2004 அறிக்கை... 2019 அறிக்கை... ரஜினி சொன்னதில் என்ன வித்தியாசம்?! | What are the differences between Rajinikanth's 2004 and 2019 statements?

வெளியிடப்பட்ட நேரம்: 20:32 (18/02/2019)

கடைசி தொடர்பு:11:46 (16/03/2019)

2004 அறிக்கை... 2019 அறிக்கை... ரஜினி சொன்னதில் என்ன வித்தியாசம்?!

``தமிழகத்தின் தண்ணீர்ப் பிரச்னையை யார் தீர்ப்பார்கள் என நம்புகிறீர்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள்'' எனக் குறிப்பிட்டிருக்கிறார். தண்ணீர்ப் பிரச்னையைத் தீர்ப்பதில் காங்கிரஸைவிட பி.ஜே.பி-க்குதான் ஆற்றல் இருக்கிறது என மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார் ரஜினி.

2004 அறிக்கை... 2019 அறிக்கை... ரஜினி சொன்னதில் என்ன வித்தியாசம்?!

‘வயசானாலும் உன்னோட ஸ்டைலும் அழகும் போகலை''- `படையப்பா' படத்தில் `நீலம்பரி' ரம்யா கிருஷ்ணன் பேசும் டயலாக் ஆல்டைம் ஃபேவரைட். ``நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை. படத்தையோ கொடியையோ பயன்படுத்தக் கூடாது'' என மீண்டும் வாய்ஸ் கொடுத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார். பல ஆண்டுகள் உருண்டோடினாலும் வயசானாலும்கூட ரஜினியின் `அரசியல் வாய்ஸ்' அப்படியேதான் இருக்கிறது. 

ரஜினியின் பேட்டியோ, அறிக்கைகளோ பேச்சுகளோ மறுபடியும் ரிப்பீட் ஆனதில்லை. ஆனால், இப்போது ரஜினி வெளியிட்டிருக்கும் அறிக்கை அப்படியே 2004 நாடாளுமன்றத் தேர்தலின் பிரதிபலிப்பு. ``தமிழகத்தின் தண்ணீர்ப் பிரச்னையை யார் தீர்ப்பார்கள் என நம்புகிறீர்களோ, அவர்களுக்கு வாக்களியுங்கள்'' என அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் ரஜினி. இதே விஷயத்தைதான் 2004 நாடாளுமன்றத் தேர்தலின்போதும் சொல்லியிருந்தார் ரஜினி. 

`பாபா’ படத்துக்கு எதிராக பா.ம..க போர்க்கோலம் பூண்டபோது, 2004 எம்.பி. தேர்தலில் பா.ம.க போட்டியிட்ட ஆறு தொகுதிகளில் மட்டும் அ.தி.மு.க. - பி.ஜே.பி. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தார் ரஜினி. அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையில் சொன்ன வார்த்தைகள் அப்படியே இங்கே...

ரஜினி

``ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும்பொழுது அது நாடாளுமன்றத் தேர்தலாகட்டும் அல்லது சட்டமன்றத் தேர்தலாகட்டும் என்னுடைய ஆதரவு யாருக்கு, அதாவது என்னுடைய வாய்ஸ் யாருக்கு என்ற கேள்வி எழுகிறது. இந்த முறையும் அந்தக் கேள்வி எழுந்துள்ளது. நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். பல காரணங்களுக்காக இந்த நாடாளுமன்றத் தேர்தலில் என்னுடைய ஆதரவு யாருக்கும் இல்லை. ஆனாலும், நான் ஒன்றை மட்டும் சொல்லியாக வேண்டும். என் அன்பார்ந்த தமிழ் மக்களே, இப்பொழுது நம் நாட்டிலேயே தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கும் பிரச்னை தண்ணீர்ப் பிரச்னை. ஏழைகளிலிருந்து, பணக்காரர்களிலிருந்து, மிருகங்கள், பறவைகளிலிருந்து இப்பொழுது அனைவரும் தவித்துக்கொண்டிருப்பது தண்ணீருக்காக. நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். இந்திய நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்தால்தான், இந்தக் கடுமையான பிரச்னை தீரும். நம் நாட்டிலுள்ள தண்ணீர்ப் பஞ்சத்தை நீக்க இந்த ஒரே வழிதான் உண்டு. குறிப்பாக, நம் நாட்டு நதிகளை இணைக்காவிட்டால் ரொம்ப பாதிக்கப்படப் போவது தமிழ்நாடுதான். ஏனென்றால், நம்மைச்சுற்றி உள்ள மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் எல்லாம் பல ஜீவநதிகள் உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் தண்ணீர் சுமந்து வரும் எந்த ஜீவநதியும் இல்லை.

`நம் நாட்டு நதிகளை இணைக்கும் திட்டத்தைச் செயல்படுத்தினால் இதற்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்கிறேன்' என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். இது அனைவரும் அறிந்த விஷயமே. மத்தியில் அமையும் ஆட்சிதான் நம் நாட்டு நதிகளை இணைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த முடியும். நான் இந்த ஒரு மாத இடைவெளியில் இந்தியாவிலுள்ள பல மாநிலங்களைச் சுற்றி வந்தேன். எனக்கு ஒன்று நேரிடையாக, தெளிவாகத் தெரிந்தது. இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தக் கூட்டணிக்கு எவ்வளவு சீட் கிடைக்கப் போகிறதோ எனக்குத் தெரியாது. ஆனால், இந்தத் தேர்தலில் மத்தியில் அமரப் போவது வாஜ்பாய் தலைமையிலான என்.டி.ஏ., அரசுதான். இது உறுதி.

என்னைப் பொறுத்தவரையில், இந்திய நாட்டின் முக்கியப் பிரச்னையான தண்ணீர்ப் பிரச்னைக்கு யார் தீர்வு காண்கிறார்களோ அவர்களுக்கே என் ஓட்டு. நதிகளை இணைக்கும் திட்டத்தில் மற்றவர்கள் ஓர் உறுதியான முடிவுக்கு வராத இந்த நேரத்தில், இரண்டு நாள்களுக்கு முன்பாக வாஜ்பாய் தலைமையிலான என்.டி.ஏ., அரசின் தேர்தல் அறிக்கையில், `தண்ணீர்ப் பஞ்சத்தைத் தீர்ப்பதற்காக இந்திய நாட்டின் அனைத்து நதிகளையும் கண்டிப்பாக இணைப்போம்' என்று உறுதியாகச் சொல்லியிருக்கிறார்கள். திரு.அத்வானி அவர்களே அதைச் செயல்படுத்தியே தீருவோம் என்று என்னிடம் உறுதி அளித்திருக்கிறார்கள். வாஜ்பாய் அரசு அதைச் செய்யும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆக, இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி., கூட்டணிக்குதான் என் ஓட்டு.

ரஜினி

தமிழக மக்களே, அன்பான ரசிகர்களே, மறுபடியும் சொல்கிறேன். இது எந்தக் கூட்டணிக்கும் என் ஆதரவு அல்ல. இது என் ஓட்டு மட்டும்தான். இதற்காகத் தமிழக மக்களையோ, என் ரசிகர்களையோ நான் ஓட்டுப் போடும் கூட்டணிக்குத்தான் ஓட்டுப் போட வேண்டும் என்று நான் வற்புறுத்த மாட்டேன். நான் இந்தக் கூட்டணிக்கு ஓட்டுப் போடுவதாலே என் ரசிகர்களும், இந்தக் கூட்டணிக்குத்தான் ஓட்டுப் போட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நீங்கள் பல கட்சிகளில் இருக்கிறீர்கள். உங்களின் ஓட்டு உரிமையை நான் பறிக்க மாட்டேன். ஆனால், சிந்தியுங்கள். தமிழ்நாட்டிலுள்ளவர்கள் மட்டுமல்ல இந்தியாவில் வாழும் அனைத்து மக்களே குறிப்பாக தாய்மார்களே, இளைஞர்களே, மாணவ, மாணவிகளே, படித்தவர்களே நீங்கள் ஓட்டுச் சாவடிக்கு ஓட்டுப் போடப் போகும்போது நம் கட்சி ஆளு ஜெயிக்கணும்ன்னு ஓட்டுப் போடப் போறீங்களா, இல்லை நம்ம ஜாதி ஆளு ஜெயிக்கணும்ன்னு ஓட்டுப் போடப் போறீங்களா, இல்லை தண்ணீ வேணும்ன்னு ஓட்டுப் போடப் போறீங்களா?னு முடிவு பண்ணுங்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். சிந்தியுங்கள், செயல்படுங்கள்.''

இவ்வளவுதான் அறிக்கையில் உள்ள விஷயங்கள். இப்போது மேட்டருக்கு வருவோம். 

1999 நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயித்த பி.ஜே.பி., வாஜ்பாய் தலைமையில் மத்தியில் ஆட்சியை அமைத்தது. அந்த ஆட்சியின் முடிவில், 2004 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டது. தேர்தலில் வென்று, மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நம்பிக்கையில்தான், ஆட்சி முடிவதற்கு ஆறு மாதம் முன்பே நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டார் வாஜ்பாய். ``இந்தத் தேர்தலில் மத்தியில் அமரப் போவது வாஜ்பாய் தலைமையிலான என்.டி.ஏ., அரசுதான். இது உறுதி'' என அறிக்கையில் சொன்னார் ரஜினி. ஆனால், அவர் சொன்னபடி வாஜ்பாய் ஜெயிக்கவில்லை. 

ரஜினி - வாஜ்பாய் சந்திப்பு

இப்போது வெளியிட்ட அறிக்கையிலும் தண்ணீர்ப் பிரச்னையைச் சொல்லியிருக்கிறார். ``தமிழகத்தின் தண்ணீர்ப் பிரச்னையை யார் தீர்ப்பார்கள் என நம்புகிறீர்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள்'' எனக் குறிப்பிட்டிருக்கிறார். தண்ணீர்ப் பிரச்னையைத் தீர்ப்பதில் காங்கிரஸைவிட பி.ஜே.பி-க்குதான் ஆற்றல் இருக்கிறது என மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார் ரஜினி. 2004-ல் வெளியிட்ட அறிக்கையில், ``வாஜ்பாய் தலைமையிலான என்.டி.ஏ., அரசின் தேர்தல் அறிக்கையில் தண்ணீர்ப் பஞ்சத்தைத் தீர்ப்பதற்காக இந்திய நாட்டின் அனைத்து நதிகளையும் கண்டிப்பாக இணைப்போம் என்று உறுதியாகச் சொல்லியிருக்கிறார்கள். திரு.அத்வானி அவர்களே அதைச் செயல்படுத்தியே தீருவோம் என்று என்னிடம் உறுதி அளித்திருக்கிறார்கள். வாஜ்பாய் அரசு அதைச் செய்யும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆக, இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி., கூட்டணிக்குதான் என் ஓட்டு'' எனச் சொன்னார் ரஜினி. 2004 தேர்தலில் தண்ணீர்ப் பிரச்னையை பி.ஜே.பி-யால்தான் தீர்க்க முடியும் எனச் சொன்ன ரஜினி, அதே தண்ணீர்ப் பிரச்னையை இந்தத் தேர்தலிலும் குறிப்பிடுவதற்குக் காரணம் என்ன? மீண்டும் வாஜ்பாய் பிரதமர் ஆவார் என்று அன்றைக்குச் சொன்னது போல மீண்டும் மோடி பிரதமர் ஆவார் என மறைமுகமாக ரஜினி சொல்கிறாரா எனத் தெரியவில்லை. 

கடந்த மாதம் 22-ம் தேதி ஆந்திரா அமராவதியில் நடைபெற்ற பி.ஜே.பி. கூட்டத்தில் பேசிய மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, ``காவிரியுடன் கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளை இணைக்கும் திட்டம் தயாராகி விட்டது. பணிகள் விரைவில் தொடங்கும்'' எனச் சொன்னார். இந்தப் பேச்சு வெளியான 25 நாள்களுக்குள், ``தமிழகத்தின் தண்ணீர்ப் பிரச்னையை யார் தீர்ப்பார்கள் என நம்புகிறீர்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள்'' என ரஜினி அறிக்கை வெளியிடுகிறார். இப்படிப் பல விஷயங்கள் முடிச்சுப் போட்டுப் பேசப்படுகின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close