்டே இருப்பேன். மதச் சார்பின்மையைக் காக்கும் வரை எங்கள் வாள் உறைக்குள் செல்லாது. இந்து, முஸ்லிம், சீக்கிய, கிறிஸ்தவ மத ஒற்றுமையைக் குலைக்கும் யார் எந்த வடிவில் வந்தாலும், இந்த தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம்" என்று தீர்க்கமாகச் சொன்னவர், ``இந்த நாட்டின் எதிர்காலத்தை 18 முதல் 25 வயது வரை உள்ள இளம் தலைமுறையினர் காப்பாற்ற வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

மேலும் அவர்,  ``நான் இங்கு அரசியல் பேசுவதற்கு வரவில்லை. எனக்கு அது அவசியமும் இல்லை. இங்கு வந்துள்ள யாருடைய கார்களிலும் எங்கள் கட்சிக்கொடி இருக்காது. இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பாடுபட்ட மகாத்மா காந்தி நினைவு தினத்தன்று, உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகாரில், இந்து மகாசபையின் தலைவி  பூஜா பாண்டே காந்தியின் உருவ பொம்மையின் நெஞ்சில் சுட்டு கீழே தள்ளி, அதைத் தலையில் மிதித்து தீ வைத்ததோடு, நாதுராம் கோட்ஷே  வாழ்க! எனக் கோஷம் எழுப்பியபோது மனம் குமுறியது. இந்த நாட்டில் இதற்கு ஒரு கண்டனம் உண்டா?" எனக் கேட்டவர் மேடையிலேயே கண்ணீர் விட்டு குரல் தழுதழுத்தார். தொடர்ந்து ``இன்னும் சில ஆண்டு காலம்தான் நான் உயிருடன் வாழ்வேன். ஆனால், நான் வாழும் ஒவ்வொரு நொடியும் தமிழக மக்களுக்காகக் குரல் கொடுப்பேன்" என உருக்கமாகப் பேசினார். வைகோ அழுதது அங்கிருந்தவர்களைக் கண் கலங்கவைத்தது.