Published:Updated:

தி.மு.க. தேர்தலில் வாக்கு பெட்டி உடைப்பு: கருணாநிதியின் ஊரில் அட்டகாசம்

தி.மு.க. தேர்தலில் வாக்கு பெட்டி உடைப்பு: கருணாநிதியின் ஊரில் அட்டகாசம்
தி.மு.க. தேர்தலில் வாக்கு பெட்டி உடைப்பு: கருணாநிதியின் ஊரில் அட்டகாசம்

புதுக்கோட்டை: சட்டமன்ற தேர்தலை காட்டிலும், தி.மு.க. உட்கட்சி தேர்தல் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும், தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்த திருவாரூர் மாவட்டத்தில்தான் இந்த கூத்து.

முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் அழகு திருநாவுக்கரசை எம்.எல்.ஏ. சீட்டு வாங்கி தருவதாக கூறிதான் டி.ஆர்.பாலு தி.மு.க.வுக்கு அழைத்து வந்தார். ஆனால், தனது மகனான டி.ஆர்.பி.ராஜாவுக்கு மன்னார்குடி தொகுதியில் எம்.எல்.ஏ. சீட் வாங்கியதால், அழகு திருநாவுக்கரசை மாவட்ட செயலாளர் ஆக்குகிறேன் என உத்திரவாதம் கொடுத்து தேர்தல் வேலையை பார்க்கச் செய்தார் டி.ஆர்.பாலு. அதை நம்பி அழகு திருநாவுக்கரசும் டி.ஆர்.பி.ராஜாவை ஜெயிக்க வைக்க தன்னால் ஆன வேலைகளை செய்து கொடுத்தார்.

இது ஒருபுறம் இருக்க, இப்போது தற்போதைய மாவட்ட செயலாளரான கலைவாணனின் வேட்பாளர்களை எதிர்த்து மன்னார்குடியில் தனது ஆதரவாளரான வேட்பாளர்களை களம் இறக்கியிருக்கிறார் டி.ஆர்.பாலு. இந்த நிலையில் இன்று தேர்தல் நடந்திருக்கிறது. இதில் மூன்று வார்டுகளில் டி.ஆர்.பாலுவின் வேட்பாளர்கள் ஜெயிக்கும் சூழ்நிலை ஏற்பட அந்த வார்டு தேர்தல் பெட்டியை கலைவாணன் தரப்பு உடைத்திருக்கிறார்கள்.

இதனால் மூன்று வார்டுகளிலும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிலவரப்படி மொத்தமுள்ள 33 வார்டுகளில் 16 வார்டுகள் டி.ஆர்.பாலு ஆதரவாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்களாம். கலைவாணன் ஆதரவு வேட்பாளர்கள் 14 வார்டுகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். தேர்தல் நிறுத்தி வைக்கபொபட்டுள்ள மூன்று வார்டுகளிலும் கலைவாணன் ஆட்கள் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

எனவே மன்னார்குடியில் பதட்டம் நிலவுகிறது.

இது போன்று தஞ்சாவூர் மாவட்டத்திலும், மாவட்ட செயலாளரான பழனி மாணிக்கத்தை எதிர்த்து அரசியல் செய்வதால் அவரும் டி.ஆர்.பாலுவுக்கு மறைமுக எதிரியானார். இதனால், கலைவாணனோடு பழனி மாணிக்கமும் கைகோர்க்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

-வீ.மாணிக்கவாசகம்