`செலவழிக்கிறோம்; ஜெயிக்கிறோம்!'  - தேனியில் தேர்தல் வியூகம் சொன்ன ஸ்டாலின் | Stalin's strategy on parliament election

வெளியிடப்பட்ட நேரம்: 16:12 (18/02/2019)

கடைசி தொடர்பு:16:14 (18/02/2019)

`செலவழிக்கிறோம்; ஜெயிக்கிறோம்!'  - தேனியில் தேர்தல் வியூகம் சொன்ன ஸ்டாலின்

தொகுதி உடன்பாட்டில் உள்ள சிரமங்களைப் போக்கும் வேலையில் கனிமொழி ஈடுபட்டு வருகிறார். இதற்காக ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு அவர் டெல்லியில் முகாமிட்டிருக்கிறார்.

`செலவழிக்கிறோம்; ஜெயிக்கிறோம்!'  - தேனியில் தேர்தல் வியூகம் சொன்ன ஸ்டாலின்

கிராம சபைக் கூட்டத்தை முன்வைத்து தி.மு.க-வும் மக்கள் நீதி மய்யமும் மோதிக் கொண்டிருக்கின்றன. நடிகர் கமல்ஹாசனின் கருத்துக்கு உதயநிதி ஸ்டாலின் அளித்த பதில், வைரலாகிக் கொண்டிருக்கிறது. இந்த மோதல்கள் ஒருபுறம் இருந்தாலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளில் வேகம் காட்டி வருகிறார் ஸ்டாலின். `செலவழிக்கிறோம், ஜெயிக்கிறோம்' எனக் கட்சி நிர்வாகிகளுக்கு அவர் உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறார். 

கட்சி கூட்டத்தில் ஸ்டாலின்

நாடாளுமன்றத் தேர்தலுக்காக தேசியக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், சி.பி.ஐ, சி.பி.எம், ஐ.யூ.எம்.எல் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக்குள் பா.ம.க, தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டு சேரலாம் என்ற தகவல் வெளிவருகிறது. ஆனால், இரு பிரதான கட்சிகளும் கூட்டணிக் கட்சிகள் குறித்த விவரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அ.தி.மு.க கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறப் போகிறது என தி.மு.க தரப்பிலும் ஆர்வத்துடன் கவனித்து வருகிறார்கள். தேர்தல் கூட்டணி ஒருபுறம், கிராமசபைக் கூட்டம் மறுபுறம் என தி.மு.க தரப்பில் உற்சாகம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. தி.மு.க கூட்டணிக்குள்ளும், `வி.சி.க அங்கம் வகிக்குமா... வைகோ இடம் பெறுவாரா?' என ஹேஷ்யங்களும் உலா வருகின்றன. இதற்கெல்லாம் எந்த விளக்கத்தையும் தி.மு.க தலைமை அளிக்கவில்லை. 

ஸ்டாலின்

``நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில், காங்கிரஸ், இடதுசாரிகள், வி.சி.க, ம.தி.மு.க ஆகிய கட்சிகளை முன்னிறுத்தித் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். இதற்கு மேல் எந்தக் கட்சிகளும் கூட்டணியில் தேவையில்லை என்பதுதான் மு.க.ஸ்டாலினின் நிலைப்பாடு. தொகுதி, சீட் பங்கீடு ஆகிய விவகாரங்களில் ஏதேனும் கருத்து மோதல்கள் ஏற்படலாம். அதையும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்ற முடிவில் தலைமைக் கழக நிர்வாகிகள் உள்ளனர்" என விவரித்த அண்ணா அறிவாலய நிர்வாகிகள் சிலர், 

ஸ்டாலின்

``தி.மு.க கூட்டணியில் பாண்டிச்சேரியோடு சேர்த்து 7 இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதற்கான வாய்ப்பு உள்ளது. சேலம், காஞ்சிபுரம், கடலூர், ஆரணி, சிவகங்கை, தென்காசி (தனி), கன்னியாகுமரி, பாண்டிச்சேரி உள்ளிட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட இருப்பதாகச் சொல்கின்றனர். இந்தத் தொகுதிகளில் ஏதேனும் மாற்றம் ஏற்படலாம். தொகுதி உடன்பாட்டில் உள்ள சிரமங்களைப் போக்கும் வேலையில் கனிமொழி ஈடுபட்டு வருகிறார். இதற்காக ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு அவர் டெல்லியில் முகாமிட்டிருக்கிறார். தி.மு.க தலைவர் ஸ்டாலினும், கிராம சபைக் கூட்டங்களுக்குச் செல்லும்போது பூத் கமிட்டிப் பணிகளையும் ஆய்வு செய்து வருகிறார். முக்கிய நிர்வாகிகளிடம் அவர் பேசும்போதும், ` நாம் செலவழிக்கிறோம், ஜெயிக்கிறோம்' என நம்பிக்கையோடு பேசியிருக்கிறார். வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டங்களுக்கு வராதவர்களை அவர் கடிந்து கொள்ளவில்லை. கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு அவர் கொடுக்கும் வாக்குறுதிகளால் கட்சிக்காரர்கள் உற்சாகமாக உள்ளனர். 

பூத் கமிட்டி கூட்டத்தில் ஸ்டாலின்

நேற்று முன்தினம் (16-ம் தேதி) தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசினார். இந்தக் கூட்டத்தில் 3,000 பேர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஸ்டாலின், 'அனைத்து வாக்குச்சாவடி முகவர்களுக்கும் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். தேர்தலுக்குப் பிறகும் வாக்குச்சாவடி முகவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படும். அவர்களின் தேவைகள் அனைத்தும் சரி செய்யப்படும். ஆட்சிக்கு வருவோம். உங்களது குறைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும். இந்தக் கூட்டத்துக்கு வராதவர்களுக்கு வேறு எதாவது சூழ்நிலைகள் இருக்கலாம். உங்களோடு பூத் கமிட்டிப் பணிக்கு வருகிறவர்களை அரவணைத்துச் செல்லுங்கள். அனைத்தும் கழகத்துக்கான வாக்குகளாக மாற வேண்டும்.

ஸ்டாலின்

பூத் கமிட்டி முகவர்களை ஒருநாளும் மறக்க மாட்டேன். ஒட்டுக்களைக் குவித்து வெற்றிக்குப் பாடுபடுங்கள். ஆட்சிக்கு வந்ததும் உங்கள் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும்' என்றார். இதில், கூட்டத்தில் பங்கேற்காதவர்களின் பெயர்களை மட்டும் டிக் அடித்துக் கொண்டார். அவரது இந்தப் பேச்சு கட்சிக்காரர்கள் மத்தியில் உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது. ஆர்.கே.நகர் தொகுதி தோல்விக்கு முக்கியக் காரணமே, பூத் கமிட்டிகள்தான். அதை உணர்ந்து, அனைத்து தொகுதிகளிலும் பூத் கமிட்டிப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார். தேனியில் அவர் கொடுத்த வாக்குறுதி, வாக்குச்சாவடி முகவர்களுக்கு டானிக்காக அமைந்தது" என்கின்றனர் பூரிப்புடன்.


[X] Close

[X] Close