Published:Updated:

எலும்புக்கூடான போலீஸ் வேன்... ஜெயலலிதா தங்கியதற்கான ஒரே சான்று! ஒரு லைவ் ரிப்போர்ட்! – மினி தொடர்-2

எலும்புக்கூடான போலீஸ் வேன்... ஜெயலலிதா தங்கியதற்கான ஒரே சான்று! ஒரு லைவ் ரிப்போர்ட்! – மினி தொடர்-2
எலும்புக்கூடான போலீஸ் வேன்... ஜெயலலிதா தங்கியதற்கான ஒரே சான்று! ஒரு லைவ் ரிப்போர்ட்! – மினி தொடர்-2

அந்த வாகனத்தில் உள்ள இரும்பை அப்பகுதியினர் உடைத்து, அவர்கள் செலவுக்கு எடுத்துச் சென்றுவிடுவார்களாம். உடைத்து எடுத்துச் சென்ற பணம், மீண்டும் டாஸ்மாக் மூலமாக அரசாங்கத்திற்கே வந்துவிடும் என்பதை உறுதிசெய்யும் விதமாக, ஏராளமான மது பாட்டில்கள் வேன் அருகிலேயே சிதறிக் கிடந்தன.

ஜெயலலிதா இல்லாத சிறுதாவூர் பங்களா! ஒரு லைவ் ரிப்போர்ட்! – மினி தொடர் - 2

சிறுதாவூர் பங்களா எவ்வித போலீஸ் பாதுகாப்புமின்றி இருக்கிறது என்ற தகவல்தான், அந்தப் பங்களா வாசல் முன்பு நம்மை நிறுத்தியது. பங்களாவின் சிறிய நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்றோம்.

பங்களாவைக் காக்கும் தனியொருவன்!

பங்களா நுழைவுப் பகுதியில் உட்புறமாக நின்றிருந்த ஓர் இளைஞர், `யாரைப் பார்க்க வேண்டும் சார்?’ என்றார். உடனே, பங்களாவிற்கு அடிக்கடி வந்துபோகும் நபர் ஒருவரின் பெயரைச் சொல்லி அவரைப் பார்க்க வேண்டும் எனச் சொன்னோம். `அவர் உள்ளே இல்லீங்களே…’ என்றவர், ``நீங்க யார் சார்?" என்றார். பெயரைச் சொன்னபோது தலையசைத்தார். ``முன்பெல்லாம் நிறைய போலீஸ்காரங்க, பாதுகாப்புப் பணியில் இருப்பாங்க. இப்ப ஒருத்தரையும் காணோமே" என்றதும், ``ஆமாம் சார், போலீஸ் பாதுகாப்பைக் குறைச்சுட்டாங்க. மூணு பேர்தான் இருக்கிறோம். அதிலேயும் ரெண்டு பேர் அலுவலக வேலையா மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போய்ட்டாங்க. நான் ஒருத்தன் மட்டும்தான் இருக்கிறேன்" என்றார். ``உள்ளே போகலாமா" என்று கேட்டதும், ``வெளியாட்கள் உள்ளே போக அனுமதி இல்லை" என்றார் அவர். காவல்துறையின் பலத்தக் கண்காணிப்பில் உச்சகட்ட பாதுகாப்போடு இருந்த பங்களா, தற்போது ஆயுதம்கூட இல்லாத ஒரேயொரு காவலரால் மட்டுமே பாதுகாக்கப்படுகிறது என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. அந்தக் காவலரும் சீருடையில் இல்லை. பேச்சுத்துணைக்குக்கூட சக காவலர்கள் இல்லாததால் தனியாக அமர்ந்துகொண்டு பொழுதைக்கழிக்கிறார் அவர். டீ, காபி போட்டுக் குடிக்க பாத்திரங்கள் உட்பட சில பொருள்கள் அங்கே இருந்தன. நமக்குப் பதிலளித்து விட்டுப் படபடப்புடன் மீண்டும் அங்கே உட்கார்ந்து கொண்டார் அந்த நபர். ``பங்களாவிற்குத் தினகரன் வருவாரா?" என்றதும், ``யாரும் வர்றதில்லீங்க…" என்றார் சலிப்புடன். ``உள்ளே என்ன பயிர் வச்சிருக்காங்க?" என்றோம். ``நெல்லுதான் சார் போட்டிருக்காங்க. வேற எந்தப் பயிரும் இந்த வருஷம் வைக்கல” என்றார். பிறகு அங்கிருந்து வெளியே வந்தோம்.

பசுமை படர்ந்த நெல் விவசாயம்! 

சுமார் 100 மீட்டர்  தொலைவு சென்றதும் டூ வீலரை நிறுத்தி மதில் சுவரைத் தாண்டி, நம் பார்வை சென்றது. அடர்ந்த சவுக்கு மரங்களுக்கு இடையே உள்ள இடைவெளியில் நெற்பயிருக்குச் சில பெண்கள் களையெடுத்துக் கொண்டிருந்தார்கள். அதைத்தவிர அங்கிருந்து பார்ப்பதற்கு வேறெதுவும் தெரியவில்லை. பழைய மாமல்லபுரம் சாலையிலேயே பயணித்தோம். பங்களா நிலம் முடியும் இடத்தில் சிறுதாவூருக்குச் செல்லும் பாதை வந்தது. அந்தப் பாதை வழியாகப் பங்களாவிற்குப் பின்புறம் செல்ல முடிவெடுத்தோம். வழக்கமாக அங்கே சில காவலர்கள், பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள். ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, அந்த வழியாக யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், இப்போது எளிதாக நம்மால் அந்தப் பாதையில் செல்ல முடிந்தது. குண்டும்குழியுமாக இருந்த மண்ரோட்டில் புதர் மண்டிக் கிடந்தது. சுமார், 1 கிலோ மீட்டர் தொலைவுக்குச் சென்றதும் பங்களாவின் மேற்குப் பகுதியை வந்தடைந்தோம்.

பங்களாவின் பின்புறப் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் நெற்பயிருக்கு மருந்து தெளித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களிடம் பேச்சுக் கொடுத்தோம். ``நாங்க இந்த நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துப் பயிர் வைக்கிறோம். இந்த நிலத்தோட உரிமையாளர்களெல்லாம் வெளிநாட்டில இருக்கிறாங்க. யாரும் இங்க வரமாட்டாங்க. முதல்வர் அம்மா இருக்கும்போது போலீஸ்காரங்க நிறைய பேர் இங்கே இருப்பாங்க. ஒரு வருஷமாகவே போலீஸ்காரங்க யாரும் இங்க வர்றதில்லை" என்றார். அந்த விவசாய நிலங்களைக் கடந்து பங்களாவை நெருங்க வேண்டும் என்பதே நமது குறிக்கோள். பண்ணை வீடுகள் அமைக்கப் போடப்பட்டிருந்த மனைப்பிரிவுகளின் வழியாகச் சென்றால்தான், பங்களாவின் பின் பகுதியை நெருங்க முடியும். ஆனால், இருசக்கர வாகனம்கூடச் செல்லமுடியாத அளவிற்குச் சேறும், சகதியுமாய் அந்தப் பாதை இருந்தது. இதனால் அங்கேயே டூ வீலரை நிறுத்தி விட்டு, பங்களாவை நோக்கிச் சென்றோம். ஒரு அடி அளவு வரை வளர்ந்த அடர்ந்த கோரைப் புற்கள், கால் வைத்தால் உள்ளே செல்லும் அளவிற்குச் சேறு நிறைந்த நிலம். சரியான வளர்ச்சி இல்லாத தென்னந்தோப்பில் ஆங்காங்கே சப்போட்டா மரங்களும் இருந்தன. யாரும் அந்த நிலத்திற்குச் செல்ல முடியாதவாறு முட்களும் புதர்களும் மண்டிக் கிடந்தன. மெதுவாகப் பங்களா இருக்கும் பகுதியை நோக்கிச் சென்றோம்.

எலும்புக் கூடாய் கிடந்த காவல் வாகனம்!

ஜெயலலிதா இருந்தபோது, இந்தப் பங்களாவில் தங்கியிருந்தால், பின்பக்கம் வழியாக யாரும் நுழைந்துவிடக் கூடாது என்று கருதி, போலீஸ் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்பட்ட தமிழகக் காவல்துறையின் வேன் (TN-21 G-0252) ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. வேன் என்பதை விடவும், வேன்போன்ற தோற்றத்தில் உள்ள எலும்புக்கூடு என்றே சொல்லலாம். ஜெயலலிதாவிற்கு காவல்துறையினர் பாதுகாப்பு இருந்ததற்கான ஒரே சாட்சி அந்த வேன்தான். தேய்ந்த எலும்புக் கூடாய், பெயின்டுகள் போய், கேட்பாரற்றுக் கிடந்த அந்த வேன் சில வருடங்களாக அங்கேயே கிடந்திருக்கிறது. காவல்துறையினர் அதைக் கொண்டுசெல்லாமல் அங்கேயே விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இதனால் அந்த வாகனத்தில் உள்ள இரும்பை அப்பகுதியினர் உடைத்து, அவர்கள் செலவுக்கு எடுத்துச் சென்றுவிடுவார்களாம். உடைத்து எடுத்துச் சென்ற பணம், மீண்டும் டாஸ்மாக் மூலமாக அரசாங்கத்திற்கே வந்துவிடும் என்பதை உறுதிசெய்யும் விதமாக, ஏராளமான மது பாட்டில்கள் வேன் அருகிலேயே சிதறிக் கிடந்தன. அந்தத் தோப்பில் உள்ள தென்னை மரங்கள் பராமரிப்பு இல்லாததால் ஒரு சில மரங்களில் மட்டுமே குலைகள் காணப்படுகின்றன. அவையும் தேங்காயாக முற்றாமல் உள்ளூர் இளைஞர்கள் சிலரின் தாகத்தைத் தணித்துவிடுகின்றன.

பங்களாவைக் காக்கும் கம்பிவேலி!

சிறுதாவூர் பங்களா நிலத்தைச் சுற்றி கம்பி வேலிகள் மேலும் செல்ல முடியாதவாறு நம்மைத் தடுத்து நிறுத்தின. கம்பி வேலையை ஒட்டியது போல தார்சாலை செல்கிறது. இந்தத் தார்சாலை பங்களா நிலத்தைச் சுற்றிலும் செல்லும். காவல் வாகனங்கள் செல்வதற்கும், விவசாயப் பொருள்கள் எடுத்துச் செல்வதற்கும் இந்தச் சாலையை அமைத்திருக்கிறார்கள். சாலை ஓரங்களில் இருந்த சிறிய கண்காணிப்புக் கூடங்களும் பராமரிக்கப்படாமல் இருந்தன. ஆளுயர அளவிற்குப் புற்கள் மண்டி அந்தப் பகுதியே புதராய்க் காட்சியளித்தது. மேற்குப் பகுதியில் உள்ள நிலத்திலும் நெற்பயிர் வளர்ந்து இருந்தது. தென்னை ஓலைகளின் அசைவும், குருவிகள், குயில்களின் கீச்சுக் குரல் ஒலியும், தண்ணீரில் தாவிக்குதிக்கும் தவளைகளின் சத்தமும் ஆங்காங்கே தொடர்ந்து கொண்டிருந்தன. பங்களா இருக்கும் பகுதியில் கறுப்பு நிற கார் ஒன்று வந்து நின்றது. வெள்ளை வேட்டி சட்டையுடன் ஒருவர் அந்த காரில் வந்து இறங்கினார். காரில் வந்த நபர் யார் என உற்று நோக்கினோம்...

- தொடரும்.

அடுத்த கட்டுரைக்கு