Published:Updated:

`என்னுடைய அரசியல் பயணத்துக்கு உந்துசக்தி இந்த காஞ்சி நகரம்!’ - ஸ்டாலின் நெகிழ்ச்சி

`என்னுடைய அரசியல் பயணத்துக்கு உந்துசக்தி இந்த காஞ்சி நகரம்!’ - ஸ்டாலின் நெகிழ்ச்சி
`என்னுடைய அரசியல் பயணத்துக்கு உந்துசக்தி இந்த காஞ்சி நகரம்!’ - ஸ்டாலின் நெகிழ்ச்சி

`என்னுடைய அரசியல் பயணத்துக்கு உந்துசக்தி இந்த காஞ்சி நகரம்!’ - ஸ்டாலின் நெகிழ்ச்சி

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் கலைஞர் சிலை திறப்பு விழா நேற்று காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. விழாவுக்கு வருவதற்கு முன்பு திருக்கழுக்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்றார் ஸ்டாலின். அங்கு தி.மு.க அறக்கட்டளைக்குச் சொந்தமாக மாமல்லபுரம் பகுதியில் வாங்கப்பட்ட நிலம் பத்திரப் பதிவு செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் வந்த ஸ்டாலினுக்கு மாவட்ட தி.மு.க சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. தனியார் ஹோட்டல் ஒன்றுக்கு அவர் வந்தபோது காங்கிரஸ் பிரமுகரும் காஞ்சிபுரம் முன்னாள் எம்.பி.-யுமான விஸ்வநாதன் ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்துக் கொடுத்தார். நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வினருக்கு காஞ்சிபுரம் தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் தி.மு.க-வினர் எதிர்பார்க்கும் நேரத்தில் விஸ்வநாதன் ஸ்டாலினை சந்தித்ததை காஞ்சி உடன் பிறப்புகள் விரும்பவில்லை.

சேக்கான்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட கல்வெட்டை காரிலிருந்து கீழே இறங்கி ரிமோட் மூலம் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து ரங்கசாமிகுளம் பகுதியில் கட்டப்பட்ட கல்வெட்டைத் திறப்பதற்காக ஸ்டாலின் கார் அப்பகுதிக்கு வந்தது நின்றது. அப்போது காரில் இருந்தவர்கள் ஸ்டாலினிடம் ஏதோ சொல்ல அவர் காரைவிட்டு கீழே இறங்கவேயில்லை. அங்கிருந்தவர்கள் ஸ்டாலினிடம் ரிமோட் கொடுத்ததும் முகம் கறுத்த நிலையில் அதைப் பெற்றுக்கொண்டு கல்வெட்டைத் திறக்காமல் காரின் பின்புறம் இருந்தவர்களிடம் ரிமோட்டைக் கொடுத்துவிட்டார். அந்தக் கல்வெட்டை அமைத்த எஸ்.கே.பி கொடுத்த செங்கோலை வாங்குவதுபோல் வாங்கி அவரிடமே கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

அந்தக் கல்வெட்டு நீர்நிலைப்பகுதியில் அமைந்துள்ளதாக எழுந்த சர்ச்சையை விகடன் இணையதளத்தில் அன்று காலைதான் வெளியிட்டிருந்தோம். இதை தி.மு.க முக்கியப் புள்ளிகள் ஸ்டாலினுக்கு தெரிவித்திருக்கிறார்கள். அதுபோல் சபரீசன் தலைமையில் இயங்கும் ஐ.டி விங் இதைத் திறந்தால் சர்ச்சை ஏற்படும் என ஸ்டாலினுக்கு தகவல் கொடுத்திருந்தார்கள். இதனாலேயே அவர் அதைத் திறக்கவில்லை என்கிறார்கள் தி.மு.க-வினர்.

தி.மு.க தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது முறையாக அண்ணா நினைவு இல்லத்துக்கு வந்திருந்தார் ஸ்டாலின். அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு அங்கிருந்து பவளவிழா மாளிகையில் அமைக்கப்பட்ட கருணாநிதி மற்றும் அண்ணா சிலைகளை திறந்து வைத்தார். ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக டி.ஆர். பாலு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முன்னோட்டமாக டி.ஆர்.பாலு சிலைதிறப்பு விழாவுக்கு வந்திருந்தார்.

இரவு 8.30-க்கு மேடைக்கு வந்த ஸ்டாலின், ``என்னுடைய அரசியல் பயணத்துக்கு எத்தனையோ உந்து சக்தி இருக்கலாம். அதில் முக்கியமானது இந்தக் காஞ்சி நகரம். அண்ணா அவர்கள் கலைஞரைத் தவிர வேறு யார்மீதும் இவ்வளவு பாசம் வைத்திருக்க மாட்டார். கலைஞரும் அண்ணாவைத் தவிர வேறு யார் மீதும் பாசம் வைத்திருக்கவில்லை. கலைஞர் எவ்வளவோ கட்டுரை எழுதியிருந்தாலும் அண்ணாவின் திராவிட நாடு என்ற பத்திரிகைக்குத்தான் தனது முதல் கட்டுரையை அனுப்பி வைத்தார்.

தனக்குப் பின்னால் கலைஞர்தான் என்பதைத் தனது இளமைக் காலத்திலேயே அண்ணா சுட்டிக் காட்டி இருக்கிறார். அதற்குப் பல உதாரணங்கள் உண்டு. திருச்சி தி.மு.கவிலே சில பிரச்னைகள் ஏற்பட்டபோது அங்கிருந்து அண்ணாவை அழைத்தார்கள். ‘நான் வரமாட்டேன் வேண்டுமென்றால் தம்பி கருணாநிதியை அனுப்பி வைக்கிறேன்.’ என்றார் அண்ணா. சென்னை மாநகராட்சியை முதன் முறையாக தி.மு.க கைப்பற்றியபோது கலைஞரை உச்சிமோந்து பாராட்டி அவரின் கைவிரலிலே கணையாழி அணிவித்தார். அந்த கணையாழியைக் கூட அவரே நகைக் கடைக்குச் சென்று, நேரில் போய் வாங்கிவந்தார். அந்தக் கணையாழியை அணிவிக்கும்போது, ‘என்னுடைய மனைவிக்குக் கூட நகைக் கடைக்குச் சென்று நகை வாங்கியது கிடையாது. உனக்காக நகை வாங்கி வந்திருக்கிறேன்’ என்று சொன்னார் அண்ணா” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு