Published:Updated:

சேலத்தில் இரண்டாக உடைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி! - ஒரே நேரத்தில் 1,583 பேர் விலகல்

சேலத்தில் இரண்டாக உடைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி! - ஒரே நேரத்தில் 1,583 பேர் விலகல்
சேலத்தில் இரண்டாக உடைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி! - ஒரே நேரத்தில் 1,583 பேர் விலகல்
சேலத்தில் இரண்டாக உடைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி! - ஒரே நேரத்தில் 1,583 பேர் விலகல்

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து சுமார் 1,500-க்கும் மேற்பட்ட தோழர்கள் விலகி புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சிக்குச் சென்றிருப்பது அக்கட்சிக்குப் பெரும் சோர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கான இணைப்பு விழா சேலம் சுகவனேஸ்வரர் கோயில் அருகே உள்ள லால் மஹாலில் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நகரச் செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் மாவட்டச் செயலாளர் ஜீவானந்தம், தர்மபுரி மாவட்டக் குழு உறுப்பினர் புகழேந்தி, இளைஞர் பெருமன்ற முன்னாள் மாவட்டத் தலைவர் வெங்கடேஷ், மாணவர் பெருமன்றத்தின் முன்னாள் தலைவர் மாலன் உட்பட 16 மாவட்டக்குழு உறுப்பினர்கள் 9 ஒன்றியங்களிலிருந்து 84 கிளைகளைச் சேர்ந்த 1,583 பேர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைவிட்டு வெளியேறினார்கள்.

இதுபற்றி ஜீவானந்தத்திடம் கேட்டபோது, ``இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உண்மையான தோழர்கள் அவமானம், உதாசீனப்படுத்தப்படுகிறார்கள். கட்சியின் நலன் கருதி 4 ஆண்டுகளாக அமைதியாக இருந்தோம். மாவட்டத் தலைவர் புறம்பேசியும் பழி வாங்கும் நோக்கத்திலும் தொடர்ந்து நடந்து வருகிறார். காவல்துறைக்கு எதிராகத் தோழர்களை திசை திருப்பி வருகிறார்.

தனிநபர் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளிப்பதும், தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதிலும் முழுகவனம் செலுத்துகிறார். அடிப்படை பிரச்னைகளுக்குப் போராடாமல் சடங்கு சம்பிரதாயத்துக்குப் போராடுகிறார். சேலம் மாநகரை 4 மண்டலமாகப் பிரித்து பிறகு, மாநகர் மாவட்டமாகப் பிரிப்பதாகச் சொன்னார்கள். ஆனால், 3 ஆண்டுகள் ஆகியும் மாநகர் மாவட்டமாகப் பிரிக்கவில்லை. இதை மாவட்டத் தலைமையும் கண்டுகொள்ளவில்லை. கட்சியில் மாற்றுக் கருத்து சிந்தனையாளர்களை ஓரங்கட்டுகிறார்கள். அதையடுத்தே கட்சியைவிட்டு வெளியேறினோம்'' என்றார்.

இதுபற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளர் மோகன், ``1992 விதிப்படி ஒன்றிய, மாவட்ட, மாநிலப் பொறுப்புகளில் உள்ளவர்கள் 9 ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருக்க முடியும். அதற்கு மேல் பதவியில் இருக்க முடியாது. அதை முத்தரசன் பதவிக்கு வந்ததும் நடைமுறைப்படுத்தினார்கள். இதனால் ஜீவானந்தம், ராஜேந்திரன் போன்றவர்கள் பதவி இழந்து அதிருப்தி அடைந்து சென்றுவிட்டார்கள். கம்யூனிஸ்ட் என்பவர்கள் கொள்கைக்காக இருக்க வேண்டும். பதவிக்காக இருக்கக் கூடாது’’ என்றார்.