Published:Updated:

`ஸ்டாலின் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு?’ - கிராம மக்கள் அதிர்ச்சி

`ஸ்டாலின் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு?’ - கிராம மக்கள் அதிர்ச்சி
`ஸ்டாலின் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு?’ - கிராம மக்கள் அதிர்ச்சி

ஆம்பூர் அருகே நடந்த தி.மு.க ஊராட்சி சபைக் கூட்டத்தில், ஸ்டாலினை பார்ப்பதற்காகப் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். இந்த நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தை ஒட்டிப் பாழடைந்த தரைமட்ட கிணறு இருந்தது. அங்கு, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

வேலூர் மாவட்டம், ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி அகரம்சேரியில் 19-ம் தேதி தி.மு.க ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெற்றது. தென்னந்தோப்புக்குள் இடம் சுத்தம் செய்யப்பட்டு, ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சரியாகக் காலை 8.30 மணிக்கு மு.க.ஸ்டாலின் கலந்துகொள்வார் என்று நேரம் அறிவிக்கப்பட்டிருந்தது. முன்கூட்டியே, அகரம்சேரி மற்றும் வெகு தூரத்தில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமானோரைக் கூட்டம் கூட்டமாக ஆட்டோ, வேன்களில் தி.மு.க-வினர் அழைத்துவந்தனர். காலை 10 மணிக்கு மேல், ஸ்டாலின் நிகழ்ச்சி பகுதிக்கு வந்தார். கிராமப் பெண்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.  இதில், முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது, இந்த சபை நடைபெற்ற இடத்தை ஒட்டிப் பாழடைந்த பெரிய கிணறு உள்ளது. 

நிகழ்ச்சிப் பகுதியில் திரண்டிருந்த கிராம மக்கள், ஸ்டாலினை பார்ப்பதற்காக அங்கும் இங்குமாக முண்டியடித்தனர். சிலர், அந்தக் கிணறு இருந்த பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தனர். அங்கு பாதுகாப்புக்காக, உள்ளூர் போலீஸார் அல்லது கட்சியினர் ஒருவரும் நிறுத்தப்படவில்லை. அசம்பாவிதம் ஏற்படுவதைத் தடுக்க, இதுபோன்ற இடங்களில் பாதுகாப்பை முறைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். அதே நேரத்தில், ஸ்டாலின் புறப்பட்டுச் சென்ற பிறகு, வெகு தொலைவில் இருந்து அழைத்துவரப்பட்ட கிராம மக்களை, மீண்டும் கொண்டு சென்றுவிடாமல் கட்சியினர் திடீரென வாகனங்களுடன் மாயமாகிவிட்டனர். இதனால், அவதியடைந்த கிராம மக்கள் புலம்பிக் கொண்டே தங்கள் கிராமங்களுக்கு நடந்து சென்றனர்.