`ஒட்டுமொத்த இந்தியாவும் மோடி ஆட்சிக்கு வரணும்னு விரும்புது!’- பொன்.ராதாகிருஷ்ணன் | People wishes Modi as PM for the second term, says pon. radhakrishnan

வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (20/02/2019)

கடைசி தொடர்பு:16:50 (20/02/2019)

`ஒட்டுமொத்த இந்தியாவும் மோடி ஆட்சிக்கு வரணும்னு விரும்புது!’- பொன்.ராதாகிருஷ்ணன்

` வரும் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி அமைய வேண்டும் என ஒட்டுமொத்த தமிழகமும் இந்தியாவும் விரும்புகிறது’ என மத்திய இணை அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

கும்பகோணம் திருபுவனத்தில் கொலைசெய்யப்பட்ட ராமலிங்கத்தின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவதற்காக வந்த மத்திய இணை அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன், ராமலிங்கத்தின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, `தமிழகத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதல் பல இடங்களில் பலவிதமாக நடந்துள்ளன. தனது பகுதி மக்களை மதம் மாற்றும் சிந்தனையோடு செயல்பட்டவர்களைத் தட்டிக்கேட்டதற்காக, கடந்த 5-ம் தேதி பயங்கரவாதிகளால்  ராமலிங்கம் கொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. ராமலிங்கம் பாரதிய ஜனதா கட்சியோ அல்லது இந்து அமைப்பைச் சார்ந்தவரோ அல்ல, எல்லா மதத்தினருக்கும் அவரவர் மதத்தின்மீது நம்பிக்கை உண்டு என்கிற நிலையில், தனது பகுதி மக்கள் எந்தவிதத்திலும் தவறாக வழிநடத்தக் கூடாது என்பதற்காக அதைத் தடுத்துள்ளார்.

தமிழக அரசு, குற்றவாளிகள்மீது எந்தப் பாகுபாடுமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த ராமலிங்கத்தின் குடும்பத்திற்கு நிவாரணமும் உரிய பாதுகாப்பும் அளிக்கப்படுவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கொடுக்க வேண்டும்.   40 நாடாளுமன்றத் தொகுதியிலும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில்  போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள். தேர்தலில் வெற்றிபெறுபவர்களுக்கு அமைச்சர் பதவிகுறித்து பிரதமர் முடிவெடுப்பார். பி.ஜே.பி தலைமையில் அமைந்துள்ள கூட்டணி, தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் மிகப்பெரிய சாதகமாக அமையும்.பிரதமர் நரேந்திர மோடியின் ஐந்தாண்டுக் கால ஆட்சியில், நாட்டின் அனைத்து மாநிலங்களும் வளர்ச்சி,  சமூகநீதி, விவசாயம், இளைஞர்கள் முன்னேற்றம் என ஒட்டுமொத்தமாக முன்னேறியதை வைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோம். 

வைகோ, சென்ற தேர்தலில் எங்கள் கூட்டணியில் இருந்தார். தமிழகப் பிரச்னைகள்குறித்து முன்னெடுத்துப் பேசியவர். தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி தமிழகத்திற்குச் செய்த துரோகத்தைப் பற்றி என்னைவிட அதிகமாகத் தெரிந்தவர் அவர்தான். ஒவ்வொரு கட்சியின் சிந்தயும் வேறுபட்டிருக்கலாம்.ஆனால், தற்போது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் யாருடைய ஆட்சி ஏற்பட வேண்டும் என்பது தான் குறிக்கோள். இந்த நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி அமைய வேண்டும் என ஒட்டுமொத்த தமிழகமும் இந்தியாவும் விரும்புகிறது என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close