Published:Updated:

ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் 6,000 ரூபாய்... ராகுலின் திட்டம் சாத்தியமா?

ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் 6,000 ரூபாய்... ராகுலின் திட்டம் சாத்தியமா?
பிரீமியம் ஸ்டோரி
News
ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் 6,000 ரூபாய்... ராகுலின் திட்டம் சாத்தியமா?

ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் 6,000 ரூபாய்... ராகுலின் திட்டம் சாத்தியமா?

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் 6,000 ரூபாய் தருவோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  அறிவித்துள்ளது, அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதேசமயம், அரசு கஜானாவுக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும் இந்தத் திட்டம் நடைமுறையில் நிறைவேற்றக் கூடியதுதானா என்கிற சந்தேகத்தையும் எழுப்பியிருக்கிறது.  

ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் 6,000 ரூபாய்... ராகுலின் திட்டம் சாத்தியமா?

மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, கடந்த பிப்ரவரி மாதம் சமர்ப்பித்த இடைக்கால பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு  ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படும் என்று அறிவித்தது. இதைக் கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி, “விவசாயிகளுக்கு நிதி உதவி என்ற பெயரில் நாள் ஒன்றுக்கு 17 ரூபாய் தருவது அவர்களை அவமானப்படுத்தும் செயல்” என்றார்.

இந்த நிலையில், கடந்த மார்ச் 25-ம் தேதியன்று நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘‘காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கான குறைந்தபட்ச வருமானம் வழங்கும் ‘நியாய்’ திட்டம் (Nyuntam Aay Yojana - NYAY) செயல்படுத்தப்படும்; இந்தத் திட்டத்தின்படி, பரம ஏழைகளாக உள்ள குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் மாதம் ரூ.6,000 வங்கிக் கணக்கில் போடப்படும்’’ என்றும் தெரிவித்தார். சுமார் 25 கோடி பேர் இத்தத் திட்டத்தின்கீழ் பலன் அடைவார்கள் என்றும் அவர் சொன்னார்.

ஆண்டுச் செலவு ரூ.3.6 லட்சம் கோடி

ராகுல் அறிவிப்பின்படி, இந்தத் திட்டம் மூலம் பயன்பெறும் குடும்பங் களுக்குத் தினமும் ரூ.202 கிடைக்கும். அதாவது, ஆண்டுக்கு ரூ.72,000.  மொத்தம் ஐந்து கோடி குடும்பம் என வைத்துக்கொண்டால், ஆண்டுக்கு ரூ.3.6 லட்சம் கோடி செலவாகும். ரூ.3.6 லட்சம் கோடி என்பது பெரிய தொகைதான். என்றாலும், 2019-20-ம் நிதியாண்டுக்கு மதிப்பிடப்பட்ட ஜி.டி.பி-யில் அது 1.7% மட்டுமே. பிரச்னை என்னவெனில், அரசு கஜானாவுக்கு முக்கிய வருவாய்க் கேந்திரமாக இருக்கக்கூடிய  வரி வசூல் (மத்திய, மாநில அரசுகளைச் சேர்த்து), ஜி.டி.பி-யில் வெறும் 17% அளவுக்கே இருக்கிறது.

மோடி அரசு கடைசியாகத் தாக்கல் செய்த பட்ஜெட்டில், ஜி.டி.பி-யில் 12.2%  மட்டுமே வரி வசூல் மூலம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதிலும் மூன்றில் ஒரு பகுதி மாநிலங்களுக்குச் சென்றுவிடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 வழங்கும்  ‘நியாய்’ திட்டத்தை அமல்படுத்தினால், அதற்கு மத்திய அரசின் நிகர வரி வசூல் தொகையைவிட ஐந்து மடங்கு பணம் தேவைப் படும். அதாவது, அரசின் மொத்த செலவினங்களில் 13 சதவிகிதத்துக்குச் சமமானதாகவும், 2019-20-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் கூறப்பட்டிருந்த துணை மானிய மசோதாவுக்கான ஒதுக்கீட்டை தாண்டியும் இருக்கும்.

சுருக்கமாகச் சொல்வதானால், தற்போதுள்ள செலவினங்களுடன் இந்தத் திட்டத்துக்கான செலவைச் சேர்க்க முடியாத நிலை உள்ளது. மீறி சேர்த்தால், தற்போதைய செலவினங்களை மாற்றியமைத்தால் மட்டுமே இது பட்ஜெட்டுக்குள் அடங்கும்.

‘கூலி அதிகரிக்கும்... வேலையாள்களுக்குப் பற்றாக்குறை ஏற்படும்’

இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால்,  அது தொழிலாளர்கள் சந்தையில் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தி, அதனால் வயல்கள் உள்படப் பல இடங்களில் கூலி வேலைக்கு ஆள் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்படும்;  இதனால் வேலையாள்களின் கூலி அதிகரிக்கும் எனப்  பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

“மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தால் எப்படி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் விவசாய வேலைகளுக்கான ஆள் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டதோ, அதேபோன்ற நிலை இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதாலும் ஏற்படலாம்’’ என்று அவர்கள் அச்சம் தெரிவிக் கின்றனர்.

மேலும், இந்தத் திட்டத்தைச் செயல் படுத்துவதில் உள்ள முதன்மை சிக்கலே உண்மையான பயனாளிகள் யார் என்பதைக் கண்டுபிடிப்பதில்தான் உள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

செயல்படுத்துவது ‘சாத்தியமானதே’

ஆனால், பொருளாதார நிபுணர்களுடன் கலந்தாலோசித்தபின்னரே, தமது கட்சி இந்தத் திட்டத்தை அறிவித்துள்ளதாகவும், இது செயல்படுத்தத்தக்க திட்டம்தான் என்றும், பட்ஜெட்டுக்கேற்ற நிதி ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்போம் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான   ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

“இந்தியாவில் மேல்தட்டு மக்கள் எப்போதுமே ஏழைகளை மிக மோசமாகவே நடத்துகின்றனர்.  சாதி மோதல் அரசியலிலிருந்து வருவாய் மற்றும் நலத்திட்டங்களை வழங்கும் அரசியலுக்குள் நுழைய இதுவே சரியான தருணம். என்னைப் பொறுத்தவரை, இந்தக் குறைந்தபட்ச வருமான உத்தரவாதத் திட்டம் மிகவும் வரவேற்கத்தக்கது” என்கிறார், காங்கிரஸ் கட்சியின் இந்தத் தேர்தல் வாக்குறுதியைத்  தயாரித்துத் தருவதில் உதவிய பிரபல பிரான்ஸ் பொருளாதார நிபுணர் தாமஸ் பிக்கெட்டி.

பிரபல பொருளாதார நிபுணரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநருமான ரகுராம் ராஜனிடமிருந்து இந்தத் திட்டத்துக்கு சாதகமான கருத்து வெளிப்பட்டிருப்பதுதான் கவனம் ஈர்த்துள்ளது.

நொமுராவின் கருத்து

இதனிடையே, இந்தத் திட்டத்தை மூன்று வழிகளில் செயல்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ள பன்னாட்டு நிதிச் சேவைகள் நிறுவனமான ‘நொமுரா’, அவை என்ன என்பதையும் கூறியுள்ளது.

* ஜி.டி.பி-யின் 3.2 சதவிகிதத்துக்கு ஈடான தற்போதைய மானியங்கள் மற்றும் திட்டங்களை ஒழித்துவிட்டு, ‘நியாய்’ திட்டத்தைச் செயல்படுத்த முடியும்.

* ஜி.டி.பி-யின் 1.6 சதவிகித மதிப்பிலான மூலதனச் செலவுகளை விட்டுக்கொடுப்பதன் மூலம் செயல்படுத்தலாம்.

* கூடுதல் வரிகள் அல்லது செஸ் வரிகள் மூலம் இந்தத் திட்டத்துக்கான நிதி ஆதாரத்தைத் திரட்டலாம்.
 
ஆட்சிக்கு வர உதவுமா?

‘நியாய்’ அறிவிப்புக்கு இணையாக என்ன அறிவிப்பினை வெளியிடுவது என்று பாரதிய ஜனதா கட்சி யோசித்து வருகிறது. சாதாரண மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் இந்த அறிவிப்பு, நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை பலத்தை ஈட்டித் தருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

பா.முகிலன்  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz