Published:Updated:

திமுக கவுன்சிலர்களை விரட்டியடித்த மேயர்!

மதுரை: மதுரை மாநகராட்சி கூட்டத்திற்கு, திமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்ததால், அவர்கள் காவல்துறையினரால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

பல்வேறு தீர்மாணங்களை நிறைவேற்றும் வகையில் மதுரை மாமன்ற கூட்டம் இன்று காலை பத்து மணிக்கு மேயர் ராஜன் செல்லப்பா தலைமையில் துவங்கியது. இதில் கமிஷனர், மற்றும் அதிகாரிகளின் ஊழல்களை பற்றி, பிரச்சனை கிளப்பப் போவதாக அ.தி.மு.க. கவுன்சிலர்களே கடந்த சில நாட்களாக பத்திரிக்கையாளர்களிடம் கூறி வந்தனர்.

ஆனால், அவர்களை மேயர் சந்தித்து பேசிய பிறகு, ஆப் செய்யப்பட்டார்கள். தமிழகத்தை ஆளும் தங்கள் கட்சி ஆட்சியின் இரண்டாண்டு நிறைவுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மாணங்களை பேசுவதற்கு மேயர் தயாரான போதுதான், மாமன்ற எதிர்கட்சித் தலைவர் எம்.எல்.ராஜ் தலைமையில் திமுக கவுன்சிலர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். இதை பார்த்து டென்ஷனான மேயரும், மற்ற அதிமுக கவுன்சிலர்களும் கையில் வைத்திருந்த பேப்பர், டேபிள் வெயிட்டுகளையும், சாப்பிட்டு கொண்டிருந்த வடைகளையும் திமுக கவுன்சிலர்கள் மீது தூக்கி வீசினார்கள்.

தங்களை பேச விடாத மேயரை எதிர்த்து கோஷம் போட்டனர். மேயரோ, கருப்பு சட்டை போடாமல் வந்தால் மன்றத்திற்குள் இருக்கலாம் என்றார். அதற்கு, கருப்பு சட்டை போடக்கூடாது என்று மாநகராட்சி சட்டத்தில் உள்ளதா என்று கேள்வி எழுப்பினார்கள். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்கு வாதம் வளர்ந்து, கைகலப்பு ஏற்ப்படும் சூழல் ஏற்ப்பட்டது.

அதற்குள் காவலர்கள் வந்து, திமுக கவுன்சிலர்களை வெளியே அழைத்து வந்தனர். இந்த சம்பவம் பற்றி, மாநகராட்சித் திமுகத்  தலைவர் எம்.எல்.ராஜ், ‘‘மக்கள் பிரச்சனைகளை மாமன்றத்தில் பேச முடியவில்லை. எல்லாவற்றிலும் ஊழல் நடக்கிறது. இதை எதிர்த்துதான் நாங்கள் கருப்பு சட்டை போட்டு வந்தோம். இது ஜனநாயக ரீதியான நடவடிக்கைதான். இதற்கே, மேயரும், அவர் கவுன்சிலர்களும் ரவுடித்தனமாக நடந்து கொண்டார்கள்’’ என்றார்.

  - செ.சல்மான்