Published:Updated:

குரங்கா... பூமாலையா? - அன்புமணியை கலாய்த்த கனிமொழி

குரங்கா... பூமாலையா? - அன்புமணியை கலாய்த்த கனிமொழி
குரங்கா... பூமாலையா? - அன்புமணியை கலாய்த்த கனிமொழி

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.  கூட்டணி குறித்த இறுதிப் பங்கீட்டில் அனைத்துக்  கட்சிகளும் தீவிரம்காட்டிவருகின்றனர்.  தமிழகத்தில் முதலாவதாக அ.தி.மு.க கூட்டணி தொகுதிப் பங்கீட்டை கிட்டத்தட்ட முடித்துவிட்டது. பா.ம.க 7 தொகுதிகள், பா.ஜ.க-வுக்கு 5 தொகுதிகள் என அ.தி.மு.க ஒதுக்கீடு செய்துள்ளது. 

இவர்களை அடுத்து தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு இன்று மாலை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த  காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழக பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக் இன்று மாலை தமிழகம் வர உள்ளார்.

இந்நிலையில், இன்று காலை சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தி.மு.க எம்.பி கனிமொழி, “  இன்று மாலை 7 மணிக்கு காங்கிரஸின் தமிழகப் பொறுப்பாளர்களான குமுல் வாஸ்னிக் மற்றும் வேணுகோபால் ஆகியோர் தமிழகம் வர உள்ளனர். அவர்கள் ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிவிப்பார். 

பிற தமிழகக் கட்சிகளுடனான கூட்டணிகுறித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பிற கட்சியினருடன் ஆலோசனை நடத்தி, அந்த அறிவிப்பும் விரைவில் வரும்.  அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க ஆகிய கூட்டணி, எண்ணிக்கையில் மட்டுமே வலுவாக உள்ளது.  தமிழக மக்கள் பா.ஜ.க-வை எப்படிப் பார்க்கிறார்கள் என அனைவருக்கும் தெரியும். முன்னதாக பா.ம.க, அ.தி.மு.க குறித்து எவ்வளவு கடுமையான மற்றும் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சித்தது என பலருக்கு நினைவிருக்கும். அ.தி.மு.க-விடம்  உள்ள அரசு 'குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போல’  என அன்புமணி கூறினார். தற்போது அவர்கள் குரங்கா, இல்லை பூமாலையா என அன்புமணியே தீர்மானிக்கட்டும். 

 நான் நெல்லை சென்றிருந்தபோது, அந்த ஊர் மக்கள் 49 பேர் மலேசியாவில் சிக்கி, உணவு தண்ணீர் இன்றி காட்டில் வசித்து வருவதாகவும், அவர்களை மீட்டுத் தர வேண்டும் என்றும் ஊர் மக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில், மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை தொடர்புகொண்டு பேசி, அவர்களை மீட்க உதவி செய்தேன். இன்று விமான நிலையம் வந்த அவர்களிடம் அரசின் உதவியால்தான் அவர்கள் மீட்டப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். எதையும் செய்யாமல், செய்ததாகப் பெயரை மட்டும் வாங்கிச்செல்ல வேண்டும் என அவர்கள் நினைத்தால், பெயர்தானே போகட்டும். வாங்கிச் செல்லட்டும் எனக்கு அதில் ஒன்றும் பிரச்னை இல்லை’ எனத் தெரிவித்தார்.