Published:Updated:

நடிகராக இருந்திருந்தால் சீக்கிரமாக விடுதலை கிடைத்திருக்கும் - பேரறிவாளன் குறித்து அற்புதம்மாள் வேதனை!

நடிகராக இருந்திருந்தால் சீக்கிரமாக விடுதலை கிடைத்திருக்கும் - பேரறிவாளன் குறித்து அற்புதம்மாள் வேதனை!
நடிகராக இருந்திருந்தால் சீக்கிரமாக விடுதலை கிடைத்திருக்கும் - பேரறிவாளன் குறித்து அற்புதம்மாள் வேதனை!

பேரறிவாளன் தோற்றத்தில் நடிகர் போல் இருப்பதாகச் சிலர் கூறுகின்றனர். அவர் நடிகராக மட்டும் இருந்திருந்தால் எப்போதோ என் மகன் விடுதலை ஆகி இருப்பார் எனப் பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாள் வேதனையுடன் பேசினார்.

புதுக்கோட்டையில் எழுவர் விடுதலைக்கான கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அற்புதம்மாள் கலந்துகொண்டார். பின்னர் அவர் கூறியதாவது, ``சிறைவாசம் அனுபவித்து வரும் என் மகன் பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு அமைச்சரவை கூட்டத்தில் பரிந்துரைத்து அந்தக் கோப்பினைக் கடந்த 5 மாதங்களுக்கு முன்பே ஆளுநருக்கு அனுப்பி விட்டது. தமிழக அரசு பரிந்துரைக்குப் பிறகும் ஏழு பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. நான் சந்தித்தபோது அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று உத்தரவாதம் அளித்திருந்தார். ஆனால், அதையும் அவர் நிறைவேற்றவில்லை. 

எனவேதான், அவர்களின் நிலையை மக்களிடம் எடுத்துக் கூறி மக்கள் சந்திப்பின் மூலம் மக்களின் ஆதரவு திரட்டி, ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்தால் நிச்சயம் ஏழு பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் தான் மாவட்டம் தோறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகிறேன். பேரறிவாளன் தோற்றத்தில் நடிகர் போல் இருப்பதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், அவர் நடிகராக மட்டும் இருந்திருந்தால் என்றோ விடுதலை செய்யப்பட்டிருப்பார். அதிகாரத்தில் உள்ளவர்கள் யாரும் சட்டத்தை மதிப்பதில்லை. ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் யாருக்கும் எதிரான கருத்துகளை என்னால் கூற முடியாது. ஏனெனில் என் மகன் சிறையில் உள்ளான். என் மகனை விடுதலை செய்ய கையெழுத்திடுங்கள் என்று அனைவரிடத்திலும் கெஞ்ச மட்டுமே என்னால் முடியும்" என்று தெரிவித்தார்.