Published:Updated:

`1,100 ரூம்கள், ரயில் வாடகை ரூ.1 கோடி' - 12 மணி நேர போராட்டத்துக்கு சந்திரபாபு நாயுடு செய்த பிரமாண்டம்!

`1,100 ரூம்கள், ரயில் வாடகை ரூ.1 கோடி' - 12 மணி நேர போராட்டத்துக்கு சந்திரபாபு நாயுடு செய்த பிரமாண்டம்!
`1,100 ரூம்கள், ரயில் வாடகை ரூ.1 கோடி' - 12 மணி நேர போராட்டத்துக்கு சந்திரபாபு நாயுடு செய்த பிரமாண்டம்!

டெல்லியில் நடந்த ஒரு நாள் போராட்டத்துக்காக ஆந்திர அரசு செலவுசெய்த தொகை, மக்களை வாயடைக்கச்செய்துள்ளது. 

தெலங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட பிறகு, சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திரா தொடர்ந்து குரல்கொடுத்துவருகிறது. நான்கு வருடத்துக்கும் மேலாக வைக்கப்படும் இந்தக் கோரிக்கைக்கு மத்திய அரசு இதுவரை செவிசாய்க்கவில்லை. இதனால், மத்திய அரசு அநீதி இழைத்துவிட்டதாகக் கூறி, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. அதன்பின் சிறப்பு அந்தஸ்து தொடர்பாக ஆந்திர மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கடையடைப்பு போன்றவை நடத்தப்பட்டன. இதுவரை ஆந்திராவில் மட்டுமே நடந்துவந்த போராட்டத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்ல நினைத்த முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்தமுறை டெல்லியை முற்றுகையிட்டார். 

டெல்லியில் உள்ள ஆந்திரப்பிரதேஷ் பவனில், 12 மணிநேரம் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார் சந்திரபாபு நாயுடு. இந்தப் போராட்டத்தில், தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்கள் உட்பட, பொதுமக்கள், தேசிய, மாநில அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்புகள் எனப் பலரும் கலந்துகொள்ள, மிகவும் பிரமாண்டமாக நடந்து. இந்நிலையில், இந்தப் போராட்டத்துக்கு எவ்வளவு தொகை செலவாகியுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்துக்காக சுமார் 10 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாம்.

முழுக்க முழுக்க ஆந்திர அரசு செலவில் நடந்த இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக, தன் மாநிலத்திலிருந்து பொதுமக்களை அழைத்துவந்திருந்தார் சந்திரபாபு நாயுடு. இதற்காக, இரண்டு ரயில்கள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. போராட்டத்துக்காக ஆந்திர அரசே மத்திய ரயில்வே துறையிடமிருந்து 20 பெட்டிகள்கொண்ட ரயில்களை முன்பதிவு செய்ததுடன், ரயில்களுக்கு வாடகையாக ரூ.1.12 கோடி அளிக்கப்பட்டது.

இதுபோக, விஐபி-க்களுக்கு ரூம்கள், பொதுமக்களுக்குத் தனியாக ரூம்கள் என மொத்தம் 1,100 ரூம்கள் அரசு சார்பில் புக் செய்யப்பட்டன. இதற்காகக் கணிசமான தொகை செலவிடப்பட்டுள்ளது. மேலும், மக்களின் உணவு, இதர செலவு என மொத்தம் ரூ.10 கோடி செலவாகியுள்ளது. இதற்கான தொகையை 6-ம் தேதியே ஒதுக்கீடுசெய்து, ஆந்திர அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 12 மணி நேர போராட்டத்துக்கு இவ்வளவு தொகை செலவுசெய்துள்ளது எதிர்க்கட்சியினர் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

முன்னதாக, நேற்று முன்தினம் நடந்த போராட்டத்திலேயே இந்தச் செலவுகள்குறித்து சந்திரபாபு நாயுடு பேசியிருந்தார். அதில், ``இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆந்திர அரசின் பணத்தில்தான் நடத்தப்படுகிறது. இது, மக்களுக்காக மக்கள் நடத்தும் போராட்டம். ஆந்திர அரசு, இந்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்துகிறது. என் மக்களின் சுதந்திரத்துக்காகவே இது நடத்தப்படுகிறதே தவிர, ஒரு தனிப்பட்ட கட்சியின் போராட்டம் இல்லை” என்று பேசினார்.