Published:Updated:

கரூரில் விஜயபாஸ்கர் தந்தை விருப்பமனு! - பழிவாங்கப்படுகிறாரா தம்பிதுரை?

கரூரில் விஜயபாஸ்கர் தந்தை விருப்பமனு! - பழிவாங்கப்படுகிறாரா தம்பிதுரை?
கரூரில் விஜயபாஸ்கர் தந்தை விருப்பமனு! - பழிவாங்கப்படுகிறாரா தம்பிதுரை?

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை எம்.பி-யாக இருக்கும் கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் புதுக்கோட்டை விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பி வேட்புமனு தாக்கல்செய்திருப்பது பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறது.


கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் நான்கு முறை எம்.பி-யாக, அதுவும் கடைசி இரண்டு பீரியடாக தொடர்ந்து எம்.பியாக இருப்பவர் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை. 'இந்தமுறையும் அவர்தான் கரூர் தொகுதி வேட்பாளர்' என்று சொல்லப்பட்டுவந்த நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் புதுக்கோட்டை விஜயபாஸ்கரின் தந்தையான சின்னதம்பி, கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் சீட் கேட்டு பணம் கட்டியிருப்பது பல அரசியல் யூகங்களுக்கு வித்திட்டுள்ளது.

'அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது' என்று சொல்லப்படுகிறது. ஆனால், இன்னொருபுறம் நாடாளுமன்ற கூட்டத்தொடர்கள், பத்திரிகையாளர்கள் சந்திப்பு, கட்சிக் கூட்டம் என எல்லா இடங்களிலும் தம்பிதுரை, பா.ஜ.க-வையும் பிரதமர் மோடியையும் வறுத்து எடுக்கிறார். 'இது, அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணிக்குள் விரிசலை உண்டாக்கும்' என்று இருதரப்பும் அச்சம் கொள்ளத் தொடங்கியது. ஆனால், முதல்வரோ, 'அது தம்பிதுரையின் தனிப்பட்ட கருத்து' என்று பலமுறை பூசிமெழுகப் பார்த்தார். ஆனாலும், தம்பிதுரை நாளுக்குநாள் பா.ஜ.க மீதான விமர்சனத்தை அதிகப்படுத்தி, அரசியல் களத்தை சூடாக்கிவருகிறார். இந்நிலையில், கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் சீட் கேட்டு சின்னதம்பி பணம் கட்டியிருப்பது பல யூகங்களை அரசியல் மட்டத்தில் ஏற்படுத்தி இருக்கிறது.


 

இதுபற்றி, சின்னதம்பி தரப்பில் பேசியபோது, "கட்சியில் சீட் கேட்டு வேட்புமனு தாக்கல் செய்ய யாருக்கும்  உரிமை உள்ளது. அந்த வகையில்தான் மனுத்தாக்கல் செய்தார். கரூர் எம்.பி தொகுதியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை சட்டமன்றத் தொகுதியும் வருது. அந்தத் தொகுதி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தொகுதி. அதனால், கரூர் தொகுதியில் சீட் கேட்டு மனுத்தாக்கல் செய்திருக்கிறார். வேறு எந்த அரசியல் காரணமும் இல்லை" என்றார்கள்.


 

ஆனால்,கரூர் மாவட்ட அ.தி.மு.க-வினர் சிலரோ, "பா.ஜ.க-வை ஓவரா தம்பிதுரை தாக்குவதால், அ.தி.மு.க தலைமையை பா.ஜ.க தலைமை காய்ச்சி எடுத்துவிட்டது. இதனால், வரும் தேர்தலில் தம்பிதுரைக்கு கரூர் தொகுதியில் கல்தா கொடுக்கவே, விஜயபாஸ்கரின் தந்தையை மனுத் தாக்கல் செய்யவைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்''. ``இன்னொரு தரப்போ, செந்தில்பாலாஜி தி.மு.க-வுக்குத் தாவி இருப்பதால், அவர் தன்னை மண்ணைக் கவ்வவைக்க என்ன வேணும்னாலும் பண்ணுவார் என தம்பிதுரை நினைக்கிறார். அதனால், இந்த முறை தனக்கு எம்.பி பதவி கேட்கிறார்.

அதனால், கரூர் மாவட்ட அ.தி.மு.க-வில் மாற்று வேட்பாளர் இல்லாததால், பணத்தை இறைத்துச் செலவுபண்ணக்கூடிய அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பியை கரூர் தொகுதிக்கு சீட் கேட்டு மனுத்தாக்கல் பண்ணச் சொல்லியிருக்கிறார்கள். எது உண்மைங்கிறது கட்சித் தலைமைக்குதான் வெளிச்சம்!" என்றார்கள்.

தம்பிதுரை தரப்பில் பேசினால்,  "கட்சியில் யாருக்கு வேண்டுமானாலும் சீட் கேட்கும் உரிமை இருக்கு. அந்த வகையில், சின்னதம்பி சீட் கேட்டிருக்கிறார். ஆனா, தம்பிதுரைக்குதான் கரூர் தொகுதி. அவர் எம்.பி சீட்டெல்லாம் கேட்கவில்லை. அதற்காகவா,கடந்த 4 மாதங்களாக தொகுதி முழுக்க வலம்வந்து மக்களிடம் கோரிக்கை மனுக்கள் வாங்கி, குறைகளைத் தீர்க்கிறார்? கரூரில் மூன்றாவது முறையாக தொடர்ச்சியாக அவர்தான் எம்.பி-யாகப்போகிறார்" என்றார்கள்.