Published:Updated:

`அனைத்து விக்கெட்டுகளும் விழப்போகிறது!' - அக்ரி கிருஷ்ணமுர்த்தியால் மிரளும் தி.மலை அ.தி.மு.க-வினர்

`அனைத்து விக்கெட்டுகளும் விழப்போகிறது!' - அக்ரி கிருஷ்ணமுர்த்தியால் மிரளும் தி.மலை அ.தி.மு.க-வினர்
`அனைத்து விக்கெட்டுகளும் விழப்போகிறது!' - அக்ரி கிருஷ்ணமுர்த்தியால் மிரளும் தி.மலை அ.தி.மு.க-வினர்

வேளாண்மைத் துறையில் தற்காலிக ஓட்டுநர்களாக ஏழு பேரைத் தேர்வுசெய்வதற்கான உத்தரவை, நேர்மையாக அமல்படுத்த முயற்சி செய்ததால் திருநெல்வேலி மாவட்ட உதவிச் செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமியின் உயிர் ரயில் தண்டவாளங்களுக்கு இறையானது. 2015 பிப்ரவரி 20-ம் தேதி முத்துக்குமாரசாமி, ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டார். அவரின் தற்கொலைக்கு முழுக்க முழுக்க காரணம் அப்போதைய வேளாண்மைத்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமுர்த்தியின் தலையீடுதான் என உளவுத்துறை, அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தகவல் சொன்னது. உடனே அக்ரி கிருஷ்ணமுர்த்தியின் அமைச்சர் பதவியும், திருவண்ணாமலை வடக்கு மாவட்டப் பதவியையும் பறித்ததோடு அ.தி.மு.க கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கினர் ஜெயலலிதா. அதன்பின், அந்த வழக்கில் அக்ரி கிருஷ்ணமுர்த்தி கைது செய்யப்பட்டு 2016 மார்ச் மாதம் அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். 

வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் அக்ரி கிருஷ்ணமுர்த்தியை ஜெயலலிதா கட்சியில் சேர்க்கவே இல்லை. அக்ரியின் அடாவடி சாம்ராஜ்ஜியம் ஒழிந்தது எனத் திருவண்ணாமலை மாவட்ட அ.தி.மு.க-வினர் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால், அந்த மகிழ்ச்சி அதிக நாள்கள் நீடிக்கவில்லை. காரணம் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டி.டி.வி.தினகரனிடம் பேசி கட்சியில் மீண்டும் இணைந்தார். ஆனால், அவருக்குக் கட்சிப் பொறுப்புகள் எதுவும் தரவில்லை. அதன் பிறகு கட்சி இரண்டாக உடைந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவினார் அக்ரி. 2 ஆண்டுகளாகக் கட்சியில் எந்தப் பொறுப்பும் தராத அக்ரிக்கு, 2018 செப்டம்பர் 15-ம் தேதி அ.தி.மு.க விவசாயப் பிரிவு மாநிலச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. அதே செப்டம்பர் 15-ம் தேதி திருவண்ணாமலை நகரமே அதிரும் அளவுக்கு அண்ணா பிறந்த நாளைக் கொண்டாடினார். இந்தப் பதவியே அவர் மீண்டும் அரசியலில் காலுன்ற புத்துணர்வு அளித்தது. இந்த வாய்ப்பைத் தெளிவாக பயன்படுத்திக்கொண்டு அரசியல் வட்டாரமே அதிரும் அளவுக்கு இம்மாதம் 17-ம் தேதி நடந்த தன் மகன் அருள்நேசன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு, முதல்வர் பழனிசாமியை அழைத்துவந்து மெகா மாஸ் காட்டிவிட்டார் அக்ரி கிருஷ்ணமுர்த்தி.

இதுகுறித்து திருவண்ணாமலை அ.தி.மு.க வட்டாரத்தில் கூறுகையில், ``அக்ரி கிருஷ்ணமுர்த்தி அரசியலிலிருந்து இன்னும் காலாவதி ஆகவில்லை, முழு நேர அரசியல்வாதியாகவே இருக்கிறார் என்பதைக் காட்டவே இந்தத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு. முதல் பத்திரிகையை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்துவிட்டுத் திருமண நிகிழ்ச்சிக்கு அவசியம் வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். முதல்வரும் அவசியம் கலந்துகொள்கிறேன் என்று உறுதியளித்ததும், தடல்புடலான ஏற்பாடுகளைச் செய்து முதல்வரே அசந்துபோகும் அளவுக்குத் திருமண நிகழ்ச்சியை ஒரு பொதுக்கூட்டம் போல் நடத்திவிட்டார். தன்னுடைய அரவிந்தர் விவசாயக் கல்லூரி வளாகத்தில், ``முதல்வர் வரும்போது கூட்டம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே கலசப்பாக்கம் தொகுதியில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் இலவசமாகப் பேருந்துகள் அனுப்பி ஆள்களை அழைத்து வரச்செய்தார். 

இந்தத் திருமண வரவேற்புக்கு மட்டும் 2 கோடிக்குமேல் செலவு செய்திருப்பார். இந்தத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கே.சி.வீரமணி, ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், சரோஜா, சேவூர் ராமச்சந்திரன் மற்றும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.பி-க்கள் மைத்ரேயன், மனோஜ்பாண்டியன், சேவல் எழுமலை, வனரோஜா, எம்.எல்.ஏ தூசிமோகன் இன்னும் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். முதல்வர் பழனிசாமி உட்பட அனைவருக்கும் ஸ்பெஷலாக உணவு தயாரிக்கப்பட்டு அனைவரும் சாப்பிட்டுவிட்டுதான் சென்றனர்’’ என்றார்கள்.

மேலும் அவர்கள் கூறுகையில், ``லோக்கல் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கூடாது எனக் கோரிக்கை விடுத்தும் முதல்வர் கலந்துகொண்டார். அதேபோல் லோக்கல் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அதே நாளில் ஆரணியில் 1 கோடி ரூபாய் அளவில் செலவு செய்து பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்தார். அதையும் கேன்சல் செய்தார் முதல்வர். இப்படி இருவரையும் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அக்ரி கிருஷ்ணமுர்த்தி அழைப்புக்கு மறுப்பு தெரிவிக்காமல் முதல்வர் கலந்துகொண்டார் என்பது ஆச்சர்யமாக உள்ளது. இனிமேல் அக்ரி ஆடப்போகும் சதுரங்க ஆட்டத்துக்கு இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியே பிள்ளையார் சுழி. இனி ஆடப்போகும் ஆட்டத்துக்குத் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து விக்கெட்டுகளும் விழப்போகிறது. அக்ரி மட்டுமே ராஜாவாகப்போகிறார். வருகிற எம்.பி தேர்தலில் அக்ரி யாரைக் கைகாட்டுகிறாரோ அவருக்கே சீட் கன்ஃபார்ம்’’ என்கிறனர் அ.தி.மு.க-வினர்.