Published:Updated:

` நீக்கத்துக்கு ஒரு வரியில் விளக்கம் சொல்லலாமா?' - சீமானைச் சாடும் வியனரசு

` நீக்கத்துக்கு ஒரு வரியில் விளக்கம் சொல்லலாமா?' - சீமானைச் சாடும் வியனரசு
` நீக்கத்துக்கு ஒரு வரியில் விளக்கம் சொல்லலாமா?' - சீமானைச் சாடும் வியனரசு

``உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்று தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடி மண்ணிலிருந்து பிரித்து அகற்ற வேண்டும். அந்த இடத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 தியாகிகள் நினைவாக நினைவுச்சின்னம், மணி மண்டபம் எழுப்ப வேண்டும்” என  தமிழர் தேசியக் கொற்றம் கட்சியின் தலைவர் வியனரசு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வியனரசு, ``கடந்த 26 ஆண்டுகால ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அளித்துள்ளது உச்சநீதிமன்றம். மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று தீர்ப்பைத் தந்த உச்சநீதிமன்ற நீதியரசர்களுக்கு  ஒட்டுமொத்த தமிழக மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். வழக்கறிஞர்களின் வாதத் திறமையால் ஸ்டெர்லைட் ஆலையின் பொய் மூட்டைகள் தவிடு பொடியாகி உள்ளது. இந்தத் தீர்ப்பை ஏற்று தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலையைப் பிரித்து தூத்துக்குடி மண்ணிலிருந்து அகற்றிட வேண்டும்.

அந்த இடத்தில் கடந்த மே 22-ல் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 தியாகிகளின் நினைவாக நினைவுத் தூண், மணி மண்டபம் கட்ட வேண்டும். அத்துடன் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடும், இயல்பு வாழ்க்கை வாழ முடியாமல் ஊனம் அடைந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும். இச்சம்பவம் தொடர்பாக அப்பாவி மக்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து பொய் வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், மக்கள் இந்த அரசு மீது நம்பிக்கை கொள்வார்கள். இல்லாவிட்டால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. அரசுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என்றார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான குற்றச்சாட்டு குறித்த கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய அவர், ``ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இரண்டாம் கட்ட போராட்டத்தை முதலில் தொடங்கியது நாம்தமிழர் கட்சிதான். துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நான் உட்பட கட்சியைச் சேர்ந்த 13 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை. ஆனால், கட்சி சார்பில் எங்களைப் பிணையில் எடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சீமானும் எங்களைக் கண்டு கொள்ளவில்லை. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஆய்வு செய்ய பசுமைத் தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட குழுவைச் சந்தித்து மனு அளிக்க நான் கேட்டுக் கொண்டும், என்னுடன் கட்சியினரை அனுப்பி வைக்காதது ஏன்.

ஏதாவது ஒரு பிரச்னையைக் கையில் எடுத்துச் சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பாக கட்சி சார்பில் மாதம் ஒரு போராட்டம் நடத்தும் சீமான், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சென்னையில் ஒரு போராட்டம்கூட நடத்தவில்லையே ஏன். மக்கள் புரட்சி எனச் சொல்லிவிட்டு போரட்டத்துக்கு நேரடியாக வராமல் அவர் ஓடி ஒளிந்ததால், ஒருவேளை ஸ்டெர்லைட் ஆலையுடன் சமரசம் ஆகிவிட்டாரா என எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரது இந்தச் செயல் அவர் ஸ்டெர்லைட் ஆலையிடம் பணம் பெற்றதாகவே மக்களும் நினைக்கிறார்கள்.

இதற்கெல்லாம் பதில் கேட்டுதான் அவருக்கு ஒரு கடிதம் எழுப்பினேன். ஆனால், என்னை அவர் நேரில் அழைத்து விசாரணை செய்யாமல், அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து என்னை நீக்குகிறேன் என ஒற்றை வரியில் கூறி நீக்கியது எந்தவிதத்தில் நியாயம். நீக்கியதற்கான காரணம் என்ன என்பதை அவர் ஏன் சொல்லவில்லை. தற்போது வரை மெளனம் காப்பது ஏன்” என்றார்.