Published:Updated:

ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாடுபவர்கள் அவர் இறந்த நாளைக் கூற முடியுமா? - கமல்ஹாசன் கேள்வி

ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாடுபவர்கள் அவர் இறந்த நாளைக் கூற முடியுமா? - கமல்ஹாசன் கேள்வி
ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாடுபவர்கள் அவர் இறந்த நாளைக் கூற முடியுமா? - கமல்ஹாசன் கேள்வி

மக்கள் நீதி மய்யத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டார்.

`யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று தனது உரையைத் துவங்கிய கமல்ஹாசன், ``இரண்டாம் ஆண்டு துவக்க தினத்தைத் திருவாரூரில் ஏன் துவங்கியுள்ளேன் என நீங்கள் கேட்கலாம் ஏனென்றால் பழம்பெரும் கலைஞர்களைத் தமிழகத்துக்கு கொடுத்தது திருவாரூர் தான். திருவாரூர் குடும்ப அரசியலை, வாரிசு அரசியலைத் தமிழகத்துக்கு கொடுத்துள்ளது. அதை மாற்றுவதற்காகவே மக்கள் நீதி மையம் திருவாரூரில் மையம் கொண்டுள்ளது. நானும் அதை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகவே திருவாரூரில் இரண்டாம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தை நடத்துகிறேன். குடும்ப அரசியலை வாரிசு அரசியலை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் தமிழக மக்களுக்கும் எனக்கும் உள்ளது. விரைவில் குடும்ப அரசியல் முடிவுக்கு வரும்.

நானும் குடும்ப அரசியல்தான் செய்யப்போகிறேன் எனது குடும்பத்தில் 8 கோடி பேர் உள்ளனர் அவர்கள்தான் எனது குடும்பம் இதுதான் எனது குடும்ப அரசியல். எம்.ஜி.ஆர் போட்ட இலையை இப்போது உள்ளவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதையும் இரண்டாகப் பிரித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதாவுக்குப் பிறந்தநாள் கொண்டாட உள்ளவர்களால் ஜெயலலிதா இறந்த நாளைக் கூற முடியுமா...? எவ்வளவு பெரிய மரணம் எவ்வளவு பெரிய துரோகம் செய்திருக்கிறார்கள்'' எனக் கேள்வி எழுப்பினார். மேலும், ``இந்தப் பகுதிகளில் நான் காலையிலிருந்து சுற்றி வருகிறேன். கஜா புயல் அடித்து எவ்வளவு நாள் ஆகுது  இதுவரை தென்னை மரங்கள் அரசு சார்பில் இருந்து சரியாக அகற்றப்படவில்லை. ஆனால், ஒரே ஒரு மரம் மட்டும் அரசால் சரியாக நடப்பட்டுள்ளது. அது மின்சாரம் செல்லும் எலெக்ட்ரிக்கல் மரம் மட்டுமே. எந்தப் பக்கம் சென்றாலும் தென்னை மரங்கள் அப்படி அப்படியே கிடக்கின்றன. இதைச் சரி செய்ய இதுவரை தமிழக அரசு முன்வரவில்லை.

கஜா புயலின்போது மக்களுக்கு அவசர உதவிகளுக்கு இல்லாத பணம் பொங்கல் வந்தவுடன் எப்படி வந்தது. இதுபோல் அதிகமாகக் கேள்விகள் கேட்டால் வருமானவரித் துறை சோதனை வருமென மிரட்டுவார்கள். முடிந்தால் மிரட்டிப் பாருங்கள். தமிழகம் என்னுடைய வீடு. தமிழக மக்களுக்கு ஒன்றும் தெரியாது என நினைத்து தான இவ்வளவு வெளிப்படையா திருடிட்டு இருக்கீங்க. இந்திய நாட்டின் பிரதமரை தேர்வு செய்வதில் பெரும்பங்கு தமிழக மக்களுக்கு உள்ளது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

ட்விட்டரில் அரசியல் செய்ய முடியாது. அது செல்லவும் செல்லாது. ஓட்டுச்சாவடி செல்லும்போது நாட்டை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள். ஓட்டுப் போடச் செல்லும்போது உங்களுடைய எண்ணங்களை மாற்றலாம். ஆனால், மாறிவிடாதீர்கள் என்னை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். நான் உங்களுடைய சொத்து. நீங்கள் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என நினைக்கிறீர்களோ அப்படியே பயன்படுத்திக் கொள்ளுங்கள். மற்ற கட்சிகளைப்போல் குதிரை வியாபாரம் செய்து மக்கள் நீதி மய்யம் கட்சி நடத்தாது. நீங்கள்தான் முதலாளி. நான் உட்பட அனைவரும் உங்களுக்கு வேலைக்காரர்கள் தான். கட்சித் தலைமையைத் தேடாதீர்கள் நீங்கள்தான் தலைவர்கள்.

நான் இதுவரை அரசியலுக்கு வராமல் இருந்ததற்கு என்ன காரணம் சொல்வது என எனக்குத் தெரியவில்லை. கடமை தவறி விட்டேன் என்பதைத் தவிர வேறு ஏதும் என்னால் கூறமுடியவில்லை. இனி எஞ்சிய எனது வாழ்நாள்கள் உங்களுக்குச் சொந்தம். சிலர் நீங்கள் முழு நேர அரசியல்வாதி இல்லை எனச் சொல்கிறார்கள். ஆம் அரசியல் என் கடமை. சினிமா என் தொழில். எனது கொள்கை மக்கள் நலன் நீதி ஒன்றிலேயே உள்ளது. எங்களுடைய தீர்மானம் டெல்டா பகுதியைப் பசுமை வேளாண்மைப் பகுதியாக மாற்ற வேண்டும் எனவும் அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். விவசாய முறையை மாற்ற வேண்டும் நீரைச் சேமிக்க திட்டமிட வேண்டும்" எனக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.