Published:Updated:

‘இடைத்தேர்தல் தொகுதிகளைக் கைப்பற்ற வியூகம்!’ - வேலூரில் அடித்தளமிடும் ஸ்டாலின்

‘இடைத்தேர்தல் தொகுதிகளைக் கைப்பற்ற வியூகம்!’ - வேலூரில் அடித்தளமிடும் ஸ்டாலின்
‘இடைத்தேர்தல் தொகுதிகளைக் கைப்பற்ற வியூகம்!’ - வேலூரில் அடித்தளமிடும் ஸ்டாலின்

வேலூர் மாவட்டத்தில் இடைத்தேர்தலைச் சந்திக்கும் ஆம்பூர், சோளிங்கர் தொகுதிகளில்... 19-ம் தேதி நடைபெறும் தி.மு.க ஊராட்சி சபைக் கூட்டங்களில் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.

வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், ஆம்பூர், சோளிங்கர் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள், இடைத்தேர்தலைச் சந்திக்கிறது. இம்மூன்று தொகுதிகளையும் கைப்பற்ற அ.தி.மு.க-வும், தி.மு.க-வும் பல்வேறு வியூகங்களை அமைத்துவருகின்றன. தி.மு.க-வை பொறுத்தவரை, வரும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களை எதிர்கொள்வதற்காக, தமிழகம் முழுவதும் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. கடந்த மாதம் 28-ம் தேதி, குடியாத்தம் தொகுதி சீவூர் ஊராட்சியில் நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்துகொண்டு, கிராம மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் விடுபட்ட மற்ற இரண்டு தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக ஸ்டாலின், 19-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) வருகிறார். 

இது சம்பந்தமாக, வேலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், ராணிப்பேட்டை எம்.எல்.ஏ-வுமான காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஆம்பூர், சோளிங்கர் சட்டமன்றத் தொகுதிகளில் 19-ம் தேதி நடைபெற உள்ள ஊராட்சி சபை மற்றும் வாக்குச்சாவடி கூட்டங்களில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். காலை 8.30 மணிக்கு, ஆம்பூர் தொகுதி மாதனூர் அகரம்சேரியில் நடைபெறும் ஊராட்சி சபை கூட்டத்தில் ஸ்டாலின் கலந்துகொண்டு, மக்களிடம் குறைகளைக் கேட்கிறார். பிறகு, ஆம்பூரை அடுத்த சோலூர் ஊராட்சியில், காலை 10 மணிக்கு நடைபெறும் வாக்குச்சாவடி முகவர் கூட்டத்தில் பங்கேற்கிறார். இதையடுத்து, சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி கரடிக்குப்பதில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஊராட்சி சபை கூட்டத்தில் பங்கேற்கிறார். அதன்பிறகு, பொன்னப்பந்தாங்கல் ஊராட்சி கூட்ரோட்டில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு முக்கிய ஆலோசனைகளை வழங்குகிறார்’’ என்று அறிக்கையில் அவர் கூறியிருக்கிறார்.