Published:Updated:

அ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்வது தற்கொலைக்குச் சமமானது - டி.டி.வி.தினகரன் சாடல்

அ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்வது தற்கொலைக்குச் சமமானது - டி.டி.வி.தினகரன் சாடல்
அ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்வது தற்கொலைக்குச் சமமானது - டி.டி.வி.தினகரன் சாடல்

அ.தி.மு.க,  கூட்டணிக்  கட்சிகளை உறுதிசெய்திருக்கும் வேளையில், சேலத்திற்கு 4 நாள்கள் சுற்றுப்பயணம் வந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டி.டி.வி. தினகரன், பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, ''அம்மா பிறந்தநாள் வரும் நேரத்தில் ''அம்மாவுக்கு நினைவிடம் கட்டக் கூடாது. அவர் ஒரு குற்றவாளி. உயிரோடு இருந்திருந்தால் சிறையில் இருந்திருப்பார்'' என்று சொன்னவரோடு பழனிசாமியும் பன்னீரும் கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள். இது அம்மாவுக்குச் செய்யும் துரோகம். இவர்கள் எல்லோருக்கும் துரோகம் செய்வார்கள்.

பா.ம.க-வைச் சேர்ந்த அன்புமணி, பழனிச்சாமியையும் பன்னீரையும் எப்படியெல்லாம் திட்டி இருக்கிறார். தற்போது கூட்டணி சேர்ந்திருக்கிறார். அவருடைய தொண்டர்கள் எப்படி ஏற்றுக்கொள்ளுவார்கள் என்று தெரியவில்லை. இது பலவீனமான கூட்டணி. அம்மாவின் ஆன்மா நிச்சயம் இவர்களைத் தோற்கடிக்கும். அம்மாவின் ஆட்சி என்று மக்களுக்குச் சொல்லி ஏமாற்றிவிட்டு, அம்மாவுக்குத் துரோகம் செய்தவர்களோடே கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள். 40 தொகுதியிலும் அ.தி.மு.க படுதோல்வி அடையும்.

அம்மா மிகப்பெரிய தலைவர். இரும்புப் பெண்மணி. 69 சதவிகித இடஒதுக்கீடு வாங்கிக்கொடுத்த சமூக நீதி காத்த வீராங்கனை என்று பெரியவர் வீரமணியே பாராட்டியிருக்கிறார். அப்படிப்பட்ட தலைவருக்கு துரோகம் செய்த அ.தி.மு.க-வோடு எந்தக் கட்சி கூட்டணி வைத்தாலும் அது தற்கொலைக்குச் சமமானது. அ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்பவர்கள், தேர்தலுக்குப் பிறகு காணாமல் போய் விடுவார்கள்.

மக்கள் மத்தியில் விமர்சனம் இல்லாத கட்சிகளோடு கூட்டணி வைப்போம். 40 தொகுதியிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமே வெற்றிபெறும். தி.மு.க, கடந்த ஆர்.கே நகர்  இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்தது. அதனால், இவர்களுக்கு மக்கள் ஆதரவு இல்லை. எங்களுக்கே 95 சதவிகித தொண்டர்கள் ஆதரவு இருக்கிறது. மத்தியில் அறுதிப் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காது. அதை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமே நிறைவுசெய்யும்.