Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

@என்.ரவி, முத்துப்பேட்டை.
மோடியின் ‘மிஷன் சக்தி’ அறிவிப்பு, தேர்தல் நடத்தை விதிமீறலா?

இன்றைக்கும் அவர்தான் பிரதமர். ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்ட பிறகு பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் எல்லாம் இப்படிப்பட்ட விஷயங்களிலிருந்து ஒதுங்கி இருப்பதுதான் மரபு. இந்த அறிவிப்பை ஜனாதிபதியோ அல்லது துறை சார்ந்த உயர் அலுவலர்களோதான் வெளியிட்டிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாது, ‘நாட்டு மக்களுக்கோர் அவசரச் செய்தி’ என்று ஏக பில்டப்களை வேறு கொடுத்து, பீதியையும் விதவிதமான எதிர்பார்ப்புகளையும் வேறு கிளப்பிவிட்டார் மோடி. ‘இது தேர்தல் நடத்தை விதிமீறல்’ என்று எதிர்க்கட்சிகள் கொதித்தாலும், ‘இல்லை?’ என்று ஆராய்ச்சி செய்து அறிவித்துவிட்டது தேர்தல் ஆணையம். ஆனால், மரபுகளைப் பின்பற்ற வேண்டும் என்பதில் அக்கறை காட்டும் பி.ஜே.பி-யின் பிரதிநிதியான மோடி சிறந்த முன்னுதாரணமாக இருந்திருக்க வேண்டும்.

கழுகார் பதில்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

@மா.உலகநாதன், திருநீலக்குடி.
ஏதோ அலை அலை என்கிறார்களே... தமிழகத்தில் அப்படி ஏதும் உள்ளதா?


‘விலை விலை’ என்பது நன்றாகக் கேட்கிறது!

@ஜுபைர் அகமது.
ஊடகத்தில் அரசியல் லாபத்துக்காக எழுதப்படும் பொய்ச்செய்திகள், விகடன் குழுமத்தில் உண்டா?


எங்களுக்கு வாசகர்கள்தான் எஜமானர்கள்.

எம்.டி. உமாபார்வதி, சென்னை-29.
‘மீம்ஸ்’ கலைஞர்கள் உண்மையிலேயே கலக்குகிறார்கள்தானே?


கலக்குகிறார்களா... மிரட்டுகிறார்கள். ‘இத்தனை வருஷமா எங்கடா ராசாக்களே இருந்தீங்க?’ என்று உச்சிமுகர வைக்கிறார்கள்.

@பி.ரஹீம், மதுரை-18.
சிறிது காலத்துக்குச் செய்திச் சேனல்கள் பார்ப்பதைத் தவிர்க்கவேண்டும் என மனதில் தோன்றுகிறது. இது என்ன மாதிரியான வியாதி?


ஃப்ளாஸோநியூஸோஃபோபியா!

கே.ஆர். உதயகுமார், சென்னை-1.
‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், தென்சென்னையில் தைரியமாகப் போட்டியிடுகிறாரே?


‘தைரிய’மாக சினிமாவிலேயே நடித்து விட்டாரே.

@சேகர் பாலசுப்பிரமணியன், ஈரோடு.
நடைபெறவிருக்கும் தேர்தலில் களம் காணும் வாரிசுகள் தோல்வியடைந்தால், வாரிசு அரசியல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கலாமா?


ஒரு முடிவு தெரியாதவரைக்கும் அதெல்லாம் முடிவுக்கு வரவே வராது.

டி.கிருஷ்ணமூர்த்தி, விழுப்புரம்.
தேர்தல் ஆணையம் மீதான நம்பகத்தன்மை குறைந்துகொண்டே வருகிறதே?


நம்பிக்கையான அதிகாரிகள் குறைந்து கொண்டே இருப்பதுதான் காரணம். தேர்தல் ஆணையம் என்பது, மத்திய மற்றும் மாநில அரசுகளின் அதிகாரிகளை நம்பித்தான் இயங்குகிறது. தேர்தல் வந்து விட்டாலே, அதிகாரிகள் எல்லாம் ஆணையத் துக்குக் கட்டுப்பட்டவர்களாக மாறவேண்டும். ஆனால், ஆளுங்கட்சிகளின் அடிமைகளாகவே இருப்பதுதான் பெரும்பாலும் நடக்கிறது. தேர்தல் ஆணையர்களாக வந்தமர்பவர்களும் அப்படியே இருந்தால், எங்கிருந்து நம்பிக்கை பிறக்கும். முன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன், முன்னாள் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா போன்றவர்கள் சாட்டையைத் தூக்கியபோது அதிகாரிகள் எல்லாம் நீதிக்கும் நேர்மைக்கும் பயந்து பணியாற்றினார்கள். ஆனால், இப்போது பெரும்பாலும் சாஷ்டாங்கமாக விழுந்து கிடப்பவர்கள் தானே ஆணையிடும் பொறுப் பிலும் திட்டமிட்டு அமர்த்தப்படுகிறார்கள்.

@இரா..வளையாபதி, தோட்டக்குறிச்சி.

கொடநாடு விவகாரத்தில் ஏதோ புதிய வீடியோ வந்துள்ளதாமே?

எத்தனை மணி நேரப்படம்... சென்ஸார் செய்யப்பட்டு விட்டதா?

@இந்து குமரப்பன், விழுப்புரம்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைய நேரிட்டால், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு என்று சொல்லி அ.தி.மு.க ஆட்சி கலைக்கப்படும்தானே?


அதற்கெல்லாம் அவசியமே இருக்காது.

வி.கருணாநிதி, திருமக்கோட்டை.
‘பி.ஜே.பி-யின் கூட்டணி பிடிக்காததால், தேர்தல் பிரசாரத்துக்குச் செல்லவில்லை’ என்று அதே கட்சியில் இருந்துகொண்டே சுப்பிரமணியன் சுவாமி சொல்வதெல்லாம் ஓவர்தானே?

இதை ஏன் நீங்கள் பி.ஜே.பி-யின் உள்கட்சி ஜனநாயகத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகப் பார்க்கக்கூடாது. நடிகர் சத்ருகன் சின்ஹா, முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, ஜஸ்வந்த் சிங், அருண் ஷோரி, தற்போதைய அமைச்சர் நிதின் கட்கரி என்று இப்படி நிறையபேர் அங்கே இருக்கிறார்களே/இருந்தார்களே!

க.சு.ஸ.மழாஹிரி, காயல்பட்டிணம்.
தற்போதைய தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களில், ‘போட்டியிட்டாலே வெற்றிதான்’ எனும் அளவுக்குச் சொந்த பலத்தால் வெற்றி பெறக்கூடியவர்கள் யார், யார்?

யாருமே இல்லை. கடந்தத் தேர்தலில், கிட்டத்தட்ட மொத்த எம்.பி தொகுதிகளையும் அ.தி.மு.க-தான் அள்ளியது. சொந்த பலத்தாலேயே வெற்றி என்றால், கூட்டணியே போட்டிருக்க மாட்டார்களே!

கழுகார் பதில்கள்!

@சு.சேகர், ஆலப்பாக்கம், சென்னை- 116.
நயன்தாராவை விமர்சித்த ராதாரவி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். தென்சென்னை தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ‘அழகான வேட்பாளர்’ என்று சொன்ன உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை இல்லையே?


ராதாரவியுடையது, அநாகரிகப் பேச்சு. உதயநிதியுடையது, ஆராதிக்கும் பேச்சு. ஆனால், ‘அழகாக இருக்கிறார், ஓட்டுப்போடுங்கள்’ என்று கேட்பதெல்லாம் அவருடைய அறியாமையையே காட்டுகிறது. அதுமட்டுமல்ல, ‘அழகு’ பற்றியெல்லாம் பேசுவது அழகல்ல என்பது, இந்த நவீன யுகத்திலும் உதயநிதி போன்றவர்களுக்குத் தெரியாமல் இருப்பது வேதனையே!

@சி.கார்த்திகேயன், சாத்தூர்.
ஜெயலலிதாவின் கைரேகை விஷயத்தில், இந்தியத் தேர்தல் ஆணையத்தையே ஏமாற்றியுள்ளது அ.தி.மு.க. இதற்கெல்லாம் தண்டனையே கிடையாதா?

நாட்டையும் மக்களையும் தேர்தல் ஆணையம் ஏமாற்றுவதைவிடவா! ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது பணப்பட்டுவாடா நடைபெற்றதற்கான ஆதாரங்களையே அள்ளி வந்தார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி பலர் மீதும் புகார் படிக்கப்பட்டது. ஆனால், அதுதொடர்பாக ஒரு துரும்பையும் அசைக்கவில்லை ஆணையம். எஃப்.ஐ.ஆரில் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் ஒப்புக்கு வழக்குப் பதிந்தனர். விஷயம் நீதிமன்றப் படியேறிய பிறகுதான் பெயர்களைச் சேர்த்தனர். அதன்பிறகும்கூட விசாரணை நடக்காதது மட்டுமின்றி தண்டனை வழங்கப்படவே இல்லை.

பி.முத்துராஜ், திருத்துறைப்பூண்டி.
இது நாடாளுமன்றத் தேர்தல். தேசியக் கட்சிகள்தானே தேர்தல் அறிக்கை தரவேண்டும். தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க போன்ற மாநிலக் கட்சிகள் எதற்காகக் கொடுக்கின்றன?


ஹலோ முத்துராஜ், இதற்கெல்லாம் ஏன் ரொம்பவே கவலைப்படுகிறீர்கள். யார் கொடுத்தாலும் எதுவும் நடக்கப் போவதில்லையே. முன்பு எம்.ஜி.ஆர், போஸ்ட்கார்டு விலையைக் குறைப்பேன் என்று கூறவில்லையா?

கழுகார் பதில்கள்!

@காஞ்சி எஸ்.ஃபைசுதீன், காஞ்சிபுரம்-1.
தொப்பி, குக்கர், பரிசுப்பெட்டி என எந்தச் சின்னத்தைக் கொடுத்தாலும் ஒன்றை ஒன்று மிஞ்சும் அளவுக்கு மக்களிடம் எளிதாகப் போய்ச் சேர்ந்துவிடுகிறதே?


ஆனால், அதற்காக டி.டி.வி. தினகரன் படும் கஷ்டம், அவருக்குத்தானே தெரியும்.

என்.காளிதாஸ், சிதம்பரம்.
‘நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் முத்தலாக் தடைச் சட்டம் வாபஸ் பெறப்படும்’ என காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவர் கூறியுள்ளாரே?


முத்தலாக் தடைசெய்யப்பட வேண்டியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதேசமயம், அந்தச் சட்டத்தின் மூலமாக இஸ்லாமிய ஆண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பதும் உண்மை. அதை மட்டும் மாற்றுவதாகச் சொன்னால் வரவேற்கலாம். ஒட்டுமொத்தமாகத் தடைச் சட்டத்தையே வாபஸ் வாங்குவோம் என்று சொன்னால், அது இஸ்லாமியப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகவே இருக்கும்.

@முத்துக்கிருஷ்ணன், தாராபடவேடு, வேலூர்-7
தமிழக முதல்வர்களாக இருந்த ஓமந்தூர் ராமசாமி, காமராஜர், பக்தவத்சலம், ராஜாஜி, அண்ணா ஆகியோரின் வாரிசுகள் எம்.பி., எம்.எல்.ஏ என்று பதவிகளுக்கு வரவில்லையே?

ஓமந்தூர் ராமசாமியின் வாரிசுகள், மிக இளவயதிலேயே மரணமடைந்துவிட்டனர். காமராஜருக்கு வாரிசுகளே இல்லை. பக்தவத்சலத்தின் பேத்தி ஜெயந்தி நடராஜன் மத்திய அமைச்சராக இருந்தார். ராஜாஜியின் மகன் கிருஷ்ணகிரி எம்.பி-யாக இருந்தார். அண்ணாவுக்கும் நேரடி வாரிசுகள் இல்லை.

பெ.வேலுமணி, நாராயணபாளையம்.
‘தீவிரப் பிரசாரத்தில் மட்டுமே முழுக்கவனத்தையும் செலுத்தத்  தீர்மானித்துள்ளதால், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை’ என்று தீபா முடிவெடுத்துள்ளாராமே?


கடும்வெயில் காலத்தில், மக்களை வீணாக வீதிகளுக்கு வரவழைத்துக் கஷ்டப்படுத்தக் கூடாது என்கிற நல்லெண்ணத்திலும், தன்னையும் கஷ்டப்படுத்திக்கொள்ளக்கூடாது என்கிற உரிமையிலும் காலையில் ஓர் அரை மணி நேரம்... மாலையில் ஓர் அரை மணி நேரம் மட்டும் சென்னை தி.நகரிலிருக்கும் தன்வீட்டு பால்கனியில் நின்று பிரசாரம் செய்யத் தீர்மானித்திருப்பதாகக் கேள்வி.

கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!