Published:Updated:

`ராமதாஸ் குடும்பத்துக்கு எதிராகப் பிரசாரம் செய்வோம்!’ - வரிந்து கட்டும் `காடுவெட்டி குரு' வன்னியர் சங்கம்

தமிழகத்தில் 2019 நாடாளுமன்றத் தேர்தல் வியூகம் சூடு பிடித்திருக்கும் நிலையில் முதன் முதலாக அ.தி.மு.க., பா.ம.க கூட்டணி உறுதியானது. பா.ம.க விற்கு 7 நாடாளுமன்றத் தொகுதிகளும் ஒரு மேலவை உறுப்பினரும் உறுதி செய்து ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. அ.தி.மு.க வோடு பா.ம.க கூட்டணி அமைத்தது சமூக வலைதளங்களில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் வீர வன்னியர் பேரவையின் முன்னாள் பொதுச் செயலாளரும், மாவீரன் ஜெ.குரு வன்னியர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான வேங்கை அய்யனார் நம்மிடம் பேசினார்.

`ராமதாஸ் குடும்பத்துக்கு எதிராகப் பிரசாரம் செய்வோம்!’ -  வரிந்து கட்டும் `காடுவெட்டி குரு' வன்னியர் சங்கம்

இதுபற்றி வேங்கை அய்யனார், ``பா.ம.க நிறுவனத் தலைவர் ராமதாஸ் கடல் உள்ளளவும், பார் உள்ளளவும், பைந்தமிழ் உள்ளளவும் தி.மு.க., அ.தி.மு.க போன்ற திராவிடக் கட்சிகளோடு கூட்டணி கிடையாது. பத்திரத்தில் கூட எழுதித் தருகிறேன். என்று மேடைக்கு மேடை முழங்கினார். அவருடைய அருமை புதல்வர் அன்புமணி ராமதாஸ் 8 வழிச் சாலை போராட்டத்திற்கு வந்த போது, ``மானங்கெட்டவர்கள் படிப்பதற்குத் துப்பில்லை. 8 வழிச் சாலையால் மக்களுக்கு வளர்ச்சி இல்லை. எடப்பாடி குடும்பத்திற்குத்தான் வளர்ச்சி. தேர்தலில் இவர்களில் ஒருவருக்குக் கூட டெபாசிட் கிடைக்காது''. என்று வீர வசனம் பேசினார். தற்போது அவர்களோடே கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள்.

மானங்கெட்டவர்களோடு எந்த மானத்தோடு இந்த மானமுள்ளவர்கள் கூட்டணி அமைத்தார்கள் என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். இவர்களின் சுயநலத்திற்காக வன்னியர் சமுதாயத்தை அடமானம் வைத்து விட்டார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி வன்னியர் சமுதாயத்தினருக்குக் கோழிக் கறியும், குவாட்டரும் வாங்கிக் கொடுத்தால் ஓட்டுப் போட்டு விடுவார்கள் என்று கூறியதை அடுத்து அப்பகுதியில் உள்ள வன்னியர் ஊருக்குள் பழனிசாமியை அனுமதிக்கவில்லை. அப்படிப்பட்டவரோடு இவர்கள் கூட்டணி வைத்து வன்னியர்களின் பெயரையே குழி தோண்டி புதைத்துவிட்டார்கள்.

இனி பா.ம.க எந்த முகத்தை வைத்துக்கொண்டு எப்படி 8 வழிச் சாலை, நீட் தேர்வு விலக்கு, காவிரி பிரச்னை, ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்பன் போன்ற பிரச்னைகளைப் பேசுவார்கள். அ.தி.மு.க வோடு பா.ம.க கூட்டணி அமைத்திருப்பது பொருந்தாத கூட்டணி. இந்தக் கூட்டணி அன்புமணி சொன்னதைப் போல டெபாசிட் கூட வாங்காது. தமிழ்நாடு முழுவதும் மாவீரன் ஜெ.குரு வன்னியர் சங்கத்தின் சார்பாக ராமதாஸ் குடும்பத்திற்கு எதிராகப் பிரசாரம் செய்து அந்தக் குடும்ப உறுப்பினர்களைத் தோற்கடிப்போம்'' என்றார்.