Published:Updated:

தொடரும் ‘ரத்தக்கறை’... - கர்ப்பிணிகளை காவு வாங்கிய சுகாதாரத் துறை!

தொடரும் ‘ரத்தக்கறை’... - கர்ப்பிணிகளை காவு வாங்கிய சுகாதாரத் துறை!
பிரீமியம் ஸ்டோரி
News
தொடரும் ‘ரத்தக்கறை’... - கர்ப்பிணிகளை காவு வாங்கிய சுகாதாரத் துறை!

நான்கு மாதங்களில் 15பேர் சாவு

ரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்தே இன்னும் மீளவில்லை. பொறுப்பற்ற இந்த அரசின் அலட்சியத்தின் தொடர்ச்சியாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூர் மருத்துவமனைகளில், கெட்டுப்போன ரத்தத்தை ஏற்றியதால் 15 கர்ப்பிணிப் பெண்கள் உயிரிழந்துவிட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி, மீண்டும் தமிழகத்தை பதறவைத்திருக்கிறது!  

மருத்துவக் கட்டமைப்பில் சிறந்த மாநிலம் என்று பெயர்பெற்றது தமிழகம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அரசு மருத்துவ மனைகள் நோயாளிகளைத் துச்சமென மதிப்பதுவும், அவர்களது உடல்நலத்தில் அலட்சியம் காட்டிவருவதும் இப்படியான பேரவலங்களுக்குக் காரணமாகிவருகிறது. பிரசவத்துக்காக வரும் கர்ப்பிணிப் பெண்கள், சிசுக்கள் இறக்கநேர்ந்தால், அதை ‘மெட்டர்னல் டெத்’ என்று குறிப்பிடுவார்கள். அப்படியான மரணங்கள் நிகழும்போது, அதுகுறித்து விவாதிக்கவும், ஆய்வுசெய்யவும் மாவட்ட, மாநில அளவில் மருத்துவர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் உள்ளன. அந்தக் குழுக்கள், மருத்துவ அறிக்கைகளை ஆராய்ந்து, இறப்புக்கான காரணங்களைக் கண்டறியும். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இந்த சரிபார்ப்பு முறை, முதன்முதலாக தொடங்கப்பட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

தொடரும் ‘ரத்தக்கறை’... - கர்ப்பிணிகளை காவு வாங்கிய சுகாதாரத் துறை!

சமீபத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங் களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ‘மெட்டர்னல் டெத்’ குறித்து நடத்தப்பட்ட தணிக்கையில்தான், கடந்த நான்கு மாதங்களில் 15 கர்ப்பிணிப் பெண்கள் இறந்துள்ள விவகாரம் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்தான், ‘பிரசவத்தின்போது 15 கர்ப்பிணிப் பெண்களுக்குக் கெட்டுப்போன ரத்தம் ஏற்றப் பட்டதால், உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது’ என்கிற அதிர்ச்சிகரமானத் தகவல்களும் வெளியாகியுள்ளன.

ஒவ்வொரு மனிதனின் உடலிலும் சராசரியாக நான்கரை முதல் ஐந்தரை லிட்டர்வரை ரத்தம் உள்ளது. தானம்செய்ய வருபவரிடமிருந்து அதிகபட்சமாக 450 மி.லி வரை ரத்தம் சேகரிக்கப்படும். பிறகு, அதிலிருந்து தேவைக்கேற்ப ரத்தச் சிவப்பணுக்கள், ரத்தத் தட்டணுக்கள், பிளாஸ்மா போன்றவை பிரித்தெடுக்கப்பட்டு, தகுந்த வெப்பநிலையில் குறிப்பிட்ட காலம்வரை பாதுகாக்கப்படும். அதன்படி, தூய ரத்தம் 35 நாள்கள், ரத்தச் சிவப்பணு 42 நாள்கள், ரத்தத் தட்டணுக்கள் ஐந்து நாள்கள், பிளாஸ்மா ஒரு வருடம்வரை எனக் குறிப்பிட்டக் காலங்களுக்குப் பாதுகாக்கப்படும். இந்தக் காலகட்டங்களுக்குப் பிறகு அவற்றைப் பயன்படுத்தக்கூடாது.

கர்ப்பிணிகளுக்கு ரத்தம் ஏற்றுவது, இரண்டு சூழல்களில் பரிந்துரைக்கப்படும். பிரசவம் நெருங்கும் நேரத்தில், உடனடியாக ஹீமோகுளோபினை அதிகரிக்க ரத்தம் ஏற்றப்படும். பிரசவத்துக்குப் பிறகு சிலருக்கு அளவுக்குமீறிய ரத்தப்போக்கு ஏற்படக்கூடும். அப்போது, ஹீமோகுளோபின் அளவு குறைந்துவிடும். இந்தப் பிரச்னையைச் சரிசெய்யவும் ரத்தம் ஏற்றப்படும்.

ரத்த வங்கிகளில் சேகரிக்கப்படும் ரத்த மாதிரிகளை இரண்டு டிகிரி முதல் ஆறு டிகிரிவரையிலான வெப்பநிலையில் பராமரிக்கவேண்டும். வெப்பநிலை அதிகரித்தால் ரத்தத்தின் தன்மை மாறும்.அதாவது, ரத்தமானது பயன்படுத்தமுடியாத அளவுக்குக் கெட்டுப்போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ரத்த வங்கியிலிருந்து ரத்தம் அனுப்பப்படுவதற்கு முன்பு, குறைந்தது மூன்று அல்லது நான்கு இடங்களில், ‘சம்பந்தப்பட்ட நோயாளியின் ரத்த வகையைச் சேர்ந்த ரத்தம்தானா?’ என்பதும், ‘ரத்தம் காலாவதி அடையாமல் இருக்கிறதா?’ என்பதுவும் பரிசோதிக்கப்படும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தொடரும் ‘ரத்தக்கறை’... - கர்ப்பிணிகளை காவு வாங்கிய சுகாதாரத் துறை!

இவை எல்லாம் மேற்கண்ட மருத்துவமனை களில் நடந்ததா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கிருஷ்ணகிரி, ஓசூரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நேரில் விசாரித்தோம். அக்கறையுள்ள சில மருத்துவமனை ஊழியர்கள் நம்மிடம் ஆதங்கத்தோடு சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.

“ரத்தம் சேகரிப்பதற்காக மும்பையிலிருந்து ரத்தம் சேகரிப்பு பையை தமிழக அரசு கொள்முதல்செய்கிறது. அந்தப் பையின் தரம் சரியில்லை என்று பலமுறை இங்கிருக்கும் மருத்துவர்கள் புகார் செய்துவிட்டார்கள். யாரும் காதுகொடுத்துக் கேட்கவில்லை. இங்கிருக்கும் ரத்த வங்கியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தோம். அதையும் கண்டுகொள்ளவில்லை. ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு ரத்தத்தை எடுத்துச்செல்லும்போது ஏற்படும் காலதாமதம்கூட ரத்தம் கெட்டுப்போகக் காரணமாகலாம். எனவே, கண்துடைப்புக்காக பொத்தாம் பொதுவாக நடவடிக்கை எடுக்காமல், அனைத்தையும் தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்கள்.

இன்னும் சில ஊழியர்கள், “ரத்த வகைகளைப் பரிசோதனைசெய்வதற்கான ரசாயனங்கள், அரசு மருந்துக் கிடங்கிலிருந்து பெறப்படுகின்றன. இவை தரம் குறைந்ததாக இருக்கின்றன. இவற்றைக்கொண்டு ஆய்வு செய்யும்போது தவறான முடிவுகள் கிடைக்கின்றன. ரத்தம் ஏற்றுவதில் ஏற்படும் பிரச்னைகளுக்கு இதுவும் ஒரு காரணம்” என்றார்கள்.

சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் ரவீந்திரநாத்திடம் பேசினோம். “தமிழக அரசின் ரத்த வங்கி - ரத்தப் பரிசோதனை நிலையங்களின் சேவைகள், பரிசோதனைக்கு வழங்கப்படும் உபகரணங்கள் ஆகியவை தரமாக இல்லை. தேசிய ரத்தம் ஏற்றுதல் கழகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி ரத்த வங்கிகளில் மருத்துவர்கள், டெக்னீஷியன், ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை. ஒப்பந்தம் மற்றும் ‘அவுட் சோர்ஸிங்’ முறையிலான பணி நியமனங்களால்தான், இதுபோன்ற அலட்சியங்கள் நடக்கின்றன. ரத்தத்தைச் செலுத்துவதற்கு முன்பாக, ஹெச்.ஐ.வி, ஹெப்படைட்டிஸ் பி ஆகிய நோய்களுக்கான பரிசோதனைகள் முறையாகச் செய்யப்படுவதில்லை. இந்தச் சம்பவம் குறித்து எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவ நிறுவனங்களின் நிபுணர்களைக்கொண்டு நேர்மையான விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். இறந்த கர்ப்பிணிப் பெண்களின் குடும்பங்களுக்கு, தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றார்.

தொடரும் ‘ரத்தக்கறை’... - கர்ப்பிணிகளை காவு வாங்கிய சுகாதாரத் துறை!

இந்தச் சம்பவத்தில் தவறு நடந்தது உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட மூன்று ரத்த வங்கிகளின் பொறுப்பு அதிகாரிகளான எம்.சந்திரசேகர், நாராயணசாமி, சுகந்தா மற்றும் 12-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், சோதனைக்கூட தொழில்நுட்ப வல்லுநர்கள்மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் ஏ.எட்வின் ஜோ மற்றும் மருத்துவச் சேவைகள் இயக்குநர் என்.ருக்மணி ஆகியோருக்கு பீலா ராஜேஷ் எழுதியிருக்கும் கடிதத்தில், ‘கடமைத் தவறியக் குற்றத்துக்காக, தமிழ்நாடு சிவில் சர்வீசஸ் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் அப்பீல் விதிகளின்கீழ், இவர்கள் அனைவரின்மீதும் குற்ற வழக்குகள் பதிவுசெய்யவும், துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் அசோக்குமாரிடம் கேட்டோம். “15 கர்ப்பிணிப் பெண்கள் இறந்ததாகச் சொல்வது தவறானத் தகவல். ரத்தம் செலுத்தப்படும் நோயாளிகளில் ஒரு சதவிகிதம் பேர், ரத்தம் பொருந்தாமல் இறந்துபோக வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. கிருஷ்ணகிரியைப் பொறுத்தவரை இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் இறந்துள்ளார்கள் என்பதே பதிவாகியிருக்கும் செய்தி. இதுவுமே வருந்தத்தக்கதுதான் என்றாலும், இதற்கு கர்ப்பிணிப் பெண்களின் உடல்நிலை உள்ளிட்ட மருத்துவக் காரணங்களும் உள்ளன. இதே காலகட்டத்தில் பிறந்த குழந்தைகள், முதியோர்கள் என நிறையப் பேருக்கு ரத்தம் செலுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனாலும், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்திவருகிறோம்” என்றார்.

தொடரும் ‘ரத்தக்கறை’... - கர்ப்பிணிகளை காவு வாங்கிய சுகாதாரத் துறை!

மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஏ.எட்வின் ஜோவிடம் பேசினோம். “பிரசவக் காலங்களில் இறந்துபோன 15 கர்ப்பிணிப் பெண்களின் மருத்துவ அறிக்கையை நாங்கள் தணிக்கை செய்தோம். அதுகுறித்து முதல்கட்ட விசாரணைதான் நடந்திருக்கிறது. முழுமையான விசாரணை முடிந்தப் பின்னர்தான், எதனால் இறந்தனர் என்பது தெரியவரும். தவறு உறுதி செய்யப்பட்டால், தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மருத்துவச் சேவைகள் இயக்குநர் டாக்டர் என்.ருக்மணியிடம் பேசினோம். “கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூர் ஆகிய அரசு மருத்துவமனைகளில் ரத்தம் ஏற்றியப் பின்னர் மூன்று கர்ப்பிணிப் பெண்கள் இறந்ததாகத் தகவல்வந்தது. அதுகுறித்து முழுமையாக விசாரிக்கப்படவில்லை. சுகாதாரத்துறைச் செயலாளர் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கும்படி கடிதம் அனுப்பியுள்ளார். முழுமையாக விசாரித்த பின்னர்தான் உண்மை தெரியவரும்” என்றார்.

லட்சக்கணக்கான ஏழை மக்களின் நம்பிக்கை யாக இருப்பவை அரசு மருத்துவமனைகள்தான். உயிர்காக்கும் விஷயத்தில், இந்த அரசின் அலட்சியம் தொடர்ந்துகொண்டே இருப்பது, ஆட்சியாளர்களின் பொறுப்பற்றத் தன்மையையே காட்டுகிறது!

- எம்.வடிவேல், ஆர்.செந்தில்குமார்

படங்கள்: வ.யஷ்வந்த்

‘‘நிதி மோசடியும் நடக்கிறது!’’

தொடரும் ‘ரத்தக்கறை’... - கர்ப்பிணிகளை காவு வாங்கிய சுகாதாரத் துறை!

‘தமிழகம் முழுவதும் ரத்த வங்கிகளைக் கண்காணித்து மேம்படுத்த நடவடிக்கை வேண்டும்’ என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத்தொடர்ந்துள்ளார் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார். “அரசு ரத்த வங்கிகளுக்கு ஒதுக்கப்படும் நிதிகளில், பெரிய அளவில் மோசடி நடக்கிறது. ரத்த வங்கிகளில், அரசு மருத்துவ அதிகாரிகள், முறையான பயிற்சி பெற்ற சோதனையாளர்கள், பணியாளர்கள் இல்லை. பல மாவட்டங்களிலும் இதே நிலைதான். ஒவ்வொரு அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கும் ஒரு மருத்துவ அதிகாரியை நியமித்துள்ளார்கள். அவர்கள் பெரும்பாலும் அங்குச் செல்வதில்லை. தற்காலிகப் பணியாளர்களே அனைத்தையும் செய்கிறார்கள். ரத்த வங்கிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி எங்கே செல்கிறது என்று தெரியவில்லை. இதை எல்லாம் குறிப்பிட்டுத்தான், சாத்தூர் பெண்ணுக்கு நியாயம் கேட்டு வழக்கு தாக்கல் செய்தேன். அதன்மூலம் அப்பெண்ணுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாத்தூர் சம்பவத்துக்குப் பிறகும் தமிழக அரசு, அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகளைக் கண்காணிக்கவில்லை. அதன் தொடர்ச்சியாகத்தான் தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி சம்பவங்களைப் பார்க்க வேண்டும்’’ என்றார்.

-செ.சல்மான்