Published:Updated:

`இனி எப்படி என்று நீங்களே முடிவெடுத்துக்கொள்ளுங்கள்' - ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளித்த மோடி!

`இனி எப்படி என்று நீங்களே முடிவெடுத்துக்கொள்ளுங்கள்' - ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளித்த மோடி!
`இனி எப்படி என்று நீங்களே முடிவெடுத்துக்கொள்ளுங்கள்' - ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளித்த மோடி!

'தீவிரவாதிகளை ஒழிக்க ராணுவத்துக்கு முழு அதிகாரம் அளிக்கப்படும்' என பிரதமர் மோடி பேசியுள்ளார். 

காஷ்மீர் மாநிலம் ஜம்மு-வில் இருந்து 78 வாகனங்களில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள், நேற்று முன்தினம் ஸ்ரீநகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். அவர்கள், புல்வாமா மாவட்டம் அவாந்திபோரா என்ற பகுதிக்கு வந்தபோது, 350 கிலோ வெடிபொருள்களை ஏற்றிக்கொண்டு எதிரே வந்த கார், சிஆர்பிஎஃப் வீரர்கள் வந்த பேருந்தின்மீது மோதியது. ஜெய்ஷ்-இ-முகமது என்ற அமைப்பைச் சேர்ந்த ஆதில் அகமது தார் என்ற நபர், 350 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளை மறைத்துவைத்து, ராணுவ வாகனத்தின்மீது கொடூரத் தாக்குதல் நடத்தினார். இந்தத் தாக்குதலில், இதுவரை 44 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 20 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

நாடு முழுவதும் சோகத்தையும், பலத்த எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது இந்தத் தாக்குதல். தாக்குதலைக் கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. இந்நிலையில், 'வந்தே பாரத்' புதிய ரயில் தொடக்க விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். புல்வாமா தாக்குதலின் காரணமாக விழா உற்சாகமின்றி இருந்தது. விழாவில் பேசிய மோடி, ``இந்த கொடூரத் தாக்குதலால் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இதற்கான உரிய விலையைத் தீவிரவாதிகள் கொடுத்தே தீர வேண்டும். கடும் விளைவுகளை அவர்கள் அனுபவிப்பார்கள். தீவிரவாதத் தாக்குதல்களால் இந்தியாவை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்று நினைத்தால் அது முடியாது.

நமது அண்டை நாடு தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதனால்தான், அவர்கள் நம்மை இந்த மாதிரியான தீவிரவாதத் தாக்குதல்கள் மூலம் தொந்தரவு செய்யலாம் என நினைக்கிறார்கள். அவர்களது எண்ணம், திட்டங்கள் ஒருபோதும் கைகூடாது. புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, தீவிரவாதிகளை எதிர்க்கத் தேவையான முழு சுதந்திரமும் ராணுவத்துக்கு அளிக்கப்படுகிறது. தீவிரவாதிகளுக்கு எதிராக எங்கு, எப்போது, எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பதை ராணுவமே இனி முடிவெடுத்துக்கொள்ளலாம். அதற்கான முழு சுதந்திரமும், அனுமதியும் பாதுகாப்பு துறைக்கு கொடுக்கப்படுகிறது. 

இதேபோல, இந்தக் கடினமான சூழ்நிலையை அரசியலாக்க வேண்டாம் என எதிர்க்கட்சிகளைக் கேட்டுக்கொள்கிறேன். மத்திய அரசை விமர்சிக்கும் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், இந்தத் தாக்குதல் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், அரசியல் கட்சியினர் ஒருமித்த கருத்துடன் இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்" என்று பேசினார். இதற்கிடையில், தாக்குதல் தொடர்பாக விவாதிக்க, டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.