`அந்தக் கூட்டம் அரசியலில் அநாதை ஆக்கப்பட வேண்டும்' - கே.பி முனுசாமி காட்டம்! | kp mumusamy slams dmk and ttv dinakaran

வெளியிடப்பட்ட நேரம்: 14:47 (17/02/2019)

கடைசி தொடர்பு:14:47 (17/02/2019)

`அந்தக் கூட்டம் அரசியலில் அநாதை ஆக்கப்பட வேண்டும்' - கே.பி முனுசாமி காட்டம்!

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஒரு கூட்டம் கட்சியையும், ஆட்சியையும் கைபற்றி விட வேண்டும் என முயற்சி செய்தது. நாம் நாடாளுமன்ற தேர்தலில் பெறுகிற வெற்றியின் மூலம் அந்த கூட்டம் காணாமல் போவதோடு, அரசியலில் அநாதையாக ஆக்கப்பட வேண்டும் என்றும் தி.மு.கவின் சகாப்தம் கருணாநிதியோடு முடிந்து விட்டது என அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க சார்பில் தஞ்சாவூரில் 126 ஜோடிகளுக்குச் சீர்வரிசை பொருள்களுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. முன்னாள் அமைச்சரும், துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் அமைச்சர்கள் தங்கமணி, ஆர்.காமராஜ், துரைக்கண்ணு மற்றும் எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

திருமண நிகழ்ச்சி முடிந்ததும் மின்சார துறை அமைச்சர் தங்கமணி பேசியதாவது, ``அ.தி.மு.கவில் கீழே இருப்பவர்கள் மேலே வரலாம், மேலே இருப்பவர்கள் கீழே வரலாம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வந்து விடும் என சொன்னார்கள். ஆனால் தொண்டர்களின் ஆதரவால் இரண்டு ஆண்டுகளைக் கடந்து, மூன்றாம் ஆண்டில் அடித்து வைத்துள்ளது. மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் எப்படி ஆட்சியைச் சிறப்பாக வழிநடத்தி சென்றார்களோ, அதே வழியில் முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் சிறப்பாக ஆட்சியை வழி நடத்திக் கொண்டு செல்கிறார்கள்.

டெல்டா மாவட்டத்திற்குக் காவிரி பிரச்சனையை தீர்த்து கொடுத்தது அ.தி.மு.கதான். ஒரு இயக்கம் இருக்கிறது திருமணத்திற்கு வர வேண்டும் என்று சொன்னால், கட்சிக்கு எவ்வளவு நிதி கொடுப்பீர்கள் என கேட்டுவிட்டுதான் வந்து  கல்யாணத்தை நடத்தி வைக்கிறார்கள். இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும், ஆட்சியை அகற்ற வேண்டும் எனக் கூறும் மற்றொரு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் திருமணத்திற்கு வர வேண்டும் என்று சொன்னால் 100 கார்கள் வர வேண்டும், 200 பேனர்கள் வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு தான் வருகிறார்கள். ஆனால் எந்த காலத்திலும் இலவசமாக ஏழைகளுக்குத் திருமணங்களை நடத்தி வைக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க தான். வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்தி அவர்களுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும்" என்றார்.

முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேசியதாவது, ``ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஒரு கூட்டம் கட்சியையும், ஆட்சியையும் எங்களுடையது என குரல் கொடுத்து கைபற்றிவிட வேண்டும் என முயற்சி செய்தது. அப்போது அ.தி.மு.க தொண்டனுக்குத்தான் கட்சியும் ஆட்சியும் சொந்தம் என முதல் முறையாகக் குரல் கொடுத்தவர் வைத்திலிங்கம். எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பிறகு கட்சியில் ஏற்பட்ட மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டது. கட்சியின் தலைமை, ஆட்சி பொறுப்பை யார்  ஏற்பது என்கிற குழப்பம் ஏற்பட்டது. அந்த குழப்பத்தை தீர்த்தவர் ஜெயலலிதா நாம் அவரைத் தலைமையாக ஏற்றுக் கொண்டு செயல்பட்டோம். எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பிறகு என்ன சூழல் ஏற்பட்டதோ அதே சூழல் ஜெயலலிதா மறைவிற்கு பிறகும் ஏற்பட்டது. உடன் இருந்த ஒரு கூட்டமே கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற முயற்சி செய்தது.

வரும் தேர்தலுக்கு பிறகு நாம் காணாமல் போய்விடுவோம் என அந்த கூட்டம் மேடைதோறும் பேசி வருகின்றனர். அவர்கள் சளி போன்றவர்கள் எப்படிச் சளி பிடித்தால் தொல்லையாக இருக்குமோ அது போல் அவர்கள் நமக்குத் தொல்லையாக இருக்கிறார்கள் அவர்களை வேரோடு அகற்ற வேண்டும் என்றால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் நான் ஒற்றுமையாகச் செயல்பட்டு வெற்றி பெற வேண்டும். அதன் மூலம் அந்த கூட்டம் காணாமல் போய்விடுவதோடு அரசியலில் அநாதையாக ஆக்கப்படுவார்கள். அதே போல் ஸ்டாலின் தன்னை மறந்து செயல்படுகிறார். தி.மு.கவின் சகாப்தம் கருணாநிதியோடு முடிந்து விட்டது.வரும் தேர்தலில் பெறுகின்ற வெற்றி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க இல்லை என்பதைக் காட்டுகின்ற வகையில் அவருக்கும் முடிவு கட்ட வேண்டும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close