நாளை மறுநாள் சென்னை வருகிறார் விஜயகாந்த் - தே.மு.தி.க அதிகாரபூர்வ அறிவிப்பு

நாளை மறுநாள் சென்னை வருகிறார் விஜயகாந்த் - தே.மு.தி.க அதிகாரபூர்வ அறிவிப்பு
சட்டமன்றத்திலேயே ஜெயலலிதா முன்பு நாக்கை மடித்து, 'தில்' காட்டியவர், மனத்தில் பட்டதைப் பட்டென்று பேசுபவர், முன் கோபக்காரர் எனப் பல்வேறு பாராட்டுகளுக்கும், விமர்சனங்களுக்கும் சொந்தக்காரர் விஜயகாந்த். சில ஆண்டுகளாகவே அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. 2014 நாடாளுமன்றத் தேர்தல் நெருக்கத்தில், சிங்கப்பூரிலுள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். தேர்தல் முடிந்தவுடன் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது.

சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டவர், 2014 ஜூலை மாதம் மீண்டும் சிங்கப்பூர் சென்றார். 2017 மார்ச்சில், சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் 10 நாள்கள் தொடர் சிகிச்சை, மீண்டும் சிங்கப்பூர் பயணம், 2018 ஜூலையில் அமெரிக்காவில் சிகிச்சை என விஜயகாந்த் தன் உடல்நிலையை கவனித்துக்கொண்டார். கடந்த டிசம்பர் 18-ம் தேதி, இரண்டாம் கட்டமாக மீண்டும் அமெரிக்கா சென்றவர், கிட்டத்தட்ட இரண்டு மாதகாலமாக அங்கேயே தங்கியிருந்து சிகிச்சைபெற்றுவருகிறார்.

தமிழகத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் அமெரிக்காவில் இருந்து குரல்கொடுத்தும், கண்டனம் தெரிவித்தும்வருகிறார் விஜயகாந்த். மேலும், பண்டிகைகளில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அவ்வப்போது ட்விட்டரில் வெளியிட்டுவருகிறார். இப்படியிருக்க, கடந்த இரு தினங்களுக்கு முன்பு விஜயகாந்த் விரைவில் சென்னை வர இருப்பதாக அவரது மகன் சண்முக பாண்டியன் தெரிவித்திருந்தார். தற்போது அவர், வரும் 16-ம் தேதி சென்னை வர உள்ளார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது, அறிக்கையாக விஜயகாந்த் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொண்டையில் ஏற்பட்ட நோய்த் தொற்று, சிறுநீரகப் பிரச்னைகளுக்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, தே.மு.தி.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
