பிரீமியம் ஸ்டோரி

க்களுக்கான திட்டங்களை வகுப்பதில் அரசியல் கட்சியினர் விதவிதமாக யோசிக்கிறார்களோ இல்லையோ, பணம் சம்பாதிப்பதில் மட்டும் விதவிதமாக, வித்தியாசமாக, விநோதமாக யோசிக்கிறார்கள்.

அரசியல் கட்சிகள் பெரிய நிறுவனங்களிடம் கட்சி நிதி, தேர்தல் நிதி வாங்குவது வழக்கம்தான். ஆனால் ‘ஒரு சதவிகிதத்துக்கும் மேல் வாக்குவங்கி வைத்துள்ள கட்சிகளுக்கு ‘தேர்தல் நிதிப் பத்திரம்’ என்ற பெயரில் யாரும் நன்கொடை வழங்கலாம். இதுகுறித்துத் தேர்தல் ஆணையத்திடம்கூடத் தெரிவிக்க வேண்டியதில்லை’ என்று சட்டம் கொண்டுவந்து, அனைத்துக் கட்சிகளும் ‘ஒருமனதாக’ ஆதரித்து, சட்டத்தை நிறைவேற்றிவிட்டார்கள். மற்ற விஷயங்களிலெல்லாம் எதிரும் புதிருமாக நிற்கும் கட்சிகள், இந்த விஷயத்தில் மட்டும் கைகோக்கின்றன.

இதுவும் ஊழல்தான்!‘தேர்தல் நிதிப் பத்திரம்’ என்று ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’வில் சட்டபூர்வமாகவே விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஆயிரம் ரூபாய் தொடங்கி, ஒரு கோடி ரூபாய் வரையிலான இந்தப் பத்திரங்களை யார் வேண்டுமானாலும் வாங்கி, எந்த அரசியல் கட்சிக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். யார் வாங்கினார்கள், யாரிடம் கொடுத்தார்கள் என்பது வங்கிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.  ‘நன்கொடை விஷயத்தில் வெளிப்படைத் தன்மை தேவை’ என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்திருக்கும் வழக்கு, தற்போது இந்த விஷயங்களை விவாத மேடைக்குக் கொண்டு வந்துள்ளது. ‘அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் மே 30-க்குள் அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

பெருநிறுவனங்கள் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று அனைத்துக் கட்சிகளுக்கும் நிதியை அள்ளிக்கொடுக்கின்றன. இதனால் அந்த நிறுவனங்கள் சுற்றுச்சூழல் உட்பட பல விஷயங்களில் விதிகளைக் கடைப்பிடிக்காதபோது ஆளுங்கட்சியும் கண்டுகொள்வதில்லை; இதற்கு எதிராகப் போராட்டங்கள் வெடிக்கும்போது எதிர்க்கட்சிகளும் மேலோட்டமான சில போராட்டங்கள் செய்துவிட்டு நீர்த்துப்போகச் செய்கின்றனர். அரசு ஒப்பந்தப்பணிகளுக்காகப் பணம் பெறுவதும் வாக்களிக்கப் பணம் கொடுப்பதும் மட்டும் ஊழல் இல்லை; ரகசியமாக நிதி பெற்று மக்களிடமிருந்து மறைப்பதும் ஊழல்தான்.

மக்களுக்காக உழைப்பதாகச் சொல்லும் அரசியல்கட்சிகள் தங்கள் நிதி விவரங்களை மட்டும் ஏன் மக்களிடமிருந்து மறைக்கவேண்டும்? மக்களிடமிருந்து மறைப்பதற்கு அது ஒன்றும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் இல்லையே? உச்சநீதிமன்றத்திடம் நிதி தொடர்பான விஷயங்களைச் சமர்ப்பிப்பதைப்போலவே எல்லா அரசியல் கட்சிகளும், மக்களிடமும் வெளிப்படையாக விவரங்களைத் தெரிவிக்கவேண்டும். மக்களை நம்பாத அரசியல்கட்சிகளை மக்கள் மட்டும் நம்புவார்களா என்ன?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு